settings icon
share icon
கேள்வி

நல்ல பெற்றோராக இருப்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கடினமான மற்றும் சவாலான காரியமாகும், ஆனால் அதே சமயம் இது நாம் செய்கிற எல்லா செயல்களுக்கும் மேலாக நிறைவையும் வெகுமதியையும் தரக்கூடிய செயலாக இருக்கிறது. நம்முடைய குழந்தைகளை சிறந்த ஆண்களாக அல்லது பெண்களாக வளர்ப்பதற்கான வழிகளை பற்றி போதிப்பதில் வேதாகமத்திற்கு பெரும் பங்கு உண்டு. முதலாவது நாம் செய்ய வேண்டியது தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டும்.

அன்பான தேவனோடு இணைந்து மற்றும் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கிற முன்மாதிரியான ஒரு ஆவிக்குரிய பெற்றோராக இருப்பதற்கு, நாம் உபகாமம் 6:7-9 ல் கூறப்பட்டுள்ள கட்டளைக்கு கவனமாய் இருந்து நம்முடைய பிள்ளைகள் அதை செய்வதற்கு போதிக்க வேண்டும். இந்த வேதப்பகுதியில் தொடர்ந்து தொடர்ச்சியான நிலையில் போதிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. இது எல்லா நேரங்களில் அதாவது வீட்டில், பாதையில், இரவில், காலையில், செய்யப்படவேண்டியதாகும். வேதாகம சத்தியமே நமது இல்லத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்த கட்டளைகளைப் பின்பற்றுவது மூலம் நாம் நம்முடைய குழந்தைகளுக்கு தேவனை ஆராதிப்பது ஏதோ ஞாயிறு காலைகளில் உள்ள ஆராதனைக்கு மற்றும் இரவு ஜெபங்களுக்கு மட்டுமே உரியது அல்ல அது இடைவிடாது செய்யப்பட வேண்டியது என்பதை போதிக்க வேண்டும்.

நம்முடைய குழந்தைகள் நேரடி போதனையின் மூலம் அநேக காரியங்களை கற்றுக்கொண்டாலும், அவர்கள் நம்மை பார்த்து கண்காணித்து இன்னும் அநேக காரியங்களை கற்றுக்கொள்கின்றனர். இதினால் தான் நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் முதலில் தேவன் நமக்கு கொடுத்திருக்கும் பங்குகளை ஒப்புக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மரியாதையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் (எபேசியர் 5:21). அதே சமயம் தேவன் தலைமை அதிகாரத்தை ஒரு ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கிறார். “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்” (1 கொரிந்தியர் 11:3). கிறிஸ்து தேவனை விட தாழ்ந்தவர் அல்ல என்று நமக்கு தெரிந்திருக்கிறது போலவே மனைவியும் கணவனுக்குத் தாழ்ந்தவள் அல்ல. அதிகாரத்திற்கு கீழ்படியாமல் இருந்தால் எந்த ஒரு ஒழுங்குமே இருக்காது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். கிறிஸ்துவும் சபையின் மீது அன்புகூர்ந்தது போல கணவன் குடும்பத்தலைவனாக இருந்து தன்னுடைய சொந்த சரீரத்தை நேசிப்பதுப்போல அவனுடைய மனைவியை நேசிக்க வேண்டும் (எபேசியர் 5:25-29).

இந்த அன்புள்ள தலைமைத்துவத்திற்கு பிரதியுத்திரமாக மனைவி அவளுடைய கணவனின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்திருப்பது கடினமல்ல (எபேசியர் 5:24; கொலோசெயர் 3:18). கணவனிடம் அன்புடன், மரியாதையுடன், புத்தி மற்றும் கற்புள்ளவளாகவும் மற்றும் வீட்டை கவனிக்கிறவளாகவும் இருப்பதே அவளுடைய தலையாய கடமையாகும் (தீத்து 2:4-5). இயல்பாகவே பெண்கள் ஆண்களை விட அதிகம் போஷிக்கும் தன்மை கொண்டவர்கள் ஏனென்றால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுடைய முதன்மை பராமரிப்பாளர்களாக இருக்கும் படியாக அவர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒழுக்கம் மற்றும் அறிவுருத்தல் குழந்தை வளர்ப்பில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. நீதிமொழிகள் 13:24, “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான், அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்” என்று கூறுகிறது. ஒழுக்கமில்லாத குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் தேவையற்றவர்கள் மற்றும் உதவாதவர்களாக தங்களை கருதுகின்றனர். அவர்கள் வழிகாட்டுதல் மற்றும் சுய கட்டுப்பாடு இல்லாதவர்களாகின்றனர் மற்றும் அவர்கள் வளர்ந்த பின்பும் கட்டுப்பாடற்றவர்களாய், தேவனுடைய அதிகாரம் மற்றும் எந்த ஒரு அதிகாரத்தையும் மதிக்காதவர்களாய் மாறிவிடுகின்றனர். “நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய், ஆனால் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே” (நீதிமொழிகள் 19:18). அதே சமயம் பிள்ளைகளை அன்போடு கூட சிட்சிக்க வேண்டும், அல்லது அவர்கள் சீற்றம் கொண்டவர்களாக, திடனற்றவர்களாக, மற்றும் கலகக்காரர்களாக வளருவார்கள் (கொலோசெயர் 3:21). எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க்காணும் என்று தேவன் அங்கீகரிக்கிறார் (எபிரெயர் 12:11), ஆனால் அன்போடு கூடிய சிட்சை குழந்தைகளுக்கு குறிப்பாக நன்மையானதாக இருக்கும். “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” (எபேசியர் 6:4).

பிள்ளைகளை அவர்களது இளம்பிராயத்தில் சபையோடும், குடும்பத்தோடும், ஊழியத்திலும் பங்கு பெற செய்வது மிகவும் அவசியமாகும். தவறாது சபையில் பங்குபெறச்செய்தல் (எபிரெயர் 10:25), நீங்கள் வேதம் வாசிப்பதை அவர்கள் பார்க்க வேண்டும் மற்றும் அவர்களோடு இணைந்து வேதத்தை வாசிக்கலாம். அவர்கள் அவர்களை சுற்றியுள்ள உலகத்தை எப்படியாக பார்க்கிறார்கள் என்பதை அவர்களோடு கூட கலந்துரையாடுங்கள் மற்றும் அவர்களுக்கு தேவனுடைய மகிமையை அனுதின வாழ்க்கை மூலம் கற்றுக்கொடுங்கள். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6). நல்ல பெற்றோராக இருப்பது என்பது கர்த்தருக்கு கீழ்படிந்து அவரை ஆராதிப்பதில் உங்கள் மாதிரியை பின்பற்றுகிறவர்களாக குழந்தைகளை வளர்ப்பதே ஆகும்.

English



முகப்பு பக்கம்

நல்ல பெற்றோராக இருப்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries