கேள்வி
எரிச்சல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
“எரிச்சல்” என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தும்போது, நம்மிடம் இல்லாத ஒன்றைக் கொண்ட ஒருவரிடம் பொறாமைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் அதைப் பயன்படுத்துகிறோம். இந்த வகையான எரிச்சல் ஒரு பாவம் மற்றும் ஒரு கிறிஸ்தவரின் பண்பு அல்ல; மாறாக, நம்முடைய சொந்த ஆசைகளால் நாம் இன்னும் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்பதை இது காட்டுகிறது (1 கொரிந்தியர் 3:3). கலாத்தியர் 5:26 கூறுகிறது, "வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்."
தேவன் நம்மீது வைத்திருக்கும் சரியான வகையான அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” (1 கொரிந்தியர் 13:4-5). நம் மீதும், நம்முடைய சொந்த ஆசைகளிலும் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவு குறைவாக நாம் தேவன் மீது கவனம் செலுத்த முடிகிறது. சத்தியத்திற்கு நம் இருதயங்களை கடினப்படுத்தும்போது, இயேசுவிடம் திரும்பி நம்மை குணமாக்க அவரை அனுமதிக்க முடியாது (மத்தேயு 13:15). ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும்போது, நம்முடைய இரட்சிப்பின் பலனை அவர் நம்மில் விளைவிப்பார், அதாவது அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22- 23).
எரிச்சல்படுவது என்பது தேவன் நமக்குக் கொடுத்தவற்றில் நாம் திருப்தியடையவில்லை என்பதைக் குறிக்கிறது. நம்மிடம் இருப்பதில் திருப்தியடைந்திருக்கும்படி வேதாகமம் சொல்கிறது, ஏனென்றால் தேவன் ஒருபோதும் விட்டுவிலகமாட்டார், அல்லது கைவிடமாட்டார் (எபிரெயர் 13:5). பொறாமையை எதிர்த்துப் போராடுவதற்கு, நாம் இயேசுவைப் போல அதிகமாவும், நம்மைப் போல குறைவாகவும் மாற வேண்டும். வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் முதிர்ந்த விசுவாசிகளுடன் உள்ள கூட்டுறவு மூலம் நாம் அவரை அறிந்து கொள்ளலாம். நமக்குப் பதிலாக மற்றவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளும்போது, நம் இதயங்கள் மாறத் தொடங்கும். “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).
English
எரிச்சல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?