கேள்வி
பவுலின் வெவ்வேறு சுவிசேஷப் பயணங்கள் யாவை?
பதில்
புதிய ஏற்பாட்டில் பவுல் மூன்று சுவிசேஷப் பயணங்களை மேற்கொண்டார் என்றும், அது கிறிஸ்துவின் நற்செய்தியை ஆசியா மைனர் மற்றும் ஐரோப்பாவிற்கு பரப்பியது என்பதையும் குறிப்பிடுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு படித்த, முன்னணி யூதரான சவுல் ஆவார். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு எருசலேமில் வாழ்ந்த அவர், கிறிஸ்தவ திருச்சபையை அழிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். முதல் கிறிஸ்தவ இரத்தசாட்சியான ஸ்தேவானைக் கல்லெறிந்து கொலைப்பண்ண அவர் பங்கேற்று அதற்கு சம்மதித்தும் இருந்தார் (அப்போஸ்தலர் 7:55–8:4).
அதிகமான கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைக்க தமஸ்குவுக்குச் சென்றபோது, வழியில் பவுல் கர்த்தரைச் சந்தித்தார். அவர் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசமாக திரும்பினார். இந்த அனுபவத்திற்குப் பிறகு, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது வாழ்க்கையை மாற்றும் மாற்றத்தைப் பற்றி கூறி அவர்களையும் கிறிஸ்துவுக்காய் ஆதாயப்படுத்தும்படி முயன்றார். பலர் அவரை சந்தேகித்து விலக்கினர். எவ்வாறாயினும், பர்னபா போன்ற கிறிஸ்தவர்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரோடு பேசினார்கள். பின்னர் அவர்கள் இருவரும் சுவிசேஷப் பயணத்தில் பங்காளிகளாக மாறினர்.
மூன்று தனித்தனி சுவிசேஷப் பயணங்களில் - ஒவ்வொன்றும் பல வருடங்கள் நீண்ட காலமாக - பவுல் பல கடலோர நகரங்களிலும் வர்த்தக பாதை நகரங்களிலும் இயேசுவின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். இந்த சுவிசேஷப் பயணங்களின் சுருக்கமான விவரணம் பின்வருமாறு.
முதலாவது சுவிசேஷப் பயணம் (அப்போஸ்தலர் 13-14): கிறிஸ்துவை அறிவிக்க தேவனுடைய அழைப்புக்கு பதிலளித்த பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள சிரியாவின் திருச்சபையை விட்டு புறப்பட்டனர். முதலில், அவர்களுடைய சுவிசேஷ முறை என்னவென்றால், நகரங்களில் உள்ள யூத ஜெப ஆலயங்களில் பிரசங்கிப்பதாக இருந்தது. ஆனால் யூதர்களில் பலர் கிறிஸ்துவை நிராகரித்தபோது, புறஜாதியினருக்கு சாட்சியாக அறிவிப்தற்கான தேவனுடைய அழைப்பை சுவிசேஷ யாத்ரீகர்கள் அங்கீகரித்தனர்.
இயேசுவைப் பற்றிய தைரியமான சாட்சியின் காரணமாக, பிறரை துன்புறுத்திய சவுல் பின்பு துன்புறுத்தப்பட்ட பவுலாக மாறினார். இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் இரட்சிப்பின் செய்தியை நிராகரித்தவர்கள் அவரைத் தடுக்கவும் தீங்கு செய்யவும் முயன்றனர். ஒரு நகரத்தில், அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார். ஆனால் தேவன் அவரைக் காப்பாற்றினார். சோதனைகள் மற்றும் அடிதடிகள் மற்றும் சிறைவாசங்கள் மூலம், அவர் கிறிஸ்துவைப் பிரசங்கித்துக்கொண்டே இருந்தார்.
புறஜாதியினருக்கு பவுல் செய்த ஊழியம் யார் இரட்சிக்கப்படக்கூடும் மற்றும் எப்படி இரட்சிக்கப்படக்கூடும் என்பதில் சர்ச்சையைக் கொண்டு வந்தது. தனது முதல் மற்றும் இரண்டாவது சுவிசேஷப் பயணங்களுக்கு இடையில், எருசலேமில் நடந்த ஒரு மாநாட்டில் பவுல் இரட்சிப்பின் வழியைப் பற்றி அதில் விவாதித்தார். இறுதி உடன்பாடு என்னவென்றால், யூத மரபுகளுக்கு அடிபணியாமல் புறஜாதியார்களும் இயேசுவைப் பெற முடியும் என்பதாகும்.
இரண்டாவது சுவிசேஷப் பயணம் (அப்போஸ்தலர் 15:36-18:22): அந்தியோக்கியாவில் மற்றொரு தங்குதலுக்குப் பிறகு, அங்கே திருச்சபையைக் கட்டியெழுப்ப, பவுல் இரண்டாவது சுவிசேஷப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்தார். அவர் தனது முதல் சுவிசேஷப் பயணத்தின்போது சென்ற இடங்களில் ஸ்தாபித்த திருச்சபைகளை மறுபார்வையிட, தன்னுடன் சேருமாறு பர்னபாவிடம் கேட்டார். இருப்பினும், ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிளவுபட வேண்டியதாயிற்று. தேவன் இந்த சர்ச்சையை நேர்மறையாக மாற்றினார், இப்போது இரண்டு சுவிசேஷக் குழுக்கள் உண்டாயின. பர்னபா யோவான் மாற்குவை சேர்த்துக்கொண்டு சீப்புருதீவுக்குச் சென்றார், பவுல் சீலாவை சேர்த்துக்கொண்டு ஆசியா மைனருக்கு சென்றார்.
தேவன் பவுலையும் சீலாவையும் கிரேக்க தேசத்திற்கு திருப்பி, நற்செய்தியை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தார். பிலிப்பு பட்டணத்தில், சுவிசேஷ குழுவானது அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. கிறிஸ்துவுக்காக துன்பப்படுவதில் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் சிறையில் கர்த்தரைத் துதித்துப் பாடினார்கள். திடீரென்று, தேவன் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தி சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை அவர்களின் சங்கிலிகளிலிருந்து விடுவித்தார். ஆச்சரியப்பட்ட சிறை அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் கிறிஸ்துவை விசுவாசித்து நம்பினர், ஆனால் அரசாங்க அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கெஞ்சினர்.
அத்தேனே பட்டணத்திற்குப் பயணம் செய்த பவுல், மார்ஸ் மேடையில் கணிசமான அநேக பார்வையாளர்களுக்குப் பிரசங்கித்தார். மனிதனால் உருவாக்கப்பட்ட சிலைகள் இல்லாமல் அவர்கள் அறிந்து வணங்கக்கூடிய ஒரே உண்மையான தேவனை அவர் அறிவித்தார். மீண்டும், சிலர் அவதூறாக பேசினர், சிலர் நம்பினர்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விசுவாசித்தவர்களுக்கு பவுல் கற்பித்தார், அவர்களுக்கு அங்கே சபைகளை நிறுவினார். இந்த இரண்டாவது சுவிசேஷப் பயணத்தின்போது, பவுல் எல்லா பின்னணியிலிருந்தும் பல சீஷர்களை உருவாக்கினார்: தீமோத்தேயு என்ற இளைஞன், லீதியாள் என்ற வணிகப்பெண், திருமணமான தம்பதியர்களான ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா.
மூன்றாவது சுவிசேஷப் பயணம் (அப்போஸ்தலர் 18:23-20:38): பவுலின் மூன்றாவது பயணத்தின்போது, ஆசியா மைனரில் ஆர்வத்துடன் பிரசங்கித்தார். தேவன் தனது செய்தியை அற்புதங்களால் உறுதிப்படுத்தினார். அப்போஸ்தலர் 20:7-12-ல், துரோவாபட்டணத்தில் பவுல் விதிவிலக்காக நீண்ட பிரசங்கம் செய்ததைப் பற்றி சொல்கிறார். அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். அவன் இறந்துவிட்டான் என்று எல்லோராலும் கருதப்பட்டது, ஆனால் பவுல் அவனை உயிர்ப்பித்தார்.
அமானுஷ்யத்தில் முன்பே ஈடுபட்டிருந்த எபேசுவில் உள்ள புதிய விசுவாசிகள் தங்கள் மந்திர புத்தகங்களை எரித்தனர். மறுபுறம், சிலை தயாரிப்பாளர்கள் இந்த ஒரு உண்மையான தேவன் மற்றும் அவருடைய குமாரன் காரணமாக வியாபாரத்தை இழந்ததில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். அவன் தியானாளைப் புகழ்ந்து நகரமெங்கும் கலவரத்தைத் தொடங்கினான். சோதனைகள் எப்போதும் பவுலைப் பின்தொடர்ந்தன. துன்புறுத்தலும் எதிர்ப்பும் இறுதியில் உண்மையான கிறிஸ்தவர்களை பலப்படுத்தி சுவிசேஷத்தை இன்னும் அதிகமாகப் பரப்பின.
பவுலின் மூன்றாவது சுவிசேஷப் பயணத்தின் முடிவில், அவர் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்படுவார் என்று அவர் அறிந்திருந்தார். எபேசுவில் உள்ள சபைக்கு அவர் எழுதிய இறுதி வார்த்தைகள் கிறிஸ்துவுடனான பக்தியைக் காட்டுகின்றன: “அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” (அப்போஸ்தலர் 20:18-24).
சில வேதாகம அறிஞர்கள் பவுலுடைய நான்காவது சுவிசேஷப் பயணத்தையும் இருப்பதாக காண்கிறார்கள், ஆரம்பகால கிறிஸ்தவ வரலாறு இந்த யோசனையை உறுதிப்படுத்துகிறது. அதே சமயம், வேதாகமத்தில் நான்காவது பயணத்திற்கு வெளிப்படையான சான்றுகள் எதுவும் இல்லை, ஏனெனில் இது அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் முடிந்தபின் நிகழ்ந்திருக்கும்.
பவுலின் அனைத்து சுவிசேஷப் பயணங்களின் நோக்கமும் ஒன்றுதான்: கிறிஸ்துவின் மூலம் பாவத்தை மன்னிப்பதில் தேவனுடைய கிருபையை அறிவித்தல். புறஜாதியினருக்கு நற்செய்தியைக் கொண்டு வந்து திருச்சபையை ஸ்தாபிக்க தேவன் பவுலின் ஊழியத்தைப் பயன்படுத்தினார். திருச்சபைகளுக்கு அவர் எழுதிய நிருபங்கள், புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன, திருச்சபை வாழ்க்கைக்கும் கோட்பாட்டிற்கும் அவைகள் இன்னும் ஆதரிக்கின்றன. அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்த போதிலும், பவுலின் சுவிசேஷப் பயணங்கள் விலையேறப்பெற்றவைகள் ஆகும் (பிலிப்பியர் 3:7-11).
English
பவுலின் வெவ்வேறு சுவிசேஷப் பயணங்கள் யாவை?