settings icon
share icon
கேள்வி

ஒரே காரியத்திற்காக திரும்ப திரும்ப நாம் ஜெபிப்பது ஏற்புடையதா அல்லது நாம் ஒரு காரியத்திற்காக ஒரேயொரு முறை மட்டும்தான் ஜெபிக்க வேண்டுமா?

பதில்


நாம் தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருப்பதன் முக்கியதுவத்தைக் குறித்த இயேசு லூக்கா 18:1-7ல் சொன்ன ஒரு உவமையானது விளக்குகிறது. தனது எதிராளிக்கு விரோதமாய் இருந்த வழக்கை தீர்க்கும்படி ஒரு அநீதியுள்ள நியாயாதிபதியினிடம் ஒரு விதவை வந்தாள் என்று அவர் கூறுகிறார். அவள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தபடியால், அந்த நியாயாதிபதி அவளுக்கு இறங்கினான். இந்த உவமையின் மூலம் இயேசு சொல்லுகின்றது என்னவென்றால், ஒருவர் தொடர்ந்து விண்ணப்பம் செய்வதினால் ஒரு அநீதியுள்ள நியாயாதிபதியே இறங்கி அவளுக்கு வேண்டியதை செய்கிறான் என்றால், நம்மை நேசிக்கும் தேவன் தம்மால் “தெரிந்துகொண்டவர்கள்” தொடர்ந்து அவரிடத்தில் ஜெபிப்பதைக் கேட்டு அவர் நமக்கு பதிலளிப்பது அதிக நிச்சயமல்லவா? என்பதேயாகும் (வசனம் 7). சிலர் இந்த உவமையை தவறாக புரிந்துகொண்டு, நாம் ஒரு காரியத்திற்காக திரும்பத் திரும்ப ஜெபிப்பதால், தேவனை கட்டாயப்படுத்துவதால் நமக்கு தருகின்றார் என்று என்ணுகின்றனர். ஆனால் அப்படியல்ல. மாறாக, தேவன் நமக்காக வழக்காடுவார், பழிவாங்குவார், தீங்கானதை சரிசெய்வார், நியாயம் செய்வார், எதிராளிகளிடமிருந்து தப்புவிப்பார் என்றெல்லாம் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் இவைகளை ஏன் செய்கிறார் என்றால், அவரது நியாயம், பரிசுத்தம், மற்றும் பாவத்தின் மேல் இருக்கும் அவருடைய வெறுப்பை வெளிப்படுத்தவே அப்படி செய்கிறார். அவர் ஜெபதிற்குப் பதில் கொடுப்பதினால், அவர் தமது வாக்குதத்தங்களை நிறைவேற்றுகிறார் மற்றும் அவரின் வல்லமையையும் வெளிப்படுத்துகிறார்.

இதே போன்று மற்றொரு உவமையையும் இயேசு லூக்கா 11:5-12ல் கொடுக்கிறார். அநீதியுள்ள நியாயாதிபதியைப்போல, ஒரு மனிதன் தன்னை வருத்திக்கொண்டு தனது நண்பரின் தேவையை சந்திக்க முன்வருவான் என்றால், எவ்வளவு அதிகமாய் நமது தேவைகளை தேவன் சந்திப்பார் என்று இந்த உவமை காட்டுகிறது. ஏனென்றால் எந்த விண்ணப்பமும் அவருக்கு தொந்தரவானது அல்ல. இங்கேயும், நாம் கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்பதினால் நாம் கேட்பதை பெற்றுக்கொள்வோம் என்று தேவன் வாக்குப்பண்ணவில்லை. தேவன் தமது பிள்ளைகளுக்கு கொடுக்கும் செய்யும் வாக்குத்தத்தம் என்னவென்றால், அவர் நமது தேவைகளை சந்திப்பார், நமது இச்சை/ஆசைகளையல்ல. நமக்கு என்ன தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறதை விட அவர் அதிகமாய் அறிந்திருக்கிறார். இந்த வாக்குதத்தம் மத்தேயு 7:7-11 மற்றும் லூக்கா 11:13 ஆகிய வசனங்களில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது; அந்த “நல்ல ஈவு” என்று மேலும் விவரிக்கப்பட்டுள்ளது பரிசுத்த ஆவியானவர் ஆகும்.

இந்த இரண்டு வேதப்பகுதிகளும் நம்மை ஜெபிக்கவும் தொடர்ந்து ஜெபிக்கவும் ஊக்குவிக்கிறது. நாம் தேவனிடத்தில் கேட்டுக்கொண்டதை திரும்பவும் அவரிடம் கேட்பதில் தவறில்லை. நாம் ஜெபிப்பது தேவனின் சித்தத்திற்கு உட்பட்டதாக இருந்தால் (யோவான் 5:14-15), அவர் நமக்கு அதை தரும் வரைக்கும் அல்லது அந்த விருப்பத்தை நம்மிலிருந்து எடுத்து போடும் வரைக்கும், நாம் தொடர்ந்து தேவனிடத்தில் அதற்காக ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும். சில வேளைகளில் நாம் கேட்கும் காரியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொறுமையோடும் நீடிய சாந்தத்தோடும் இருக்கவேண்டும் என்பதை போதிப்பதற்காக தேவன் அவைகளுக்கு பதிலளிக்காமல் இருக்கலாம். சில நேரம் நாம் கேட்பது அதை தேவன் நம் வாழ்வில் நாம் பெற்றுக்கொள்வதற்காக நமக்கு அருளுவதற்கு அவருக்கு ஏற்ற சமயம் இல்லாமல் இருக்கலாம். சில வேளைகளில் நாம் கேட்பது தேவ சித்தத்திற்கு உட்பட்டதாக இல்லாதிருந்தால், அதற்கு தேவன் “இல்லை” என்றுதான் பதில் சொல்வார். ஜெபம் என்பது நாம் தேவனிடத்தில் நமது விண்ணப்பங்களை ஏறெடுப்பது மட்டுமல்ல, அது தேவன் தமது சித்தத்தை நமது இருதயங்களில் வெளிப்படுத்துவதுமாகும். உங்கள் விண்ணப்பங்களை தேவன் கேட்டு நிறைவேற்றும் வரை அல்லது நாம் கேட்பது அவரின் சித்தமல்ல என்று அவர் நம்மை உணர்த்தும் வரை, தொடர்ந்து கேளுங்கள், தொடர்ந்து தட்டுங்கள், மற்றும் தொடர்ந்து தேடுங்கள்.

English



முகப்பு பக்கம்

ஒரே காரியத்திற்காக திரும்ப திரும்ப நாம் ஜெபிப்பது ஏற்புடையதா அல்லது நாம் ஒரு காரியத்திற்காக ஒரேயொரு முறை மட்டும்தான் ஜெபிக்க வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries