settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவன் சுற்றுச்சூழல்வாதத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்?

பதில்


சுற்றுச்சூழலைக் குறித்த வேதாகமப் பார்வைக்கும் "சுற்றுச்சூழல் வாதம்" எனப்படும் அரசியல் இயக்கத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது சுற்றுச்சூழல் பற்றிய ஒரு கிறிஸ்தவனின் பார்வையை வடிவமைக்கும். பூமியும் அதில் உள்ள அனைத்தும் மனிதன் ஆளுவதற்கும் அடக்குவதற்கும் தேவனால் கொடுக்கப்பட்டது என்று வேதாகமம் தெளிவாக உள்ளது. "பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்" (ஆதியாகமம் 1:28). அவர்கள் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டதால், தேவன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எல்லா உயிரினங்களுக்கிடையில் ஒரு சிறப்பு இடத்தைக் கொடுத்தார், மேலும் பூமியின் மீது உக்கிராணத்துவத்தை ஏற்று நடத்தும்படி கட்டளையிட்டார் (ஆதியாகமம் 1:26-28; சங்கீதம் 8:6-8). உக்கிராணத்துவம் என்பது கவனித்துக்கொள்வதைக் குறிக்கிறது, துஷ்பிரயோகம் அல்ல. தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் வளங்களை நாம் புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டும், அவற்றைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அனைத்து விடாமுயற்சியையும் பயன்படுத்துகிறோம். இது பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது, அங்கு வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் ஆறு ஆண்டுகளுக்கு விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார், பின்னர் ஏழாவது ஆண்டு மண்ணின் ஊட்டச்சத்துக்களை நிரப்பவும், நிலத்தை ஓய்வெடுக்கவும், எதிர்காலத்தில் அவருடைய ஜனங்கள் தொடர்ந்து பயன்பெறுவதை உறுதிச் செய்யவும் வேண்டும் என்று கட்டளையிட்டார் (யாத்திராகமம் 23:10-11; லேவியராகமம் 25:1-7).

பராமரிப்பாளர்களின் பங்கிற்கு கூடுதலாக, சுற்றுச்சூழலின் செயல்பாடு மற்றும் அழகை நாம் பாராட்ட வேண்டும். அவரது நம்பமுடியாத கிருபையிலும் வல்லமையிலும், ஏதேன் தோட்டத்திலிருந்து இந்த கிரகத்தில் வாழ்ந்த பில்லியன் கணக்கான ஜனங்களுக்கு உணவளிக்க, உடை மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்தையும் தேவன் இந்த கிரகத்தில் வைத்துள்ளார். நமது தேவைகளுக்காக அவர் வழங்கிய அனைத்து வளங்களும் புதுப்பிக்கத்தக்கவை, மேலும் அந்த வளங்களை நிலைநிறுத்தவும் நிரப்பவும் தேவையான சூரிய ஒளியையும் மழையையும் அவர் தொடர்ந்து வழங்குகிறார். இது போதாது என்பது போல, அவர் நமது அழகியல் உணர்வைக் கவரும் வண்ணம் மற்றும் இயற்கை அழகுடன் கிரகத்தை அலங்கரித்துள்ளார் மற்றும் நம் ஆத்துமாவை ஆச்சரியத்தில் சிலிர்க்கப்பண்ணுகிறார். எண்ணற்ற வகையான பூக்கள், அயல்நாட்டுப் பறவைகள் மற்றும் பிற அழகிய தோற்றங்களை அவர் நமக்கு அருளுகிறார்.

அதே நேரத்தில், நாம் வசிக்கும் பூமி ஒரு நிரந்தர கிரகம் அல்ல, அது எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சுற்றுச்சூழல் இயக்கம் கிரகத்தை என்றென்றும் பாதுகாக்க முயற்சிக்கிறது, இது தேவனுடைய திட்டம் அல்ல என்பதை நாம் அறிவோம். 2 பேதுரு 3:10ல், யுகத்தின் முடிவில், பூமியும் அவர் படைத்த அனைத்தும் அழிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்: "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்" (NKJV). பௌதீகமான, இந்த இயற்கையான பூமி அதன் தற்போதைய வடிவத்தில், முழு பிரபஞ்சத்துடன், அழிக்கப்படும் மற்றும் தேவன் ஒரு "புதிய வானத்தையும் புதிய பூமியையும்" உருவாக்குவார் (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1).

ஆகவே, பூமியை ஆயிரக்கணக்கில் அல்லது மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாக்க முயற்சிப்பதை விட, அது நீடிக்கும் வரை, அது தேவனுடைய இறையாண்மை திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் சேவை செய்யும் வரை நாம் அதன் நல்ல உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவன் சுற்றுச்சூழல்வாதத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries