கேள்வி
உபத்திரவத்திற்குப் பிறகு சபை எடுத்துக்கொள்ளப்படும் (போஸ்ட்டிரிபுலேஷனிசம்) என்கிற கருத்துப்பாங்கின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?
பதில்
எதிர்கால சாஸ்திரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியையும் (கடைசிக்காலத்தைக் குறித்த ஆய்வு) கருத்தில் கொள்ளும்போது, கிட்டத்தட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த மூன்று காரியங்களை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:
1) உலகம் இதுவரைக் கண்டிராத உபத்திரவத்தின் காலம் இனி வரும்,
2) உபத்திரவத்திற்குப் பிறகு, கிறிஸ்து பூமியில் தமது ராஜ்யத்தை நிலைநாட்ட திரும்பி வருவார்,
3) யோவான் 14:1-3, 1 கொரிந்தியர் 15:51-52, மற்றும் 1 தெசலோனிக்கேயர் 4:16-17 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, சாவுக்கேதுவாகிய நிலையில் இருந்து சாவாமையைத் தரித்துக்கொள்ளும் ஒரு மறுரூபமடைதல் விசுவாசிகளுக்கு இருக்கும். சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் காலத்தைப் பற்றிய ஒரே கேள்வி: உபத்திரவம் மற்றும் இரண்டாவது வருகை தொடர்பாக அது எப்போது சம்பவிக்கும்?
சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் நேரத்தைப் பற்றிய மூன்று முக்கிய கோட்பாடுகள் முன்கூட்டியே (அதாவது உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை), நடுவில் (அதாவது உபத்திரவத்தின் நடுவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை), மற்றும் பின்பாக (அதாவது உபத்திரவத்தின் முடிவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை). இந்த கட்டுரை குறிப்பாக உபத்திரவத்தின் முடிவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையின் பார்வையைப் பற்றியது.
உபத்திரவத்தின் முடிவில், அல்லது இறுதிக்கட்டத்தில், சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று போஸ்ட்டிரிபுலேஷனிசம் போதிக்கிறது. அந்த நேரத்தில், சபை கிறிஸ்துவை மத்திய வானில் சந்திக்கும், பின்னர் பூமியில் கிறிஸ்துவின் ராஜ்யத்தின் தொடக்கத்திற்காக பூமிக்குத் திரும்பும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை (அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க) கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழ்கிறது என்பதாகும். இந்த பார்வையின் படி, சபையானது முழு ஏழு வருட உபத்திரவ காலத்தையும் கடந்து செல்கிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிரேக்க ஆர்த்தோடாக்ஸி மற்றும் பல புராட்டஸ்டன்ட் பிரிவுகள் உபத்திரவத்திற்குப்பின் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்கிற பார்வையை ஆதரிக்கின்றன.
போஸ்ட்டிரிபுலேஷனிசத்தின் ஒரு பலம் என்னவென்றால், கடைசிக் காலங்களில் இயேசு தனது விரிவான சொற்பொழிவில், அவர் "மகா உபத்திரவத்திற்கு" பிறகு திரும்பி வருவார் என்று கூறுகிறார் (மத்தேயு 24:21, 29). மேலும், வெளிப்படுத்தல் புத்தகம், அதன் பல்வேறு தீர்க்கதரிசனங்களுடன், கர்த்தருடைய ஒரு வருகையை மட்டுமே குறிப்பிடுகிறது—அது உபத்திரவத்திற்குப் பிறகு நிகழ்கிறது (வெளிப்படுத்தல் 19-20 அதிகாரங்கள்). வெளிப்படுத்தல் 13:7 மற்றும் 20:9 போன்ற பகுதிகளும் உபத்திரவத்தில் பரிசுத்தவான்கள் இருப்பதற்காக கூறி போஸ்ட்டிரிபுலேஷனிசத்திற்கு ஆதரவளிக்கின்றன. மேலும், வெளிப்படுத்தல் 20:5-ல் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் "முதலாம் உயிர்த்தெழுதல்" என்று அழைக்கப்படுகிறது. இந்த "முதல்" உயிர்த்தெழுதல் உபத்திரவத்திற்குப் பிறகு நடைபெறுவதால், 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் உள்ள சபை எடுத்துக்கொள்ளப்படுதலுடன் தொடர்புடைய உயிர்த்தெழுதல் அதுவரை நிகழ முடியாது என்று போஸ்ட்டிரிபுலேஷனிசம் வலியுறுத்துகிறது.
வரலாற்று ரீதியாக, தேவனுடைய ஜனங்கள் கடுமையான உபத்திரவம் மற்றும் சோதனையின் காலங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதையும் போஸ்ட்ரிபுலேஷனிஸ்டுகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, அவர்கள் கூறுவது யாதெனில், சபையானது கடைசிக்காலத்தின் மகா உபத்திரவத்தை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை. இது தொடர்பாக, போஸ்ட்ரிபுலேஷனிசப் பார்வை "சாத்தானுடைய கோபம்" (அல்லது "மனிதனுடைய கோபம்") வெளிப்படுத்தல் புத்தகத்தில் "தேவனுடைய கோபம்" என்பதிலிருந்து வேறுபடுகிறது. சாத்தானுடைய கோபம் பரிசுத்தவான்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது, மேலும் தேவன் தமது விசுவாசிகளை பரிசுத்தப்படுத்தும் வழிமுறையாக அதை அனுமதிக்கிறார். மறுபுறம், அந்திக்கிறிஸ்து மற்றும் அவனது தேவனற்ற ராஜ்யம் மீது தேவனுடைய கோபம் ஊற்றப்படுகிறது, மேலும் தேவன் தமது ஜனங்களை அந்த தண்டனையிலிருந்து பாதுகாப்பார்.
போஸ்ட்ரிபுலேஷனிசத்தின் ஒரு பலவீனம் என்னவென்றால், கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை, தேவனுடைய கோபத்தை ஒருபோதும் அனுபவிக்க மாட்டார்கள் என்று வேதாகமம் மிகத்தெளிவாக போதிக்கிறது (ரோமர் 8:1). உபத்திரவத்தின் போது சில நியாயத்தீர்ப்புகள் குறிப்பாக இரட்சிக்கப்படாதவர்களை இலக்காகக் கொண்டாலும், பூகம்பங்கள், நட்சத்திரங்கள் விழுவது மற்றும் பஞ்சங்கள் போன்ற பல நியாயத்தீர்ப்புகள் இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் இரட்சிக்கப்படாதவர்கள் என சமமாக எல்லோரையும் பாதிக்கும். இவ்வாறாக, விசுவாசிகள் உபத்திரவ காலத்தை கடந்து சென்று அதனை அனுபவித்தால், அவர்கள் ரோமர் 8:1 க்கு முரணாக, தேவனுடைய கோபத்தை அனுபவிப்பார்கள் என்றாகிவிடும்.
போஸ்ட்ரிபுலேஷனிச பார்வையின் மற்றொரு பலவீனம் என்னவென்றால், அது ஓரளவிற்கு உபத்திரவத்தை ஆவிக்குரிய அர்த்தத்தில் உருவகப்படுத்த வேண்டும். நாம் இப்போது உபத்திரவ காலத்தில் வாழ்கிறோம் என்று பல போஸ்ட்ரிபுலேஷனிச கொள்கைக்காரர்கள் கற்பிக்கிறார்கள்; உண்மையில், அப்போஸ்தலர் 2 இல் பெந்தேகோஸ்தே நாளுக்குப் பிறகு உபத்திரவம் தொடங்கின என்று சிலர் கூறுகிறார்கள். இத்தகையப் போதனை வேதத்தில் வழங்கப்பட்ட உபத்திரவ காலத்தின் தனித்துவத்தை புறக்கணிக்கிறது (மத்தேயு 24:21), இது உலக வரலாற்றில் இதுவரை உலகம் கண்டிராத இணையற்ற உபத்திரவத்தின் காலமாக இருக்கும் . மேலும், உபத்திரவம் தொடர்பான அனைத்து வேதாகமப் பகுதிகளிலும் "சபை" என்ற வார்த்தை இல்லாததை விளக்குவதில் போஸ்ட்ரிபுலேஷனிஸ்டுகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். வெளிப்படுத்தல் 4–21 இல் கூட, வேதத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள உபத்திரவத்தின் மிக நீளமான விளக்கம் உள்ள பகுதியில் கூட, "சபை" என்ற வார்த்தை ஒருமுறை கூட இல்லை. வெளிப்படுத்துதல் 4–21 இல் உள்ள “பரிசுத்தவான்கள்” என்ற வார்த்தைக்கு சபை என்று பொருள் என்று போஸ்ட்ரிபுலேஷனிஸ்டுகள் கருத வேண்டும், இருப்பினும் வேறு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
போஸ்ட்ரிபுலேஷனிசத்தின் இறுதி பலவீனம் மற்ற இரண்டு கோட்பாடுகளால் பகிரப்பட்டுள்ளது: அதாவது, எதிர்கால நிகழ்வுகள் குறித்து வேதாகமம் ஒரு தெளிவான காலவரிசையை கொடுக்கவில்லை. வேதம் ஒரு பார்வையை மற்றொன்றுக்கு வெளிப்படையாகக் கற்பிக்கவில்லை, அதனால்தான் கடைசிக்காலங்கள் மற்றும் தொடர்புடைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு ஒருமித்து ஒத்திசைவாக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
English
உபத்திரவத்திற்குப் பிறகு சபை எடுத்துக்கொள்ளப்படும் (போஸ்ட்டிரிபுலேஷனிசம்) என்கிற கருத்துப்பாங்கின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?