கேள்வி
இரட்சிப்பின் ஜெபம் என்றால் என்ன?
பதில்
"என் இரட்சிப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நான் ஜெபிக்கத்தக்க ஒரு ஜெபம் இருக்கிறதா?" என்று பலர் கேட்கிறார்கள். ஜெபத்தைச் சொல்லி அல்லது சில வார்த்தைகளை சொல்வதன் மூலம் இரட்சிப்பு கிடைப்பதில்லை என்பதை நாம் நம் நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஒரு ஜெபம் செய்ததன் மூலம் ஒரு நபர் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டதாக வேதாகமத்தில் எங்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஒரு ஜெபத்தை ஜெபிப்பது வேதாகமத்தின் படியான இரட்சிப்பின் வழி அல்ல.
இரட்சிப்பின் வேதாகம முறை இயேசு கிறிஸ்துவில் வைக்கிற விசுவாசமாக இருக்கிறது. யோவான் 3:16 நமக்கு சொல்லுகிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இரட்சிப்பானது விசுவாசத்தினால் (எபேசியர் 2:8), இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலமும் (யோவான் 1:12), மற்றும் இயேசுவை மட்டுமே முழுமையாக நம்புவதன் மூலமாகவும் (யோவா. 14:6; அப்போஸ்தலர் 4:12) வருகிறதேயல்லாமல், ஜெபம் செய்வதன் மூலம் இரட்சிப்பு வருவதில்லை.
இரட்சிப்பின் வேதாகமச் செய்தியானது எளிய, தெளிவான மற்றும் அதே நேரத்தில் ஆச்சரியமான ஒன்றாகவும் இருக்கிறது. நாம் அனைவரும் தேவனுக்கு எதிராக பாவம் செய்திருக்கிறோம் (ரோமர் 3:23). இயேசு கிறிஸ்துவையல்லாமல், பாவமில்லாத ஒரு முழு வாழ்வு வாழ்ந்த எவரும் இப்புவியில் இல்லை (பிரசங்கி 7:20). நம்முடைய பாவத்தின் காரணமாக, தேவனிடத்திலிருந்து நாம் நியாயத்தீர்ப்பைப் பெற்றிருக்கிறோம் - அதாவது மரணம் (ரோமர் 6:23). நம்முடைய பாவம் மற்றும் அதனுடைய தகுதியுள்ள தண்டனையினால், நாம் தேவனோடு சரியான உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்கு எதுவும் நம்மால் செய்ய முடியாது. தேவன் நம்மீது அன்பு காட்டியதன் விளைவாக, தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நபரில் ஒரு மனிதனானார். இயேசு ஒரு பரிபூரண வாழ்வை வாழ்ந்து, எப்போதும் சத்தியத்தை போதித்தார். எனினும், மனிதகுலம் இயேசுவை நிராகரித்து அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது. அந்த கொடூரமான செயல் உண்மையான ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றது என்றாலும், நமக்கு அதினால் இரட்சிப்பு கிடைத்தது. இயேசு நம் ஸ்தானத்தில் மரித்தார். அவர் நம்முடைய பாவத்தின் சுமையையும் நியாயத்தீர்ப்பையும் தன்மேல் எடுத்துக்கொண்டார் (2 கொரிந்தியர் 5:21). இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் (1 கொரிந்தியர் 15), பாவத்திற்காக செலுத்தப்படும் விலைக்கிரயம் போதுமானது என்பதை நிரூபித்து, பாவம் மற்றும் மரணத்தை அவர் மேற்கொண்டார். இயேசுவினுடைய பலியின் விளைவாக, தேவன் நமக்கு இரட்சிப்பை ஈவாக அளிக்கிறார். நம்முடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும்படியாகவும் (அப்போஸ்தலர் 17:30), மற்றும் நம்முடைய பாவங்களின் தண்டனையை முழுமையாக செலுத்துவதற்காக கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கும் (1 யோவான் 2:2) தேவன் நம்மை அழைக்கிறார். ஒரு பரிசுத்த ஜெபத்தை ஜெபிப்பதன் மூலம் அல்ல, தேவன் நமக்கு அளிக்கிற வரத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் இரட்சிப்பு பெறப்படுகிறது.
இப்போது, இது இரட்சிப்பில் ஜெபம் இடம்பெறாது மற்றும் அதன் பங்கு ஒன்றுமில்லை என்கிற அர்த்தம் இல்லை. நீங்கள் நற்செய்தியை அறிந்திருந்தால், அது உண்மையாக இருக்கிறதென்று நம்பினால், இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டால், ஜெபத்தில் தேவனோடு அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவது நல்லது. ஜெபத்தின் மூலமாக தேவனுடன் தொடர்புகொள்வது, இயேசுவைப் பற்றி உண்மைகளை ஏற்றுக்கொண்டு அவரை முழுமையாக இரட்சகராக நம்பிக்கை வைப்பதற்கு ஒரு வழியாக இருக்கிறது. ஜெபம் என்பது இயேசுவில் மட்டுமே விசுவாசம் வைப்பதற்கு ஒரு பாலமாக இருக்கிறது.
மீண்டுமாக, ஒரு ஜெபத்தை ஜெபிப்பதில் உங்கள் இரட்சிப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஒரு ஜெபத்தை திரும்ப சொல்லுவதால் உங்களை இரட்சித்துக்கொள்ள முடியாது! நீங்கள் இயேசு மூலம் கிடைக்கும் இரட்சிப்பை பெற விரும்பினால், அவரில் உங்கள் நம்பிக்கை வையுங்கள். உங்கள் பாவங்களுக்காக போதுமான தியாகம் அவரது மரணமே என்று முழுமையாக நம்புங்கள். உங்கள் இரட்சகராக அவரை மட்டுமே முற்றிலுமாக சார்ந்துகொள்ளுங்கள். இதுதான் வேதாகம முறையிலான இரட்சிப்பாகும். உங்கள் இரட்சகராக இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், எல்லா வகையிலும், தேவனிடம் ஒரு ஜெபத்தைக் கூறுங்கள். இயேசுவுக்கு நீங்கள் எந்த அளவிற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை தேவனிடம் சொல்லுங்கள். அவருடைய அன்பிற்கும் தியாகத்திற்கும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் பாவங்களுக்காக மரித்து உங்களுக்கு இரட்சிப்பை அளித்ததற்காக இயேசுவுக்கு நன்றி செலுத்துங்கள். இதுதான் இரட்சிப்புக்கும் ஜெபத்திற்கும் இடையில் உள்ள வேதாகம தொடர்பு ஆகும்.
நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.
English
இரட்சிப்பின் ஜெபம் என்றால் என்ன?