settings icon
share icon
கேள்வி

பரலோகத்தில் இருப்பவர்கள் கீழே பூமியிலுள்ள நம்மை பார்க்க முடியுமா?

பதில்


“மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்திருக்க…” என்று எபிரேயர் 12:1ல் வாசிக்கிறோம். சிலர் இந்த “மேகம்போன்ற திரளான சாட்சிகள்” என்பவர்கள் பரலோகத்தில் இருந்து நம்மை பார்க்கும் ஜனங்கள் என்று புரிந்துகொள்கின்றார்கள். ஆனால் இந்த “சாட்சிகள்” என்பது விசுவாச வீரர்களின் பட்டியலாக எபிரேயர் 11-ல் குறிப்பிடுவதை நாம் கண்டுகொள்ளலாம். அவர்கள் நம்மை சூழ்ந்திருக்கும் சாட்சிகள் என்று கூறப்பட்டபடியினாலே, சில வேதாகம விளக்கவுரையாளர்கள் இந்த விசுவாச வீரர்கள் மேலே பரலோகத்திலிருந்து கீழே பூமியிலிருக்கிற நம்மை காண்கின்றவர்களாக இருக்கிறார்கள் என்பதாகப் புரிந்துகொள்ளுகிறார்கள்.

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை பரலோகத்தில் இருப்பவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது பிரபலமான கலாச்சாரங்களில் நம்பப்படுகிற ஒரு வழக்கமான காரியமாக இருக்கிறது. அவர்கள் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்கிற கருத்தை எந்த அளவிற்கு விரும்பினாலும், எபிரெயர் 12:1 போதிப்பது என்னவோ அதுவல்ல. 11ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டவைகளை கருத்தில்கொண்டு எபிரேய நிருபத்தின் எழுத்தாளர் அதன் பின்னணியில் சில முக்கியமான ஆவிக்குரிய பாடங்களை 12ஆம் அதிகாரத்தில் கொண்டு வருகிறார். அதனால்தான் 12ஆம் அதிகாரம் “ஆகையால்” என்று தொடங்குகிறது. 11ஆம் அதிகாரத்தில் வருகின்ற இந்த “சாட்சிகள்” யாவரும், அவர்களுடைய விசுவாசத்திற்காக தேவனாலே நற்சாட்சிப்பெற்று பரலோகத்தில் திரளான நிலையில் நிறைந்திருப்பதைக் காண்பிக்கிறது. இங்கே கேள்வி என்னவென்றால். எந்த வகையில் அவர்கள் “சாட்சிகளாக” இருக்கிறார்கள்? என்பதாகும்.

எபிரெயர் 12:1ன் சரியான விளக்கம் என்னவென்றால், “மேகம்போன்ற திரளான சாட்சிகளாக” இருக்கின்ற புருஷர்களும் ஸ்திரீகளும் அவர்கள் தேவன்பேரில் கொண்டிருந்த விசுவாசத்தின் நிமித்தமாக அப்படி சாட்சிகளாக கருதப்படுகிறார்கள். பயத்திற்கு பதிலாக விசுவாசத்தை தெரிந்துகொண்ட இந்த ஆசிர்வாதமான இந்த காரியத்தைத்தான் பழைய ஏற்பாடு அவர்களுடைய கதைகளாக சித்தரிக்கின்றன. எபிரெயர் 12:1ல் துவங்குகிறதை பொழிப்புரையாக எளிதில் விளங்கி கொள்ளும் வகையில் கூறவேண்டுமானால், “சோதிக்கப்பட்டும் நிரூபிக்கப்பட்டும் இருக்கிறதான விசுவாசத்தின் மெய்யான உதாரணங்கள் நமக்கு இருக்கின்றபடியால்...” ஆகவே பூமியில் இருக்கின்ற நமது காரியங்கள் சிறந்ததுபோலவும் அவர்களுக்கு செய்வதற்கு வேறே ஒன்றும் இல்லாதது போலவும், பரலோகத்தில் இருக்கின்ற ஜனங்கள் கீழே பூமியில் இருக்கின்ற நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தவறான புரிந்துகொள்ளுதல் ஆகும். நமக்கு முன்பாக தேவனிடத்திற்கு சென்றிருக்கிறவர்கள் நமக்கு நல்ல நீடித்திருக்கிற மாதிரியை வைத்துப்போய் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் கிறிஸ்துவுக்கும், தேவனுக்கும், சத்தியத்திற்கும் சாட்சிகளாய் இருந்தார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

எபிரேயர் 12:1 இப்படியாக தொடர்கிறது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” விசுவாசம் மற்றும் நமக்கு முன்பாக சென்றிருக்கிற விசுவாசிகளின் பொறுமையும் நம்மை நமது விசுவாச ஓட்டத்தில் ஓடுவதற்கு ஏவுகிறதாக இருக்கிறது. நாம் ஆபிரகாம், மோசே, ராகப், கிதியோன் இன்னும் பலருடைய உதாரணங்களை பின்பற்றுகிறோம்.

லூக்கா 16:28-ல் தம் சகோதரர்களைப் பற்றி ஐசுவரியவான் குறிப்பிடுகிற காரியத்தை சிலர் எடுத்துக்கொண்டு, இறந்த ஆத்மாக்கள் (குறைந்தபட்சம் ஹேடேஸில் இருந்து) பூமியிலுள்ள சம்பவங்களைப் பார்க்க முடியும் என்பதற்கு சான்றாக இருக்கிறதாக குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், வேதாகமம் இந்த வேதப்பகுதியில், ஐசுவரியவான் தன்னுடைய சகோதரர்களைப் பார்க்க முடிந்ததாக ஒருபோதும் சொல்லவில்லை; அவனுக்கு சகோதரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்கள் அவிசுவாசிகளாக இருந்தார்கள் என்பதையும் அவன் அறிந்திருந்தான் தெளிவாகிறது. மேலும், சிலர் வெளிப்படுத்துதல் 6:10-ஐ ஆதார வசனமாக பயன்படுத்துகிறார்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள் என்று கூறுவதிலிருந்து, அவர்கள் நீதிக்குத் தகுதியுள்ளவர்கள் என்று அறிந்திருப்பதோடு, கர்த்தர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விரும்புவதாகக் கூறுகிறது.

பரலோகத்தில் இருக்கிற ஜனங்கள் கீழே பூமியிலிருப்பவர்களை பார்க்க இயலாது என்று கூறவில்லை, ஆதலால் இந்த காரியத்தில் இப்படித்தான் என்கிற கர்வம் நிறைந்தவர்களாக இருக்கக்கூடாது. எப்படியாயினும், அவர்கள் நம்மை காண்கிறார்கள் அல்லது பார்க்கமுடியும் என்பது அவ்வளவு தெளிவானதாக இல்லை. காரணம் பரலோகத்தில் இருப்பவர்கள் தேவனை துதிப்பதிலும் ஆராதித்து மகிழ்வதிலும் ஓயாமல் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, மற்றக்காரியங்களில் கவனம் செலுத்த அவர்கள் கூடாதவர்களாக இருக்கலாம்.

பரலோகத்தில் உள்ளவர்கள் நம்மை பார்க்கக்கூடுமா அல்லது பார்க்க இயலாதா என்பது ஒருபுறம் இருக்க, நாம் நம் ஓட்டத்தை அவர்களுக்காக ஓடவில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் அவர்களின் அங்கீகாரம் அல்லது அவர்களின் பாராட்டுக்காக நம்பிக்கைக்கொண்டிருக்கவில்லை. எபிரெயர் 12:2 நமது கவனம் எங்கே இருக்கவேண்டுமோ அதில் வைத்திருக்கிறது: “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி.” இயேசுவே நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம், வேறே எதுவும் அல்ல (தீத்து 2:13).

English



முகப்பு பக்கம்

பரலோகத்தில் இருப்பவர்கள் கீழே பூமியிலுள்ள நம்மை பார்க்க முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries