settings icon
share icon
கேள்வி

பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

பதில்


பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பைக்குறித்து வெளி. 20:11-15-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது இழந்துபோனவர்களை அக்கினி கடலுக்குள் தள்ளப்படுவதற்கு முன்னால் நடந்தேறவிருக்கிற கடைசி நியாயத்தீர்ப்பு ஆகும். வெளி. 20:7-15-ல் பார்க்கிறபடி, ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகு, மிருகமும் கள்ள தீர்க்கதரிசியும் ஏற்கனவே இருக்கிற அக்கினி கடலுக்குள் சாத்தான் தள்ளபட்ட பிறகும் (வெளிப்படுத்தல் 19:19-20; 20:7-10) இந்த நியாயத்தீர்ப்பு உண்டாகும். திறக்கப்பட்ட புத்தகங்களில் (வெளிப்படுத்தல் 20:12), ஒவ்வொறு மனிதனின் நன்மையான மற்றும் பொல்லாத கிரியைகள் எழுதப்பட்டு இருக்கும். நாம் பேசினவைகள், செய்தவைகள், நினைத்தவைகளெல்லாம் தேவனுக்கு தெரியும், மற்றும் அதின் அடிப்படையில் அவர் ஒவ்வொருவருக்கும் பலனளிப்பார் (சங்கீதம் 28:4; 62:12; ரோமர் 2:6; வெளிப்படுத்தல் 2:23; 18:6; 22:12).

இந்த சமயத்தில், “ஜீவ புத்தகம்” என்கிற மற்றொரு புத்தகமும் திறக்கப்பட்டிருந்தது (வெளிப்படுத்தல் 20:12). ஒரு மனிதன் தேவனோடு நித்திய காலமாய் வாழுவான் அல்லது நித்தியகாலமாய் அக்கினி கடலில் தண்டனை அடைவான் என்கிற காரியத்தை இந்த புத்தகம் தீர்மானிக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் கிரியைகளுக்கு உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்கிறபோதிலும், அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் மன்னிப்படைந்தவர்களாய் இருக்கிறார்கள் மற்றும் “உலக தோற்றத்திற்க்கு முன்னமே” அவர்கள் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதபட்டும் இருக்கிறது (வெளிப்படுத்தல் 17:8). வேதவாக்கியங்களில் நாம் தெளிவாக அறிந்திருக்கிற காரியம் என்னவெனில், இந்த நியாயத்தீர்ப்பின் போது, “மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைவார்கள்” (வெளி. 20:12). அந்தப்படியே, “ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான்” (வெளி. 20:15).

எல்லா மனிதர்களுக்கும், அதாவது விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளுக்கு, கடைசி நியாயத்தீர்ப்பு என்று இருக்கிறது என்கிற காரியம் வேதாகமத்தில் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் சகல மனிதரும் இயேசுவிற்கு முன்பாக நிற்பார்கள் மற்றும் அவர்கள் செய்த கிரியைகளுக்கு தக்கதாக நியாயத்தீர்ப்படைவார்கள். பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பு தான் கடைசி நியாயத்தீர்ப்பு என்று தெளிவாய் இருந்தாலும், வேதத்தில் குறிப்பிடபட்டுள்ள மற்ற நியாயத்தீர்ப்புகள் இந்த நியாயத்தீர்ப்புக்கு எப்படி சமந்தப்பட்டுள்ளது என்றும் யார் எல்லாம் இந்த நியாயத்தீர்ப்பில் நியாயம் தீர்க்கப்படுவார்கள் என்றும் கிறிஸ்தவர்களுக்குள்ளே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

சிலர் வேதாகமம் மூன்று விதமான நியாயத்தீர்ப்புகள் வருகிறதைப்பற்றி சொல்லுகிறது என்று நம்புகிறார்கள். முதலாவது நியாயத்தீர்ப்பு, செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் நியாயந்தீர்ப்பதாகும், அதாவது தேசங்களின் நியாயத்தீர்ப்பு (மத்தேயு 25:31-36). இது உபத்திரவக்காலத்திற்கு பிறகு ஆனால் ஆயிர வருட அரசாட்சிக்கு முன்பாக நடைபெரும். இந்த நியாயத்தீர்ப்பில் யாரெல்லாம் ஆயிர வருட அரசாட்சிக்குள் பிரவேசிப்பார்கள் என்று தீர்மானிக்கப்படும். இரண்டாவதாக, விசுவாசிகளின் கிரியைகள் நியாயந்தீர்க்கப்படும்; இது “கிறிஸ்துவின் நியாயாசனம்” (2 கொரிந்தியர் 5:10) என்று அழைக்கப்படுகிறது. இந்த நியாயத்தீர்ப்பில், கிறிஸ்தவர்கள் அவரவர் தேவனுக்கு செய்த வேலை அல்லது சேவைக்கு தக்கதாக வெகுமதிகளைப் பெறுவார்கள். மூன்றாவதாக, பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. இது ஆயிர வருட அரசாட்சி முடிவில் நடைபெறும் (வெளிப்படுத்தல் 20:11-15). இதில் அவிசுவாசிகள் தங்கள் கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட்டு, அக்கினி கடலில் தள்ளப்படும் நித்திய ஆக்கினை தீர்ப்படைவார்கள்.

இம்மூன்றும் வெவ்வேரு நியாயத்தீர்ப்புகள் அல்ல; இவை யாவும் ஒரே நியாயத்தீர்ப்பாகிய கடைசி நியாயத்தீர்ப்பை குறிப்பிடுகிறது என்று சில கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதாவது, வெளிப்படுத்தல் 20:11-15-ல் குறிப்பிடபட்டுள்ள பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில்தான் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறார்கள். ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் தங்கள் கிரியைகளின் படி நியாயந்தீர்க்கப்படுவார்கள், மற்றும் அவர்கள் வெகுமதியை பெறுவதும் பெறாமல் போவதும் இதன் அடிப்படையில் தீர்மானிக்கபடும். ஜீவ புஸ்தகத்தில் பெயரில்லாதவர்களுக்கு அவர்கள் கிரியைகளின்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள், மற்றும் அவர்கள் எப்படிபட்ட தண்டனையை அக்கினி கடலில் அனுபவிப்பார்கள் என்பது இந்த நியாயத்தீர்ப்பில் தீர்மானிக்கப்படும். இந்த கருத்தை உடையவர்கள், மத்தேயு 25:31-46-ல் கூறப்பட்ட நியாயத்தீர்ப்பானது பெரிய வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பை தான் விவரிக்கிறது என்று நம்புகிறார்கள்; இந்த இரண்டு நியாயத்தீர்ப்புகளுக்கும் ஒரே முடிவு இருக்கிறபடியினால் அவர்கள் அப்படி எண்ணுகிறார்கள். செம்மறியாடுகள் (விசுவாசிகள்) நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள், மற்றும் வெள்ளாடுகள் (அவிசுவாசிகள்) நித்திய ஆக்கினைக்குள் தள்ளப்படுவார்கள் (மத்தேயு 25:46).

பெரிய வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பைக் குறித்து எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், வரப்போகிற நியாயத்தீர்ப்பு அல்லது நியாயத்தீர்ப்புகளை குறித்து நாம் கவனம் உள்ளவர்களாய் இருப்பது அவசியம். முதலாவதாக, இயேசு கிறிஸ்துவே நியாயாதிபதி, எல்லா அவிசுவாசிகளும் அவரால் நியாயந்தீர்க்கப்படுவார்கள், மற்றும் அவர்கள் செய்த கிரியைகளுக்கு தக்கதாக தண்டிக்கப்படுவார்கள். அவிசுவாசிகள் தங்களுக்கென்று கோபாக்கினையை சேர்த்துவைக்கிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 2:5); மற்றும் தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார் (ரோமர் 2:6). விசுவாசிகளும் கிறிஸ்துவினால் நியாயம் தீர்க்கபடுவார்கள், ஆனால் அவர்களுக்கு கிறிஸ்துவின் நீதி செலுத்தப்பட்டிருக்கிறபடியினாலும் அவர்கள் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியினாலும், அவர்கள் கிரியைக்குத் தக்கதாக பரிசு அளிக்கப்படும், ஆனால் தண்டிக்கபட மாட்டார்கள். நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நின்று நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும் (ரோமர் 14:10-12).

English



முகப்பு பக்கம்

பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries