கேள்வி
இயேசு தேவனா? இயேசு தாம் தேவன் என்று எப்பொழுதாவது கூறினாரா?
பதில்
“நான் தேவனாக இருக்கிறேன்” என்று இயேசு நேரடியாக கூறியதாக வேதாகமத்தில், எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர் தான் தேவன் என்று எந்த இடத்திலும் எடுத்துரைக்கவில்லை என்று அர்த்தமல்ல. உதாரணமாக இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள், “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” (யோவான் 10:30). சாதாரணமாக இதை பார்ப்பதற்கு, இயேசு தன்னைக் குறித்து தேவன் என்று சொன்னதாக இவ்வசனத்தில் தெரியாமல் போகலாம். ஆனால் இயேசு இப்படி சொன்னதும் அதற்கு யூதர்கள் எடுத்துக்கொண்ட விதம் மற்றும் யூதர்களின் பிரதிபலிப்பை கவனியுங்கள்: 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்" (யோவான் 10:33). இந்த வாக்கியத்தை இயேசு கிறிஸ்து கூறியது மூலம், தன்னை தேவனென்று குறிப்பிட்டதாக யூதர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இப்படி பிரதிபலித்ததால், இயேசு அதை மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை. இதிலிருந்து “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” என்று இயேசு கூறியது அவர் தேவனாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்குத்தான் என்பது தெளிவாகிறது. மற்றொரு உதாரணம் யோவான் 8:58, “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்". இங்கேயும் யூதர்கள் அவர் மேல் கல்லெறிந்து கொலை செய்யும்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள், காரணம் மோசேயின் பிரமாணத்தின்படி இது தேவதூஷணம் ஆகும் (லேவியராகமம் 24:15).
“அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்றும் “அந்த வார்த்தை மாம்சமாகி” என்றும் (யோவான் 1:1, 14) குறிப்பிட்டு அப்போஸ்தலனாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை யோவான் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார். இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்த தேவன் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்” என்று அப்போஸ்தலர் 20:28 கூறுகிறது. அப்போஸ்தலர் 20:28, தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை, என்று சூளுரைக்கிறது. ஆகவே, இயேசு தேவனாக இருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே, என் தேவனே” என்று அழைக்கிறார் (யோவான் 20:28). இயேசுகிறிஸ்து அதைத் திருத்தவில்லை மாறாக அதை ஏற்றுக்கொண்டவராகவே இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்து “மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று தீத்து 2:13ல் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய பேதுரு “நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று 2 பேதுரு 1:1ல் குறிப்பிடுகிறார். பிதாவாகிய தேவனும் இயேசுவின் தெய்வீகத்திற்கு சாட்சியாக இருக்கிறார். “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” (எபிரெயர் 1:8). பிதாவாகிய தேவன் இயேசுவை இங்கே “தேவனே” என்று குறிப்பிடுவதிலிருந்து மெய்யாகவே இயேசு தேவனாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவதூதன் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று கூறுவதைப் பார்க்கிறோம் (வெளி. 19:10). வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதையும் ஆராதனையை அவர் ஏற்றுக்கொள்வதையும் பார்க்கிறோம் (மத்தேயு 2:11; 14:33; 28:9, 17; லூக்கா 24:52; யோவான் 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் அவர் கடிந்துகொள்ளவில்லை. இயேசு தேவன் இல்லையென்றால், வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவதூதன் யோவானிடம் கூறியதுபோல, இயேசுவும் என்னை ஆராதிக்க வேண்டாம் தேவனை ஆராதியுங்கள் என்று கூறியிருக்கலாம். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்து இன்னும் பல வேத வசனங்கள் குறிப்பிடுகின்றன.
இயேசு தேவனாக இருக்கவேண்டும் என்பதற்கு மிக முக்கியமான காரணமென்னவெனில், அவர் தேவனாக இல்லாவிட்டால், அவரது மரணம் உலகத்தின் பாவத்தை போக்குவதற்கு விலைக்கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (1 யோவான் 2:2). தேவனாலேயல்லாமல் ஒரு சிருஷ்டியினால் நித்தியமான தண்டனைக்குரிய விலையை செலுத்த முடியாது. அப்படி செலுத்தப்பட்டது என்றால் அது தேவன் ஒருவரால் மட்டுமே சாத்தியம் (2 கொரிந்தியர் 5:21). அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தேவனாக இருக்க வேண்டும். மரித்த இயேசு மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பாவம் மற்றும் மரணத்தின் மேல் வெற்றி சிறந்து நிருபித்தார்.
English
இயேசு தேவனா? இயேசு தாம் தேவன் என்று எப்பொழுதாவது கூறினாரா?