கேள்வி
வழக்குகள் / வழக்கு தொடுத்தல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபை விசுவாசிகளை ஒருவருக்கு விரோதமாக ஒருவர் நீதிமன்றத்திற்கு போகக்கூடாது என்று அறிவுறுத்துகிறார் (1 கொரிந்தியர் 6:1-8). கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் மன்னிக்காமல் தங்களுக்குள் வேற்றுமைகளை சரிசெய்யாமல் இருப்பது ஆவிக்குரியத் தோல்வியையே காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் அநேக பிரச்சனைகளை வைத்துக்கொண்டு அதை அவர்களே சரிசெய்ய முடியாத போது பிறர் ஏன் கிறிஸ்தவர்களாக மாறவேண்டும்? சில காரியங்களுக்கு வழக்கைத் தொடுத்தல் ஒரு சரியான செயலாக இருக்கிறது. வேதாகமத்தின் அடிப்படையில் ஒப்புரவாக்கப்பட்டு (மத்தேயு 18:15-17) பாதிப்பை ஏற்படுத்தியவர் இன்னமும் தவறாக செயல்பட்டால் சில காரியங்களில் வழக்கை தொடர்தல் நியாயமாகும். இதுவும் ஞானத்திற்காக தேவனிடத்தில் மிக அதிகமாக ஜெபித்ததற்கு (யாக்கோபு 1:5) பின்பு மற்றும் ஆவிக்குரிய தலைவர்களின் ஆலோசனையின் படியே செய்யப்படவேண்டும்.
1 கொரிந்தியர் 6:1-6 ன் பின்னணி சபைக்குள்ளாக இருந்த பிரச்சனையான மோதல்களே ஆகும். ஆனால் பவுல் இந்த வாழ்விற்குரிய காரியங்களை குறித்த நியாயத்தீர்ப்பைப பற்றி பேசும்போது அவர் நீதிமன்ற அமைப்பை குறிப்பிடுகிறார். திருச்சபைக்கு புறம்பான வாழ்க்கைக்கு தொடர்புடைய காரியங்களுக்காகவே நீதிமன்ற அமைப்பு இருக்கிறது என்று பவுல் கூறுகிறார். திருசபையின் பிரச்சனைகள் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது மாறாக அவைகள் சபைகுள்ளேயே நியாயந்தீர்க்கப் படவேண்டும்.
அப்போஸ்தலர் 21-22 ஆகிய அதிகாரங்களில் பவுல் தவறாக கைது செய்யப்பட்டதையும் அவர் செய்யாத குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப் பட்டதையும் வாசிக்கிறோம். ரோமர்கள் அவரை கைதுசெய்தனர் மற்றும் “சேனாபதி அவரைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவருக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்திரத்தை அறியும்படிக்கு அவரைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான். அந்தபடி அவர்கள் அவரை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றார்.” பவுல் ரோமரின் சட்டத்தையும் அவருடைய ரோம குடியுரிமையையும் தன்னை காத்துக்கொள்ள பயன்படுத்தினார். சரியான நோக்கம் மற்றும் சுத்தமனசாட்சியின் இருதயத்தோடு நாம் நீதிமன்ற அமைப்பை பயன்படுத்துகிறபோது அதில் தவறு எதுவுமில்லை.
பவுலின் மற்றோரு அறிக்கை, “நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்கிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறதில்லை?” (1கொரிந்தியர் 6:7). இங்கு விசுவாசிகளின் நற்சாட்சியே பவுலின் கரிசனையாக இருக்கிறது. நாம் நீதிமன்றத்திற்கு ஒரு நபரை கொண்டு செல்வதன் மூலம் கிறிஸ்துவை விட்டு விலகச் செய்வதை விட நாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும் நலமாக இருக்கும். சட்டபூர்வமான சண்டையா அல்லது ஒரு மனிதனுடைய நித்திய ஆத்துமாவுக்கான சண்டையா, இதில் எது முக்கியமானது?
சுருக்கமாக, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் திருசபையின் காரியங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா? நிச்சயமாக கூடாது! கிறிஸ்தவர்கள் அவர்களின் தனியுரிமை பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடரலாமா? தவிர்க்கப்பட முடியுமேயானால், தவிர்க்கலாம். கிறிஸ்தவர்கள் அவர்களின் தனியுரிமை பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் கிறிஸ்தவரல்லாதவர்கள் மீது வழக்கு தொடரலாமா? மறுபடியும் தவிர்க்கப்பட முடியுமேயானல் தவிர்க்கலாம். மேலும் சில காரியங்களில் அதாவது நம்முடைய தனிப்பட்ட உரிமையை காப்பாற்ற (உதாரணமாக அப்போஸ்தலனாகிய பவுல்) சட்டபூர்வமான தீர்வை காண்பது சரியானது ஆகும்.
English
வழக்குகள் / வழக்கு தொடுத்தல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?