settings icon
share icon
கேள்வி

கடைசிக்காலங்களின் தீர்க்கதரிசனத்தின்படி என்ன சம்பவிக்கப்போகின்றது?

பதில்


கடைசிகாலங்களைக் குறித்து சொல்லுவதற்கு வேதாகமத்தில் நிறைய காரியங்கள் உள்ளது. வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்திலுமே கடைசி காலங்களைக் குறித்த தீர்க்தரிசனம் உள்ளது. இந்த எல்லாத் தீர்க்தரிசனங்களையும் எடுத்து அவைகளை ஒருங்கிணைப்பது என்பது கடினமாக இருக்கலாம். கடைசிக்காலங்களில் என்ன சம்பவிக்கும் என்பதைக்குறித்து வேதாகமம் எடுத்துரைக்கும் ஒரு சுருக்கமான தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது இரகசிய வருகை என்கிற ஒரு சம்பவத்தின் மூலமாக கிறிஸ்து மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளையும் இந்த பூமியிலிருந்து எடுத்துக்கொள்வார் (1 தெசலோனிக்கியர் 4:13-18; 1 கொரிந்தியர்15:51-54). கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக, இந்த விசுவாசிகளுக்கு தாங்கள் பூமியில் இருந்தபோது அவர்கள் செய்த நற்கிரியைகளுக்கும் உண்மையுள்ள ஊழியத்திற்கும் தக்கதாக வெகுமதிகள் அளிக்கப்படும் அல்லது நற்கிரியைகள் செய்வதிலும் கீழ்ப்படிதலிலும் குறைவுள்ளவர்களாக இருப்பவர்கள் தங்கள் வெகுமதிகளை இழக்கநேரிடும் ஆனாலும் நித்தியஜீவனை இழக்கமாட்டார்கள் (1 கொரிந்தியர் 3:11-15; 2 கொரிந்தியர் 5:10).

எதிர்க்கிறிஸ்து அதிகாரத்திற்கு வந்து இஸ்ரவேலரோடு ஏழு வருடங்களுக்கு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அதிலே கையெழுத்திடுவான் (தானியேல் 9:27). இந்த ஏழு வருட காலமே "உபத்திரவக்காலம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த உபத்திரவ காலத்தின்போது கொடுமையான யுத்தங்களும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், இயற்கை சீற்றங்களும் ஏற்படும். தேவன் பாவம், தீமை மற்றும் பொல்லாப்பிற்கு விரோதமாக தன்னுடைய கோபாக்கினையை ஊற்றுவார். இந்த உபத்திரவக் காலம் கடைசி வெளிப்பாட்டின் நான்கு குதிரைகள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள் மற்றும் தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த ஏழு பொற்கலசங்களும் உள்ளடங்கும்.

உபத்திரவ காலக்கட்ட ஏழு வருடங்களின் நடுவில் எதிர்க்கிறிஸ்து தான் இஸ்ரவேலர்களோடு ஏற்படுத்தின சமாதான உடன்படிக்கையை மீறி அதை உடைத்து இஸ்ரேலோடு யுத்தம் பண்ணுவான். எதிர்க்கிறிஸ்து ‘‘பாழாக்கும் அறுவெறுப்பை’’ உண்டாக்குவான், தன்னுடைய சுரூபத்தை உண்டாக்கி அதனை யாவரும் ஆராதிக்கும்படி, உபத்திரவ காலத்தில் மீண்டும் கட்டப்படப்போகிற எருசலேமின் தேவாலயத்தில் வைப்பான் (தானியேல் 9:27; 2 தெசலோனேக்கியர் 2:3-10). உபத்திரவ காலத்தின் இரண்டாவது பாதி "மகா உபத்திரவக்காலம்" (வெளி. 7:14) மற்றும் "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்று அறியப்படுகிறது (எரேமியா 30:7).

ஏழுவருட உபத்திரவ காலத்தின் முடிவில், எதிர்க்கிறிஸ்து எருசலேம் மீது ஒரு கடைசித் தாக்குதலை நடத்துவான், அது அர்மெகெதோன் யுத்தத்தில் முடியும். இயேசு கிறிஸ்து திரும்ப வந்து எதிர்க்கிறிஸ்துவையும் அவனுடைய சேனையையும் அழித்து, அவனையும் கள்ளத்தீர்க்கதரிசியையும் அக்கினிக் கடலிலே உயிரோடு தள்ளுவார் (வெளி. 19:11-21).

பிறகு கிறிஸ்து ஆயிரம் வருடமளவும் சாத்தானை சங்கிலியால் கட்டி அடியில்லாக்குழி என்று அறியப்படுகிற பாதாளத்தில் அவனைப்போடுவார். அதன்பிறகு அந்த ஆயிரம் வருடமளவும் இந்த பூமியில் ராஜ்யத்தை ஸ்தாபித்து அரசாளுவார் (வெளி. 20:1-6). அந்த ஆயிரவருட அரசாட்சியின் முடிவில், சாத்தான் விடுவிக்கப்படுவான், மறுபடியும் அவன் தோற்கடிக்கப்பட்டு அக்கினி கடலிலே நித்தியத்திற்கும் தள்ளப்படுவான். (வெளி. 20:7-10).

பிறகு கிறிஸ்து எல்லா அவிசுவாசிகளையும் வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பில் நியாயந்தீர்த்து அவர்கள் யாவரையும் அக்கினிக் கடலிலே தள்ளுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 20:10-15). பிறகு கிறிஸ்துவானவர் விசுவாசிகளுக்கு நித்தியமாக தங்குமிடமான புதிய வானம், புதிய பூமி, மற்றும் புதிய எருசலேமை உருவாக்குவார். அதில் பாவம், துயரம் மற்றும் மரணம் இருப்பதில்லை (வெளி. 21-22).

English



முகப்பு பக்கம்

கடைசிக்காலங்களின் தீர்க்கதரிசனத்தின்படி என்ன சம்பவிக்கப்போகின்றது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries