settings icon
share icon
கேள்வி

தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று கூறுவதன் அர்த்தம் என்ன?

பதில்


"பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்ற சொற்றொடர் வேதாகமத்தில் இரண்டு முறை வருகிறது, பழைய ஏற்பாட்டில் ஒரு முறை (ஏசாயா 6:3) மற்றும் புதிய ஏற்பாட்டில் ஒரு முறை (வெளிப்படுத்துதல் 4:8). இரண்டு முறையும், இந்த சொற்றொடர் பரலோகவாசிகளால் கூறப்படுகிறது அல்லது பாடப்படுகிறது, இரண்டு முறையும் அது தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக கொண்டுச் செல்லப்பட்ட ஒரு மனிதனின் பார்வையில் நிகழ்கிறது: முதலில் தீர்க்கதரிசியாகிய ஏசாயா அடுத்தது அப்போஸ்தலனாகிய யோவான். தேவனுடைய பரிசுத்தத்தின் மூன்று மடங்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளதை காண்பதற்கு முன், தேவனுடைய பரிசுத்தம் என்றால் என்ன என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

தேவனுடைய பரிசுத்தத்தை விளக்குவது என்பது தேவனுடைய அனைத்து பண்புகளிலும் மிகவும் கடினமான ஒன்றாகும், ஏனென்றால் அது மனிதனால் பகிரப்படாத அவரது மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம், அவருடைய பல பண்புகளை, அதாவது அன்பு, இரக்கம், விசுவாசம் போன்றவற்றை நாம் ஓரளவு, நிச்சயமாக பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் தேவனுடைய பண்புகளில் சில சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களால் பகிரப்படமுடியாது, உதாரணமாக சர்வவல்லமை, சர்வஞானம், சர்வவியாபம் மற்றும் பரிசுத்தம். தேவனுடைய பரிசுத்தமே அவரை மற்ற எல்லா உயிர்களிடமிருந்தும் வேறுபடுத்துகிறது அல்லது பிரிக்கிறது, ஆம் அவரை மற்றவற்றிலிருந்து தனித்து வேறுபடுத்துகிறது. தேவனுடைய பரிசுத்தம் அவருடைய பரிபூரணத்தை அல்லது பாவமற்ற தூய்மையை விட அதிகம் ஆகும்; அது அவருடைய "தனித்தன்மையின்" சாராம்சம் ஆகும், அவருடைய அடுத்துச்சேரமுடியாத நிலையாகும். தேவனுடைய பரிசுத்தமானது அவருடைய அருமையின் மர்மத்தை உள்ளடக்கியது மற்றும் அவருடைய மாட்சிமையின் ஒரு சிறிய பகுதியை நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது அவரை வியந்து பார்க்க வைக்கிறது.

ஏசாயா 6 இல் விவரிக்கப்பட்டுள்ள தேவனுடைய பரிசுத்தத்திற்கு ஏசாயா நேரடி சாட்சியாக இருந்தார். ஏசாயா தேவனுடைய தீர்க்கதரிசியாகவும், நீதிமானாகவும் இருந்த போதிலும், தேவனுடைய பரிசுத்த தரிசனத்திற்கு அவரது மாறுத்திரம் அவருடைய சொந்த பாவத்தை உணர்ந்து அவருக்காக பரிதவித்து விரக்தியடைவதாகும் (ஏசாயா 6:5). தேவனுடைய சமூகத்தில் உள்ள தேவதூதர்கள் கூட, "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று முழங்கிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் முகத்தையும் கால்களையும் தங்கள் ஆறு சிறகுகளில் நான்கால் மூடினார்கள். முகத்தையும் கால்களையும் மறைப்பது தேவனுடைய உடனடி பிரசன்னத்தால் ஈர்க்கப்பட்ட பயபக்தியையும் பிரமிப்பையும் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை (யாத்திராகமம் 3:4-5). பரிசுத்தரின் முன்னிலையில் அவர்களின் தகுதியற்ற தன்மையை அங்கீகரிக்கும் வகையில், தங்களை முடிந்தவரை மறைத்து வைப்பது போல், சேராபீன்கள் மூடப்பட்டிருந்தது. தூய்மையான மற்றும் பரிசுத்தமான சேராபீன்கள் யேகோவாவின் முன்னிலையில் இத்தகைய பயபக்தியை வெளிப்படுத்தினால், கறைபட்ட மற்றும் பாவமுள்ள உயிரினங்களான நாம் அவருக்கு எவ்வளவு ஆழமான பிரமிப்புடன் இருக்க வேண்டும்! தேவதூதர்கள் தேவனிடம் காட்டும் பயபக்தியானது, நாம் அவருடைய சமூகத்தில் சிந்தனை செய்யாமல், அவசரமாய் விரைந்து செல்லும் போது நம்முடைய சொந்த அனுமானத்தை நினைவூட்ட வேண்டும் ஏனென்றால் நாம் அவருடைய பரிசுத்தத்தை அநேக வேளைகளில் புரிந்து கொள்வதில்லை.

வெளிப்படுத்தல் 4 ஆம் அதிகாரத்தில் தேவனுடைய சிங்காசனத்தைப் பற்றிய யோவானின் பார்வை ஏசாயாவைப் போன்றது ஆகும். மீண்டும், சிங்காசனத்தைச் சுற்றியுள்ள ஜீவன்கள், "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" (வெளிப்படுத்துதல் 4:8) என்று கூறிக்கொண்டு பரிசுத்தமானவரின் முன்பாக உள்ள பயபக்தியிலும் பிரமிப்பிலும் இருந்தன. யோவான் சிங்காசனத்தைச் சுற்றியுள்ள ஜீவன்களை குறித்து தொடர்ந்து மகிமை மற்றும் மரியாதை மற்றும் பயபக்தியைக் கொடுப்பதை விவரிக்கிறார். சுவாரஸ்யமாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவனுடைய பார்வைக்கு யோவானின் மாறுத்திரம் ஏசாயாவிலிருந்து வேறுபட்டது. யோவான் தனது பார்வையின் ஆரம்பத்தில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்தித்ததால், யோவான் பயத்தில் செத்தவனைப்போல கீழே விழுந்ததற்கான பதிவும் இங்கே இல்லை. கிறிஸ்து யோவான் மீது கையை வைத்து பயப்பட வேண்டாம் என்று கூறினார். அதேபோல், சிலுவையில் நம் பாவத்திற்காக பரிமாறிக்கொள்ளப்பட்ட, அவருடைய நீதியின் வடிவத்தில் கிறிஸ்துவின் கை நம் மீது இருந்தால், நாம் கிருபையின் சிங்காசனத்தை அணுகலாம் (2 கொரிந்தியர் 5:21).

ஆனால் "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" (ட்ரைஹகியோன் என்று அழைக்கப்படும்) என்று “பரிசுத்தர்” என்னும் சொல் மூம்முறை மீண்டும் மீண்டும் வருவது ஏன்? யூதர்கள் மத்தியில் ஒரு பெயர் அல்லது வெளிப்பாடு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்வது சகஜம். எரேமியா 7:4 இல், யூதர்களை தீர்க்கதரிசி இப்படியாக குறிப்பிடுகிறார், "கர்த்தரின் ஆலயம்" என்று மும்முறை கூறுகிறார், அது அவர்களுடைய சொந்த வழிபாட்டில் மாய்மாலமாகவும் சீர்கேடாகவும் இருந்தாலும், அதில் அவர்களுக்கு உண்டாயிருந்த தீவிர நம்பிக்கையை அது வெளிப்படுத்துகிறது. எரேமியா 22:29, எசேக்கியேல் 21:27, மற்றும் 1 சாமுவேல் 18:23 போன்ற வசனங்களிலும் இப்படியாக மும்முறை வருகிற சொற்றொடர்கள் உள்ளன. எனவே, சிங்காசனத்தைச் சுற்றியுள்ள தேவதூதர்கள் ஒருவருக்கொருவர், "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று அழைக்கும்போது அல்லது முழங்கும்போது, தேவனுடைய உயர்ந்த பரிசுத்தத்தின் சத்தியத்தை அவர்கள் வலிமையுடனும் ஆர்வத்துடனும் வெளிப்படுத்துகின்றனர், அது அவருடைய அற்புதமான மற்றும் மாட்சிமையான தன்மையை வெளிப்படுத்தும் அத்தியாவசிய பண்பாக இருக்கிறது.

கூடுதலாக, ட்ரைஹகியோன் தேவனுடைய திரியேகத் தன்மையை வெளிப்படுத்துகிறது, தேவனுடைய ஆள்தன்மையிலுள்ள மூன்று நபர்கள், ஒவ்வொருவரும் பரிசுத்தத்திலும் மாட்சிமையிலும் சமம். இயேசு கிறிஸ்து பரிசுத்தர், அவர் கல்லறையில் "அழிவைக் காணமாட்டார்", ஆனால் தேவனுடைய வலது பாரிசத்தில் உயர்த்தப்படுவதற்கு உயிர்த்தெழுப்பப்படுவார் (அப். 2:26; 13:33-35). இயேசு "பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்" (அப்போஸ்தலர் 3:14) சிலுவையில் மரணம் நம்மை பரிசுத்த தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வெட்கமின்றி நிற்க அனுமதிக்கிறது. திரியேக தேவனின் மூன்றாவது நபர் - பரிசுத்த ஆவியானவர் - அவருடைய பெயரே தேவனுடைய சாராம்சத்தில் பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

இறுதியாக, சிங்காசனத்தைச் சுற்றியுள்ள தேவதூதர்களின் இரண்டு தரிசனங்கள், "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று முழங்குகின்றன, இது இரண்டு ஏற்பாடுகளிலும் தேவன் ஒன்றே என்பதை தெளிவாகக் குறிக்கிறது. பெரும்பாலும் பழைய ஏற்பாட்டின் தேவனை கோபத்தின் தேவனாகவும் புதிய ஏற்பாட்டின் தேவனை அன்பின் தேவனாகவும் நினைக்கிறோம். ஆனால் ஏசாயாவும் யோவானும் என்றென்றும் மாறாத நமது பரிசுத்தமும், மாட்சிமையையும் பொருந்திய, அற்புதமான தேவனுடைய (மல்கியா 3:6), நேற்றும் இன்றும் என்றும் மாறாத (எபிரெயர் 13:8) ஒரே மாதிரியான சித்திரத்தை முன்வைக்கிறார்கள் மற்றும் “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக்கோபு 1:17). தேவன் எப்படி நித்தியமானவராக இருக்கிறாரோ, அப்படியே அவருடைய பரிசுத்தமும் நித்தியமானது.

English



முகப்பு பக்கம்

தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries