கேள்வி
சாத்தான் கலகம் செய்வான் என்று தேவன் அறிந்திருந்தார் எனில், பிறகு ஏன் அவர் அவனை சிருஷ்டித்தார்?
பதில்
இது ஒரு இரண்டு பகுதி கேள்வி. முதல் பகுதி "சாத்தான் கலகம் செய்வான் என்பது தேவனுக்கு தெரியுமா?" தேவன் சர்வஞானி (எல்லாம் அறிந்தவர்) என்பதை வேதத்திலிருந்து நாம் அறிவோம், அதாவது "அனைத்தையும் அறிந்தவர்". யோபு 37:16; சங்கீதம் 139:2–4, 147:5; நீதிமொழிகள் 5:21; ஏசாயா 46:9-10; மற்றும் 1 யோவான் 3:19-20 தேவனுடைய அறிவு எல்லையற்றது என்பதையும், கடந்த காலத்தில் நடந்தவை, இப்போது நடப்பது, எதிர்காலத்தில் நடக்கவிருப்பது என சகலமும் அவருக்குத் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வசனங்களில் உள்ள சில மிகைப்படுத்தல்களைப் பார்க்கின்றபோது—"அறிவில் பரிபூரணம்"; "அவரது புரிதலுக்கு எல்லையே இல்லை"; "சகலத்தையும் அவர் அறிவார்"—தேவனுடைய அறிவு நம்முடைய அறிவை விட பெரியது என்பது அல்ல, ஆனால் அது எல்லையற்றது என்பதாகும். அவருக்கு சகல காரியங்களும் முழுமையாகத் தெரியும். தேவனுடைய அறிவு பரிபூரணமானதாக இல்லாவிட்டால், அவருடைய தன்மையில் குறைபாடு உள்ளது என்றர்த்தமாகும். தேவனுடைய தன்மையில் ஏதேனும் குறைபாடு என்றால் அவர் தேவனாக இருக்க முடியாது, ஏனென்றால் தேவனுடைய சாராம்சத்திற்கு அவருடைய அனைத்து பண்புகளும் பரிபூரணமாகத் தேவையாயிருக்கிறது. எனவே, முதல் கேள்விக்கான பதில் "ஆம், சாத்தான் கலகம் செய்வான் என்பது தேவனுக்குத் தெரியும்."
கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வந்தோமானால், "சாத்தான் கலகம் செய்வான் என்று தேவன் அறிந்திருந்தும் ஏன் அவர் அவனை சிருஷ்டித்தார்?" இந்த கேள்வி கொஞ்சம் தந்திரமானது, ஏனென்றால் வேதாகமம் பொதுவாக விரிவான பதில்களை வழங்காத "ஏன்" என்ற கேள்வியை இங்கே நாம் கேட்கிறோம். இருந்தாலும், நாம் ஒரு வரையறுக்கப்பட்ட புரிதலுக்கு வர முடியும். கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். எனவே, சாத்தான் கலகம் செய்வான் பிறகு பரலோகத்திலிருந்து கீழேத் தள்ளப்படுவான் என்று தேவன் அறிந்திருந்தும், அவர் எப்படி அவனைப் படைத்தார் என்றால், சாத்தானின் வீழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே தேவனுடைய ராஜ்யபாரத் திட்டத்தின் ஒரு பகுதி என்று அர்த்தம். நாம் இதுவரை பார்த்ததை விட வேறு எந்த பதிலும் அர்த்தமற்றது.
முதலில், சாத்தான் கலகம் செய்வான் என்பதை அறிவது சாத்தானை கலகம் செய்யும்படிக்கு செய்வதற்கு சமமானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவதூதன் லூசிஃபர் ஒரு சுதந்திரமான விருப்பத்தைக் கொண்டிருந்தார் மற்றும் அவனது சொந்த விருப்பங்களை செய்தான். தேவன் லூசிஃபரை பிசாசாக உருவாக்கவில்லை; அவர் அவனை நல்லவனாவேப் படைத்தார் (ஆதியாகமம் 1:31).
சாத்தான் கலகம் செய்வான் என்று தெரிந்தும், தேவன் ஏன் அவனைப் படைத்தார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது நாம் பின்வரும் உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்:
1) லூசிஃபர் தன் வீழ்ச்சிக்கு முன் ஒரு நல்ல மற்றும் சரியான நோக்கத்தைக் கொண்டிருந்தான். லூசிபரின் கலகம் தேவனுடைய அசல் நோக்கத்தை நல்ல விஷயத்திலிருந்து கெட்டதாக மாற்றாது.
2) தேவனுடைய ராஜ்யபாரம் சாத்தானுக்கு, அவனுடைய வீழ்ச்சியடைந்த நிலையிலும் கூட நீண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தானின் தீய செயல்களைப் தேவன் பயன்படுத்தி அவருடைய பரிசுத்தமானத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் (1 தீமோத்தேயு 1:20 மற்றும் 1 கொரிந்தியர் 5:5 ஐப் பார்க்கவும்).
3) தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் கடந்த காலத்திலிருந்தே தீர்மானிக்கப்பட்டது (வெளிப்படுத்துதல் 13:8); இரட்சிப்பு என்பது ஏதாவது இரட்சிக்க வேண்டும், அதனால் தேவன் சாத்தானின் கலகத்தையும் பாவத்தின் பரவலையும் அனுமதித்தார்.
4) சாத்தான் உலகிற்கு கொண்டு வந்த துன்பம் உண்மையில் இயேசு, மனிதகுலத்தில், மனிதகுலத்தின் முழுமையான மற்றும் சரியான இரட்சகராக ஆக்கப்பட்ட வழிமுறையாக மாறியது: "தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது" (எபிரேயர் 2:10).
5) ஆதியிலிருந்தே, கிறிஸ்துவின் தேவனுடைய திட்டத்தில் சாத்தானின் கிரியையை அழிப்பதும் அடங்கும் (1 யோவான் 3:8 ஐ பார்க்கவும்).
முடிவாக, சாத்தான் கலகம் செய்வான் என்று தெரிந்தும் தேவன் ஏன் அவனை சிருஷ்டித்தார் என்று நம்மால் உறுதியாக அறிய முடியவில்லை. ஒருவேளை சாத்தான் ஒருபோதும் படைக்கப்படாமல் இருந்திருந்தால் அல்லது தேவன் வேறே வழியில் வித்தியாசமாக செய்திருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தால் காரியங்கள் இன்னும் "சிறப்பாக" இருந்திருக்கும் என்று கருதுவதை தூண்டுகிறது. ஆனால் இத்தகைய அனுமானங்களும் அறிவிப்புகளும் ஞானமற்றவை. உண்மையில், பிரபஞ்சத்தை எவ்வாறு இயக்குவது மற்றும் தாங்குவது என்கிற விஷயத்தில் தேவனை விட நமக்கு நன்றாகத் தெரியும் என்று கூறுவது, தன்னை மிக உயர்ந்தவருக்கு மேலாக உயர்த்திக்கொள்ளும் பிசாசின் சொந்த பாவத்தில் விழுந்து விடுவதாகும் (ஏசாயா 14:13-14).
English
சாத்தான் கலகம் செய்வான் என்று தேவன் அறிந்திருந்தார் எனில், பிறகு ஏன் அவர் அவனை சிருஷ்டித்தார்?