கேள்வி
ஒரு கிறிஸ்தவன் இராணுவத்தில் பணிபுரிவது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
இராணுவத்தில் பணிபுரிவதைக் குறித்து எண்ணற்ற தகவல்களை வேதாகமம் உள்ளடக்கியுள்ளது. சில வேதாகமப் பகுதிகள் இராணுவத்தை ஒப்பணையாகவே குறிப்பிட்டாலும் சில வேதப்பகுதிகள் இந்த கேள்வியோடு தொடர்புடையதாக இருக்கிறது. இராணுவத்தில் பணிபுரியலாம் அல்லது கூடாது என்பது பற்றி வேதாகமத்தில் குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை. அதே நேரத்தில் இராணுவ வீரராக இருப்பது வேதவாக்கியங்களின் அடிப்படையில் மதிப்புமிகுந்ததாகவே கருதப்படுகிறது என்கிற நிச்சயம் நமக்கு உண்டு மேலும் அத்தகைய சேவை வேதாகமத்தின் உலக கண்ணோட்டத்தோடு நிலையானதாக காணப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.
பழைய ஏற்பாட்டில் (ஆதியாகமம் 14) ஆபிரகாமுடைய சகோதரனாகிய லோத்தை ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேர் அவனுடைய மற்ற நட்பு நாடுகளோடு சிறைப்பிடித்து சென்றதை வாசிக்கிறோம். இதுவே இராணுவ சேவையை குறித்த முதல் உதாரணமாகும். தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்தான். இங்கு ஆயுதம் தாங்கிய படைகள் அப்பாவியை மீட்பதும் மற்றும் பாதுகாப்பதுமாகிய மேலான வேளையில் ஈடுபடுத்தப்பட்டதை பார்க்கிறோம்.
பின்னாட்களில் வரலாற்றில் இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு இராணுவத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம். தேவனே இஸ்ரவேலருடைய யுத்த வீரர், இராணுவ வலிமையை பொருட்படுத்தாமல் அவரே அவர்களை பாதுகாப்பார் என்கிற எண்ணமே இஸ்ரவேலர் அவர்களுக்கான இராணுவத்தை உருவாக்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியது என சொல்லலாம். சவுல், தாவீது, மற்றம் சாலமோன் மூலம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே இஸ்ரவேலருடைய நிலையான இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் நிலையான நிரந்தர இராணுவ அமைப்பினை உருவாக்கியவர் சவுலே ஆவார் (1 சாமுவேல் 13:2; 24:2; 26:2).
சவுல் ஆரம்பித்ததை தாவீது தொடர்ந்தார். உண்மையுள்ள நபர்களை மற்ற பகுதியில் இருந்து இரவலாக பெற்று தாவீது இராணுவத்தை வலிமைப்படுத்தினான் (2 சாமுவேல் 15:19-22) மற்றும் தன்னுடைய தலைமைத்துவத்திலிருந்த இராணுவத்தை சேனாதிபதியாகிய யோவாப்பின் தலைமைக்கு மாற்றினான். தாவீதினுடைய நாட்களில் அம்மோன் போன்ற அண்டைய நாடுகளை வீழத்தக்க விதத்திலே இஸ்ரவேலின் இராணுவம் வலிமையாக தாக்கும் கோட்பாடுகளை கொண்டதாக இருந்தது (2 சாமுவேல் 11:1; 1 நாளாகமம் 20:1-3). 24000 பேர் கொண்ட படையை மாறிமாறி சேவகம் பண்ணுகிறதற்க்கு தாவீது ஏற்படுத்தியிருந்தான் (1 நாளாகமம் 27). மேலும் சாலமோனின் ராஜ்யம் சமாதானமிகுந்ததாகவே இருந்தது அவன் இரதங்களையும் குதிரை வீரர்களையும் இராணுவத்திலே இணைத்தான் (1 இராஜாக்கள் 10:26). இந்த நிரந்தரமான இராணுவம் கி.மு. 586 வரை இருந்தது (சாலமோனின் மரணத்திற்கு பின்பு இராஜீயங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டபோதும்). அதன் பின் இஸ்ரவேலரின் (யூதா) அரசியல் அமைப்பு இல்லாமல் போய்விட்டது.
புதிய ஏற்பாட்டில் நூற்றுக்கு அதிபதி (நூறு இராணுவ வீரர்களுக்கு அதிகாரியானவன்) இயேசுவை அணுகியபோது அவர் ஆச்சரியப்பட்டார். நூற்றுக்கு அதிபதியின் பிரதியுத்திரம் அதிகாரத்தை குறித்த அவனுடைய கருத்து என்ன என்பதையும் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தையும் காட்டுகிறது (மத்தேயு 8:5-13). இயேசு அவனுடைய வேலையை கண்டனம் செய்யவில்லை. புதிய ஏற்பாட்டில் அநேக நூற்றுக்கு அதிபதிகள் கிறிஸ்தவர்களாக, தேவ பயமுள்ளவர்களாக மற்றும் நல்ல குணம்படைத்தவர்களாக பாரட்டப்பட்டுள்ளனர் (மத்தேயு 8:5; 27:54; மாற்கு 15:39-45; லூக்கா 7:2; 23:47; அப்போஸ்தலர் 10:1; 21:32; 28:16).
இடம் மற்றும் பெயர் வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் நம்முடைய இராணுவ சேனை வேதாகமம் சொல்லப்பட்டுள்ள நூற்றுக்கு அதிபதிகளை போலவே மதிப்பிடபடவேண்டும். இராணுவ வீரர்களின் ஸ்தானம் மிகுந்த மதிப்பிற்குரியது. உதாரணமாக பவுல் தன்னுடைய சக கிறிஸ்தவனாகிய எப்பாப்பிரோதீத்துவை உடன் சேவகன் என்று கூறிப்பிடுகிறார் (பிலிப்பியர் 2:25). தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரிப்பதன் மூலம் தேவனில் நாம் உறுதியாக இருக்க முடியும் என்பதை விளக்க வேதாகமம் இராணுவ பதத்தையும் இராணுவ வீரர்களின் அணிகலன்கலாகிய தலைக்கவசம், கேடகம், மற்றும் பட்டயம் போன்றவற்றையும் பயன்படுத்துகிறது (எபேசியர் 6:10-20).
ஆம். நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவத்தில் சேவை செய்வதை பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. தங்களின் குணாதிசயம், கண்ணியம் மற்றும் மரியாதை மூலம் தங்களுடைய நாட்டிற்கு சேவை செய்யும் கிறிஸ்தவ ஆண் மற்றம் பெண்களுக்கு அவர்கள் செய்த குடிமையின் கடமைக்காக பாராட்டும் மரியாதையும் தேவனிடத்தில் கிடைக்கும் என்ற நிச்சயம் நமக்கு உண்டு. இராணுவத்தில் நேர்மையாக சேவை செய்பவர்கள் நம்முடைய மரியாதைக்கும் நன்றிக்கும் பாத்திரர்கள் ஆவர்.
English
ஒரு கிறிஸ்தவன் இராணுவத்தில் பணிபுரிவது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?