கேள்வி
சுகமாகுதலைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? பாவநிவாரண பலியில் சுகமாகுதலும் இருக்கிறதா?
பதில்
1 பேதுரு 2:24 குறிப்பிடபட்டள்ள காரியம் ஏசாயா 53:5லிருந்து மேற்கோள் காட்டப்பட்டதாகும், இந்த வசனம் சுகமாகுதலைக் குறிக்கும் திறவுகோல் வசனம் ஆகும். ஆனால் இது தவறான நிலையில் புரிந்துகொள்ளப்பட்டும் செயல்முறைப்படுத்தப்பட்டும் வருகிறது. “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” மொழிபெயர்க்கப்பட்ட “குணமாகிறோம்” என்கிற வார்த்தை ஆவிக்குரிய அல்லது உடல் ரீதியான சுகத்தை குறிக்கிறதாக இருக்கலாம். எனினும் ஏசாயா 53 மற்றும் 1 பேதுரு 2 ஆகியவற்றின் சந்தர்ப்பம் மற்றும் பின்னணி இது ஆவிக்குரிய சுகத்தையே குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24). இந்த வசனத்தில் பாவம் மற்றும் நீதியை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே தவிர நோயை அல்லது வியாதியைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. எனவே சுகமாகுதல் என்பது பாவ மன்னிப்படைதல் மற்றும் இரட்சிக்கப்படுதலை குறிக்கிறதே தவிர உடல் சுகத்தை குறிக்கவில்லை.
வேதாகமம் உடல் சுகத்தை ஆவிக்குரிய சுகமாகுதலோடு விசேஷமாக இணைத்துக் குறிப்பிடவில்லை. சில நேரங்களில் ஜனங்கள் தங்களின் விசுவாசத்தை கிறிஸ்துவின் மீது வைப்பதன் மூலம் சரீர சுகத்தை அடைந்தனர் ஆனால் இது எல்லா நேரங்களிலும் நடக்கவில்லை. சில நேரங்களில் சுகமாக்குவது தேவனுடைய சித்தமாகவும், மற்ற நேரங்களில் அப்படி அல்லவென்றும் காண்கிறோம். அப்போஸ்தலனாகிய யோவான் இதைக்குறித்து சரியான விளக்கத்தைத் தருகிறார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 5:14-15). தேவன் இன்னும் அற்புதத்தை செய்கிறவராகவே இருக்கிறார். தேவன் இன்னும் சுகப்படுத்துகிறார். நோய், வியாதி, வலி மற்றும் மரணம் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறது என்பது உண்மையாகும். தேவனுடைய வருகை வராத பட்சத்தில் ஜீவனோடு இருக்கிற நாம் அனைவரும் மரிப்போம் மற்றும் அநேகருடைய மரணத்திற்கு (கிறிஸ்தவர்கள் உள்பட) சரீர பிரச்சனையே (நோய், வியாதி, காயம்) காரணமாக இருக்கும். எல்லா நேரமும் நம்மை சுகப்படுத்துவது தேவனுடைய சித்தமல்ல.
இறுதியாக, நம்முடைய முழுமையான சரீர சுகம் பரலோகத்தில் நமக்காக காத்திருக்கிறது. பரலோகத்தில் வேதனை, நோய், வியாதி, பாடு மற்றும் மரணம் இல்லை (வெளிப்படுத்தல் 21). நாம் எல்லோரும் நம்முடைய உடல் நிலையை குறித்து குறைவான அக்கரையோடும் மற்றும் ஆவிக்குரிய நிலையை குறித்து அதிக அக்கரையோடும் இந்த உலகத்தில் இருக்க வேண்டியது அவசியம் (ரோமர் 12:1-2). அப்பொழுது உடல் ரீதியான பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லாத பரலோகத்திற்கு நேரே நம்முடைய இருதயத்தை நாம் எப்பொழுதுமே செலுத்த முடியும். நாம் அனைவரும் எதிர்பார்க்க வேண்டிய உண்மையான சுகத்தைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷம் 21:4-ல் வாசிக்கிறோம்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
English
சுகமாகுதலைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? பாவநிவாரண பலியில் சுகமாகுதலும் இருக்கிறதா?