கேள்வி
தேவன் இன்றும் அற்புதங்களைச் செய்கிறாரா?
பதில்
அநேகர் தேவன் அவர்களுக்கு அற்புதங்களைச் செய்து அவர் தேவன் தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். "தேவன் ஒரு அதிசயம், அடையாளம், அல்லது ஆச்சரியத்தை செய்தால், நான் நம்புவேன்!" இந்த எண்ணம் வேதவாக்கியம் கூறுகிறதற்கு முரண்படுகின்றது என்கிறபோதிலும், இஸ்ரவேலருக்கு தேவன் அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் செய்தபோது, அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தார்களா? இல்லை, எல்லா அற்புதங்களையும் பார்த்தபோதிலும் இஸ்ரவேலர்கள் தொடர்ந்து கீழ்ப்படியாமல் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள். தேவன் செங்கடலை இரண்டாக பிளந்ததைப் பார்த்த அதே ஜனங்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் குடிமக்களை வெற்றிக்கொண்டு தேசத்தைக் கைப்பற்ற முடியுமா என்று சந்தேகப்பட்டார்கள். இந்த சத்தியம் லூக்கா 16:19-31-ல் விளக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், பாதாளத்தில் இருக்கிற ஒரு மனிதன் ஆபிரகாமிடம் தன்னுடைய சகோதரர்களை எச்சரிப்பதற்காக மரித்தோரிலிருந்து லாசருவைத் திரும்ப அனுப்பும்படி கேட்கிறார். ஆபிரகாம் அந்த மனிதனிடம், “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று” (லூக்கா 16:31) என்று சொன்னார்.
இயேசு எண்ணற்ற அற்புதங்களைச் செய்தார், ஆனாலும் பெரும்பாலோனோர் அவரை நம்பவில்லை. கடந்த காலங்களில் தேவன் செய்ததுபோலவே அற்புதங்களை இந்நாட்களிலும் செய்திருந்தால், அதன் பலன் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். ஜனங்கள் அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு கொஞ்ச காலத்திற்கு தேவனை நம்புவார்கள். அந்த விசுவாசம் ஆழமற்றதாக இருக்கிறபடியினால், எதிர்பாராத அல்லது பயமுறுத்தும் ஏதாவது சம்பவிக்கும்போது அந்த நம்பிக்கை அவர்களை விட்டு மறைந்துவிடும். அற்புதங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாசம் முதிர்ந்த விசுவாசம் அல்ல. மனிதனாக வந்த இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (ரோமர் 5:8), அதன் நிமித்தம் நாம் இரட்சிக்கப்படுவதற்காக (யோவான் 3:16), இதுதான் தேவன் பூமியில் செய்த எல்லா அற்புதங்களையும் விட மேலான மாபெரும் அற்புதமாகும். தேவன் இன்றும் அற்புதங்களைச் செய்கிறார் – ஆனால் அவைகள் அநேகரால் வெறுமனே கவனிக்கப்படாமலும் அல்லது மறுதலிக்கப்பட்டும் போகின்றன. இருப்பினும், நமக்கு இன்று அதிகமான அற்புதங்கள் தேவையில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அதன் மூலம் பெரும் இரட்சிப்பின் அதிசயத்தை விசுவாசிப்பதே நமக்கு தேவையாயிருக்கிறது.
அற்புதங்களின் நோக்கம் அற்புதங்கள் செய்கிறவரின் செயல்திறனையும் அதிகாரத்தையும் அங்கீகரிப்பதாகும். அப்போஸ்தலர் 2:22 சொல்லுகிறது, “இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.” அப்போஸ்தலர்களைப் பற்றியும் இதே காரியம் கூறப்படுகிறது, “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” (2 கொரிந்தியர் 12:12). நற்செய்தியைக் குறித்துப் பேசிய எபிரெயர் 2:4 கூறுகிறது, “அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்திருக்கிறார்.” வேதவாக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் சத்தியம் இப்போது நமக்கு இருக்கிறது. வேதவசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அப்போஸ்தலர்களின் எழுத்துக்களும் இப்போது நமக்குள் இருக்கின்றன. இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும், வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, நம்முடைய விசுவாசத்தின் மூலக்கல்லும் அஸ்திபாரமுகாக இருக்கிறார்கள் (எபேசியர் 2:20). இந்த அர்த்தத்தில், அற்புதங்கள் இனி அவசியம் இல்லை, காரணம் இயேசுவின் மற்றும் அவரது அப்போஸ்தலர்களின் செய்தி ஏற்கெனவே வேதாகமத்தில் சேர்க்கப்பட்டு அது மிகவும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், தேவன் இன்றும் அற்புதங்களைச் செய்கிறார். அதே சமயத்தில், வேதாகம காலங்களில் சம்பவித்தது போலவே இன்றும் அற்புதங்கள் நடக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க கூடாது.
English
தேவன் இன்றும் அற்புதங்களைச் செய்கிறாரா?