settings icon
share icon
கேள்வி

எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்?

பதில்


வாழ்கையின் ஏதோ சில வேளைகளில் மற்றும் நிலைகளில், எல்லோரும் மற்றவர்களால் புண்படுத்தப்பட்டு, வருத்தப்படுத்தப்பட்டு, மற்றும் தவறாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு இவைகள் நேரிடும்போது அவர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? வேதாகமத்தின்படி நாம் பிறரை மன்னிக்க வேண்டும். எபேசியர் 4:32 சொல்லுகிறது, “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்”. இதேக் காரியத்தை கொலோசியர் 3:13ம் எடுத்துரைக்கிறது, “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” தேவன் நம்மை மன்னித்தது போலவே நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று இவ்விரண்டு வேதப்பகுதிகளும் சொல்லுகிறது. ஏன் நாம் மன்னிக்க வேண்டும்? நாம் மன்னிக்கப்பட்டவர்கள் அதனால் நாம் மன்னிக்க வேண்டும்! நாம் பிறரை மன்னிக்கின்ற செயல் தேவன் நம்மை நமக்கு மன்னித்ததை வெளிப்படுத்தவேண்டும்.

நமக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை மன்னிக்கவேண்டுமானால், நாம் முதலாவது தேவனுடைய மன்னிப்பைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான நிபந்தனைகளுமன்றி தேவன் வெறுமனே எல்லாரையும் தானாக முன்வந்து மன்னிப்பது கிடையாது – அவர் அப்படி செய்வாரானால், வெளி. 20:14-15ல் கூறப்பட்டுள்ள அக்கினிக்கடலின் அவசியம் இல்லாமற்போகும். மன்னிப்பு என்றால் என்ன என்பதை முறையாக அறிந்துகொண்ட காரியம், பாவியினுடைய மனந்திரும்புதலும் தேவனுடைய அன்பு மற்றும் கிருபையும் அதனுள் அடங்கியிருப்பதை தெரிவிக்கிறது. அன்பும் கிருபையும் எப்பொழுதும் இருக்கிறது ஆனால் மனந்திரும்புதல் தான் இல்லாமற்ப்போகிறது. அதற்காக, வேதாகமம் நம்மை ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று சொல்லுகிற விஷயத்தில் அவர்களுடைய பாவங்களை கண்டுகொள்ளாமல் போகிறோம் என்றர்த்தமல்ல. அதன் அர்த்தம், பாவத்திலிருந்து மனந்திரும்பினவர்களுக்கு, மகிழ்ச்சியோடும், கிருபையோடும், அன்போடும் நாம் மன்னிப்பை வழங்குகிறோம் என்பதாகும். நாம் பிறரை மன்னிப்பதற்கான வாய்ப்பு வரும்போது அவர்களை மன்னிக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஏழுதரமாத்திரம் அல்ல, “ஏழெழுபதுதரமட்டும்” மன்னிக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும் (மத்தேயு 18:22). நம்மிடத்தில் மன்னிப்புக்கேட்கிற ஒருவரை உண்மையாக மன்னிக்காமல் இருப்பது நமக்குள் இருக்கும் எருச்சல், கசப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகிறது, இவைகள் ஒரு உண்மையான கிறிஸ்தவனின் வாழ்வில் காணப்படவேண்டிய குணங்கள் அல்ல.

நமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்களை மன்னிப்பதற்கு நமக்கு பொறுமையும் நீடிய சாந்தமும் தேவையாய் இருக்கிறது. சபையானது “எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருக்கவேண்டும்” என்று கட்டளையைப் பெற்றிருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:14). தனிப்பட்ட நிலையிலுள்ள இலேசானவைகள் மற்றும் சிறிய குற்றங்களை நாம் காணாதவர்கள் போல இருக்கவேண்டும். “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு” (மத்தேயு 5:39) என்று இயேசு சொன்னார்.

நமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்களை மன்னிப்பதற்கு நம் வாழ்வில் மாற்றத்தைக்கொண்டுவந்து நம்மை மருரூபப்படுத்தின தேவனுடைய வல்லமை தேவையாய் இருக்கிறது. பதிலுக்கு பதில் செய்யவேண்டும் மற்றும் பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் விழுந்துப்போன சுபாவமுள்ள மனிதனின் ஆழ்மனது தாகமாக இருக்கிறது. நாம் இயற்கையாகவே நம்மை வேதனைப்படுத்தியவர்களை நாமும் வேதனைப்படுத்த விரும்புவோம் – அதாவது கண்ணனுக்கு கண் என்பதுதான் சரி எனத்தோன்றும். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருக்கிற நாம், நம்முடைய சத்துருக்களைச் சிநேகிக்கவும், நம்மைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யவும், நம்மைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும், நம்மை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணவும் தேவனிடத்திலிருந்து வல்லமையைப் பெற்றிருக்கிறோம் (லூக்கா 6:27-28). மன்னிப்பதற்கு விருப்பமும் முடிவுபரியந்தமும் அப்படியே அதில் நிலைநிற்கவும் தக்கதாக இயேசு நமக்கு ஒரு புதிய இருதயத்தை தந்திருக்கிறார்.

நமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்களை மன்னிக்கின்ற செயல் எவ்வளவு எளிதான காரியம் என்பது, தேவன் எந்த அளவிற்கு நமது எல்லா அக்கிரமங்களையும் மன்னித்திருக்கிறார் என்பதை எண்ணும்போது தெளிவாகும். தேவனிடத்திலிருந்து இப்படி அளவில்லா கிருபையைப் பெற்ற நாம், மற்றவர்களுக்கு அதே கிருபையை தராமல் விலக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. நமக்கு பிறர் செய்த பாவங்களைக் காட்டிலும் பலமடங்கு நாம் தேவனுக்கு விரோதமாக அளவிடப்பட முடியாத நிலையில் பாவஞ்செய்து இருக்கிறோம். மத்தேயு 18:23-35-ல் இயேசு சொன்ன உவமையில், இந்த சத்தியத்தினுடைய வல்லமையான உதாரணமாக இருக்கிறது.

நாம் தேவனிடத்தில் மன்னிப்பைக் கேட்கும்போது, அவர் அதை இலவசமாய் நமக்கு அளிக்கிறார் (1யோவான் 1:9) என்று தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். நம்மிடத்தில் மன்னிப்புக் கேட்கிறவர்களுக்கு நாம் காண்பிக்கும் கிருபையானது எப்பொழுதும் தொய்வில்லாமல் இருக்கவேண்டும் (லூக்கா 17:3-4).

English



முகப்பு பக்கம்

எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries