settings icon
share icon
கேள்வி

நரகம் உண்மையானதா? நரகம் நித்தியமானதா?

பதில்


பரலோகம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நம்புகிறவர்களை விட நரகம் உண்டென்று நம்புகிறவர்களின் சதவீதம் குறைவானது ஆகும். ஆனால் வேதாகமத்தின்படி பார்க்கும்போது, பரலோகம் என்பது எவ்வளவு உண்மையானதாக இருக்கிறதோ அப்படியே நரகமும் உண்மையானதாக இருக்கிறது. துன்மார்க்கர்கள் / அவிசுவாசிகள் மரித்த பின்பு சென்றடையக்கூடிய ஒரு மெய்யான இடமென்று வேதாகமம் திட்டமும் தெளிவுமாக போதிக்கிறது. நாம் எல்லோரும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தோம் (ரோமர் 3:23). அந்த பாவத்திற்கு ஏற்ற நீதியான தண்டனை மரணமாகும் (ரோமர் 6:23). நாம் செய்த பாவங்கள் எல்லாம் தேவனுக்கு விரோதமானதாய் இருக்கின்றதினாலும் (சங்கீதம் 51:4), தேவன் எல்லையில்லாதவர் மற்றும் நித்தியமானவராக இருக்கிறார் என்பதினாலும், பாவத்தின் தண்டனையும் அதாவது மரணமும், எல்லையில்லாததும் நித்தியமானதாகவும் இருக்க வேண்டும். நரகம், பாவத்தினால் நாம் சம்பாதித்த எல்லையில்லாத மற்றும் நித்தியமான இந்த மரணமேயாகும்.

மரித்துபோன துன்மார்க்கர்கள் நரகத்தில் அனுபவிக்கும் தண்டனை “நித்திய அக்கினி” (மத்தேயு 25:41), “அவியாத அக்கினி” (மத்தேயு 3:12), “நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்” (தானியேல் 12:2), அங்கே "அக்கினி அவியாமலுமிருக்கும்" (மாற்கு 9:44-49), "அக்கினிஜுவாலை" மற்றும் "வேதனையுள்ள" இடம் (லூக்கா 16:23-24), “நித்திய அழிவாகிய தண்டனை” (2 தெசலோனிக்கேயர் 1:9), அந்த இடம் “வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” (வெளிப்படு்தல் 14:10-11), மற்றும் “அக்கினியும் கந்தகமுமான கடலிலே” தள்ளப்பட்டு அவர்கள் “இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” (வெளிப்படு்தல் 20:10) என்று வேதாகமம் விவரிக்கிறது.

பரலோகத்தில் நீதிமான்கள் அனுபவிக்கும் சந்தோஷம் எப்படி முடிவில்லாததோ, அப்படியே நரகத்தில் துன்மார்க்கர்கள் அனுபவிக்கும் தண்டனையும் முடிவில்லாததாக (மத்தேயு 25:46) இருக்கும். துன்மார்க்கர்கள் நித்தியமாக தேவ கோபாக்கினைக்கு பாத்திரர் ஆவார்கள். இது தேவனின் நீதியான தீர்ப்பு தான் என்று நரகத்தில் இருப்பவர்கள் ஒத்துக்கொள்வார்கள் (சங்கீதம் 76:10). அவர்களுக்கு கிடைத்த தண்டனை நியாயமானது தான் என்றும் இந்த நிலைக்கு அவர்கள் தான் காரணம் என்றும் நரகத்தில் இருப்பவர்கள் அறிவார்கள் (உபாகமம் 32:3-5). ஆம், நரகம் உண்மையானது. ஆம், நரகம் நித்தியமான தண்டனையும் வேதனையும் நிறைந்த ஒரு இடம். ஆனால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, இயேசுவின் மூலமாக நாம் இந்த நித்திய நாசத்திலிருந்து தப்புவிக்கப்பட முடியும் (யோவான் 3:16, 18, 36).

English



முகப்பு பக்கம்

நரகம் உண்மையானதா? நரகம் நித்தியமானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries