கேள்வி
நாம் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து மரபு வழியில் பாவத்தை பெற்றிருக்கிறோமா?
பதில்
ஆம், எல்லா மக்களும் ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து, குறிப்பாக ஆதாமிடமிருந்து பாவத்தை பெற்றனர். பாவம் தேவனுடைய பிரமாணத்தை மீறுவதாக வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளது (1 யோவான் 3:4) மற்றும் தேவனுக்கு எதிரான கலகம் (உபாகமம் 9:7; யோசுவா 1:18). தேவனுக்கும் அவருடைய கட்டளைக்கும் எதிரான ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமையை ஆதியாகமம் 3 விவரிக்கிறது. ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமை காரணமாக, பாவம் அவர்களின் சந்ததியினர் அனைவருக்கும் ஒரு "பரம்பரையாக" அல்லது மரபு வழியில் வந்தது ஆகும். ரோமர் 5:12 நமக்கு சொல்கிறது, ஆதாம் மூலமாகத்தான், பாவம் உலகத்திற்குள் நுழைந்தது, எனவே அனைவருக்கும் பாவம் வந்தது பிறகு அந்த பாவத்தால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் வந்தது. இப்படியாக கடந்து வந்த இந்த பாவம் பரம்பரை பாவம் அல்லது மரபு வழி பாவம் என்று அழைக்கப்படுகிறது. நம் பெற்றோரிடமிருந்து உடல் சிறப்பியல்புகளை நாம் பெறுவது போல, ஆதாமிடமிருந்து நம்முடைய பாவ இயல்பையும் பெறுகிறோம்.
ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சாயலிலும் ரூபத்தின்படியேயும் சிருஷ்டிக்கப்பட்டார்கள் (ஆதியாகமம் 1:26-27; 9:6). இருப்பினும், நாம் ஆதாமின் சாயலிலும் ரூபத்தின்படியேயும் இருக்கிறோம் (ஆதியாகமம் 5:3). ஆதாம் பாவத்தில் விழுந்தபோது, அவருடைய சந்ததியினர் ஒவ்வொருவரும் பாவத்தால் "பாதிக்கப்பட்டுள்ளனர்". தாவீது தனது ஒரு சங்கீதத்தில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு புலம்புகிறார்: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (சங்கீதம் 51:5). அவரது தாயார் அவரை சட்டவிரோதமாக கர்ப்பந்தரித்து தன கர்ப்பப்பையில் தாங்கினார் என்று அர்த்தமல்ல; மாறாக, அவரது தாய் தன் பெற்றோரிடமிருந்தும், அவர்கள் அவர்களுடைய பெற்றோரிடமிருந்தும் ஒரு பாவ இயல்பைப் பெற்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் நமது பெற்றோரிடமிருந்து நமது பாவ இயல்பைப் பெற்றுக்கொண்டிருப்பதுபோலவே, தாவீதும் தன் பெற்றோரிடமிருந்து பாவத்தைப் பெற்றார். நாம் முடிந்தவரை எவ்வளவு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும், பரம்பரையாக மரபு வழியில் பாவத்தை பெற்றுக்கொண்டதன் விளைவாக நாம் இன்னும் பாவிகளாகவே இருக்கிறோம்.
ஜென்ம பாவிகளாக இருப்பதால் நாம் அனைவரும் பாவம் செய்கிறோம். ரோமர் 5:12-ல் உள்ள முன்னேற்றத்தைக் கவனியுங்கள்: பாவம் ஆதாமின் மூலமாக உலகத்திற்குள் நுழைந்தது, மரணம் பாவத்தைப் பின்பற்றுகிறது, மரணம் எல்லா மக்களுக்கும் வருகிறது, எல்லா மக்களும் பாவம் செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஆதாமிடமிருந்து பாவத்தை வாரிசாகப் பெறுகிறார்கள். ஏனென்றால், “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானோம்” (ரோமர் 3:23), நம்முடைய பாவத்தைக் கழுவுவதற்கு நமக்கு ஒரு முழுமையான, பாவமில்லாத பலி தேவை, அது நம்மால் செய்ய இயலாது. அதிர்ஷ்டவசமாக, இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து மீட்பராக இருக்கிறவர், நம்முடைய பாவம் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டுள்ளது, இப்போது “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசியர் 1:7). தேவன், அவருடைய எல்லையற்ற ஞானத்தில், நாம் பெறும் பாவத்திற்கான தீர்வை வழங்கியுள்ளார், அந்த தீர்வு அனைவருக்கும் கிடைக்கிறது: “ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” (அப்போஸ்தலர் 13:38).
English
நாம் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து மரபு வழியில் பாவத்தை பெற்றிருக்கிறோமா?