கேள்வி
தேவனுடைய ராஜ்யத்திற்கும் பரலோக ராஜ்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பதில்
தேவனுடைய ராஜ்யம் மற்றும் பரலோக ராஜ்யம் ஆகியவை வெவ்வேறு காரியங்களைக் குறிக்கின்றன என்று சிலர் நம்பினாலும், இரண்டு சொற்றொடர்களும் ஒரே காரியத்தைக் குறிப்பிடுகின்றன என்பது தெளிவாகிறது. " தேவனுடைய ராஜ்யம்" என்ற சொற்றொடர் 10 வெவ்வேறு புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் 68 முறை வருகிறது, அதே நேரத்தில் "பரலோகராஜ்யம்" என்ற சொல் 32 முறை மட்டுமே வருகிறது, மத்தேயு நற்செய்தியில் மட்டுமே. மத்தேயுவின் பிரத்தியேகமான சொற்றொடரைப் பயன்படுத்தியதன் அடிப்படையிலும், அவருடைய நற்செய்தியின் யூதத் தன்மையின் அடிப்படையிலும், மற்ற புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் உலகளாவிய ராஜ்யத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மத்தேயு ஆயிரமாண்டு ராஜ்யத்தைப் பற்றி எழுதுகிறார் என்று சில மொழிபெயர்ப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இருப்பினும், சொற்றொடரின் பயன்பாட்டை நெருக்கமாக ஆய்வு செய்தால், இந்த விளக்கம் தவறானது என்பதை வெளிப்படுத்துகிறது.
உதாரணமாக, மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபனிடம் பேசுகையில், கிறிஸ்து "பரலோகராஜ்யம்" மற்றும் "தேவனுடைய ராஜ்யம்" ஆகியவற்றை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகிறார். "அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 19:23). அடுத்த வசனத்தில், கிறிஸ்து, “மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வசனம் 24) என்று மீண்டும் வலியுறுத்துகிறார். இயேசு இரண்டு சொற்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண்பிக்கவில்லை, ஆனால் அவற்றை ஒத்ததாக கருதுகிறார்.
மாற்குவும் லூக்காவும் “தேவனுடைய ராஜ்யத்தைப்” பயன்படுத்தினார்கள், அதே உவமையின் இணையான கணக்குகளில் மத்தேயு அடிக்கடி “பரலோகராஜ்யம்” என்னும் சொல்லைப் பயன்படுத்தினார், மத்தேயு 11:11-12 ஐ லூக்கா 7:28 உடன் ஒப்பிடவும்; மத்தேயு 13:11 உடன் மாற்கு 4:11 மற்றும் லூக்கா 8:10; மத்தேயு 13:24 உடன் மாற்கு 4:26; மத்தேயு 13:31 உடன் மாற்கு 4:30 மற்றும் லூக்கா 13:18; மத்தேயு 13:33 உடன் லூக்கா 13:20; மத்தேயு 18:3 உடன் மாற்கு 10:14 மற்றும் லூக்கா 18:16; மற்றும் மத்தேயு 22:2 உடன் லூக்கா 13:29 ஆகியவற்றுடன் ஒப்பிடவும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மத்தேயு "பரலோக ராஜ்யம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார், அதே நேரத்தில் மாற்கு மற்றும்/அல்லது லூக்கா "தேவனுடைய ராஜ்யம்" என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தினார்கள். தெளிவாக, இரண்டு சொற்றொடர்களும் ஒரே விஷயத்தைக் குறிக்கின்றன.
English
தேவனுடைய ராஜ்யத்திற்கும் பரலோக ராஜ்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?