settings icon
share icon
கேள்வி

யாபேஸின் ஜெபம் என்றால் என்ன?

பதில்


யாபேஸின் ஜெபம் ஒரு வம்சவரலாற்றில் உள்ள ஒரு வரலாற்றுக் குறிப்பில் காணப்படுகிறது: "யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்” (1 நாளாகமம் 4:9-10). டேவிட் கோப் மற்றும் டாக்டர் புரூஸ் வில்கின்சன் எழுதிய The Prayer of Jabez: Breaking through the Blessed Life (2000) என்ற புத்தக வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஜெபம் எல்லோராலும் நன்கு அறியப்பட்டது.

யாபேஸைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, நமக்கு தெரிந்ததெல்லாம் அவர் யூதாவின் வம்சாவளியை சேர்ந்தவர், அவர் ஒரு மதிப்புமிக்க மனிதன், மேலும் அவரது தாயார் அவருக்கு "யாபேஸ்" ("துக்ககரமான" அல்லது "துக்கத்தை உண்டாக்குபவன்") என்று பெயரிட்டார், ஏனெனில் அவருடைய பிறப்பு வலிமிகுந்ததாக இருந்தது. யாபேஸ் தனது ஜெபத்தில், பாதுகாப்பிற்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் தேவனிடம் மன்றாடுகிறார். வார்த்தைகளில் ஒரு ஜாலத்தைப் பயன்படுத்தி, "துக்கத்தின் மனிதனாகிய" யாபேஸ், தனது பெயரால் நினைவுகூறப்பட்ட மற்றும் முன்னறிவிக்கப்பட்ட அந்த துக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் கேட்கிறார்.

1 நாளாகமம் 4:10 இல் உள்ள யாபேஸின் ஜெபத்தில் நான்கு காரியங்களுக்கான அவசர விண்ணப்பம் உள்ளது: 1) தேவனுடைய ஆசீர்வாதம். இஸ்ரவேலின் தேவன் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரம் என்பதை யாபேஸ் ஒப்புக்கொள்கிறார், மேலும் அவர் தேவனிடம் அவருடைய கிருபையைக் கேட்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த வேண்டுகோள், ஆபிரகாம் மற்றும் அவரது சந்ததியினருக்கு ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 22:17) தேவனுடைய வாக்குறுதியின் அடிப்படையில் குறைந்தது ஒரு பகுதியாக இருந்தது.

2) எல்லையின் விரிவாக்கம். யாபேஸ் தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றி மற்றும் செழிப்புக்காக ஜெபம் செய்கிறார், மேலும் அது அவரது வாழ்க்கையின் அபிவிருத்தியால் குறிக்கப்படுகிறது.

3) தேவனுடைய கரம் அவரோடு இருப்பது. தேவனுடைய வழிகாட்டுதலையும் அவருடைய பலத்தையும் தனது தினசரி இருப்பில் தெளிவாகக் கேட்க யாபேஸின் வழி இதுவாகும்.

4) தீங்கிலிருந்து பாதுகாப்பு. இவ்வாறு ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார்: “பரலோகத்திலிருக்கிற பிதா . . . தீமையிலிருந்து எங்களை இரட்சியும்” (மத்தேயு 6:9, 13). யாபேஸ் தனது பாதுகாவலராக நம்பிக்கையுடன் தேவனைப் பார்க்கிறார்.

துக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே யாபேஸின் குறிக்கோளாக இருந்தது, கடைசியாக நாம் அவரைப் பற்றிப் படிப்பது தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டு பதிலளித்தார் என்பதே. ஞானத்திற்கான சாலமோனின் தாழ்மையான ஜெபத்தைப் போலவே (1 இராஜாக்கள் 3:5-14), ஆசீர்வாதத்திற்காக யாபேஸின் பக்தியுள்ள ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. யாபேஸ் அனுபவித்த வெற்றி அவனது தொடக்கத்தின் சோகத்தை விட அதிகமாக இருந்தது. யாபேஸின் ஜெபம் யாபேஸின் பெயரை வென்றது.

நம் வாழ்வில் ஜெபத்திற்கு எப்படி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கு யாபேஸின் ஜெபம் ஒரு சிறந்த உதாரணம். தேவைப்படும் நேரத்தில் நமது உதவிக்காக நாம் எப்பொழுதும் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும், மேலும் நமது கோரிக்கைகளை கிருபையின் சிங்காசனத்திற்கு நேராக எடுத்துச் செல்லலாம் (எபிரேயர் 4:16). அன்னா, யோனா, எசேக்கியா, பவுல் ஆகியோரின் ஜெபங்களோடு - நிச்சயமாக நம்முடைய கர்த்தருடைய மாதிரி ஜெபமும் (மத்தேயு 6:9-13) - யாபேஸின் ஜெபம், தேவனுடைய பிள்ளை ஒரு உயர்ந்த மாட்சிமையை தாழ்மையுடன் அணுகுவதற்கான அற்புதமான நிகழ்வை வழங்குகிறது. விசுவாசம், மற்றும் தேவனுடைய நற்குணத்தின் மீது நம்பிக்கை.

English



முகப்பு பக்கம்

யாபேஸின் ஜெபம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries