கேள்வி
பொது இடத்தில் ஜெபிக்கும் வெளியரங்கமான ஜெபம் வேதாகமத்தின்படியானதா? பொது இடத்தில் ஜெபம் செய்வது சரியா?
பதில்
பொது இடத்தில் ஜெபிக்கும் ஜெபம் என்பது பல கிறிஸ்தவர்கள் சந்திக்கிற ஒரு பிரச்சினை. பல விசுவாசிகள் வேதாகமத்தில் பொதுவில் ஜெபிப்பதாக அறியப்பட்டதால், இயேசுவைப் போலவே, பொது ஜெபத்தில் ஜெபிப்பது எந்த தவறும் இல்லை. பல பழைய ஏற்பாட்டு தலைவர்கள் தேசத்திற்காக வெளியரங்கமாக ஜெபித்தனர். சாலமோன் முழு தேசத்தின் முன்பாக அவர்களுக்காகவும் தனக்காகவும் ஜெபம் செய்தார். இந்த ஜெபம் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிக்க எதுவும் இல்லை (1 இராஜாக்கள் 8:22-23). பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர்கள் திரும்பிய பிறகு, இஸ்ரவேலர்கள் மெய்யான தேவனுடைய ஆராதனையை விட்டு விலகியதை அறிந்த எஸ்றா மிகவும் வியப்படைந்தார், அவர் கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக ஜெபித்து கதறி அழுதார். அவருடைய ஜெபம் மிகவும் ஊக்கமானதாக இருந்தது, அது "இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை" அவருடன் கூடி, கதறி அழுவதற்கு தூண்டியது (எஸ்றா 10:1).
இருப்பினும், பகிரங்கமாக ஜெபிப்பதற்காக தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் அல்லது துன்புறுத்தப்படவும் கூடும் என்பதை அன்னாள் மற்றும் தானியேலின் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன. எல்லா ஜெபங்களையும் போலவே, பொது இடத்தில் வெளிப்படையாக ஜெபிக்கும் ஜெபமும் சரியான அணுகுமுறை மற்றும் நோக்கத்துடன் வழங்கப்பட வேண்டும். பல வேத உதாரணங்களிலிருந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் தேவனை மதிக்கும் பொது ஜெபத்தின் தெளிவான சித்திரம் வருகிறது.
தீர்க்கதரிசியான சாமுவேலின் தாயான அன்னாள், வேதாகமக் காலங்களில் பெண்களுக்கு குழந்தை இல்லாமை கொண்டு வந்த அவமானத்தையும் துன்புறுத்தலையும் சகித்துக்கொண்டு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தாள் (1 சாமுவேல் 1:1-6). அவள் ஒரு குழந்தையைத் தரும்படி தேவனிடம் மன்றாடுவதற்காக வழக்கமாக ஆலயத்திற்குச் சென்றாள், "மனங்கசந்து, மிகவும் அழுது" உருக்கமாக ஜெபித்தாள். அவளுடைய ஜெபம் மிகவும் இருதயப்பூர்வமாக இருந்தது, ஆசாரியனாகிய ஏலி அவள் குடித்து குடிபோதையில் இருப்பதாக உணர்ந்தார் (1 சாமுவேல் 1:10-16).
பொது ஜெபம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கான உதாரணம் இது. அன்னாளின் ஜெபம் நியாயமானது, அவளுடைய இருதயம் சரியான இடத்தில் நிதானமாய் இருந்தது. அவள் தன் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கவில்லை, ஆனால் வெறுமனே மனச்சோர்வடைந்தாள், ஜெபம் செய்ய வேண்டிய அவசியத்தில் மூழ்கினாள். அவள் குடிபோதையில் வெறித்து இருந்ததாக ஏலி நினைத்தான், ஆனால் அது அவனுடைய தவறு, அவளுடைய பாவம் அல்ல.
தானியேலின் வெளியரங்கமான பொது ஜெபம், அவரது எதிரிகள் அவரைத் துன்புறுத்துவதற்கும் அவரைக் கொல்ல முயற்சிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக இருந்தது. தரியு ராஜாவின் கீழுள்ள தேசாதிபதிகளில் ஒருவராக தானியேல் தனது கடமைகளில் சிறந்து விளங்கினார், அந்த அளவிற்கு ராஜா அவரை அனைத்து ராஜ்யத்திற்கும் அதிகாரியாக ஏற்ப்படுத்த நினைத்தார் (தானியேல் 6:1-3). இது மற்ற தேசாதிபதிகளை கோபப்படுத்தியது மற்றும் அவர்கள் தானியேலை இழிவுபடுத்த அல்லது அழிக்க ஒரு வழியைத் தேடினார்கள். அடுத்த முப்பது நாட்களுக்கு ராஜாவைத் தவிர வேறு யாரிடமும் தனது குடிமக்கள் பிரார்த்தனை செய்வதைத் தடைசெய்யும் ஆணையை வெளியிடுமாறு தரியுவை அவர்கள் ஊக்குவித்தார்கள். அதற்குக் கீழ்ப்படியாததற்கான தண்டனை சிங்கங்களின் குகைக்குள் தள்ளப்பட வேண்டும். இருப்பினும், தானியேல் தேவனிடம் மிகவும் வெளிப்படையாக ஜெபிப்பதைத் தொடர்ந்தார், அவருடைய படுக்கையறை ஜன்னலில் அவர் அவ்வாறு செய்வதைக் காண முடிந்தது. தானியேல் மற்றவர்களுக்குத் தெரியும் விதத்தில் வெளியரங்கமாக ஜெபித்தார், ஆனால் அவருடைய எதிரிகளுக்கு அவரை வெளிப்படுத்தினார். இருப்பினும், தேவன் தனது ஜெபத்தால் மதிக்கப்படுகிறார் என்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார், எனவே அவர் தனது வழக்கத்தை விட்டுவிடவில்லை. கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற தனது விருப்பத்திற்கு மேலாக மனிதர்களின் கருத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் அவர் வைக்கவில்லை.
மத்தேயு 6:5-7 இல், நம்முடைய ஜெபங்கள் நீதியானவை என்பதை உறுதிப்படுத்த இயேசு இரண்டு வழிகளைக் கூறுகிறார். முதலாவதாக, ஜெபங்கள் மற்றவர்களால் நீதியாகவோ அல்லது “ஆவிக்குரியதாகவோ” பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக இருக்கக்கூடாது. இரண்டாவதாக, ஜெபங்கள் இருதயத்திலிருந்து வருகிற உண்மையானதாக இருக்க வேண்டும், மேலும் வீண் வார்த்தைகளை திரும்பத் திரும்ப அல்லது "வெற்றுச் சொற்றொடர்கள்" அல்ல. இருப்பினும், ஜனங்கள் பொது இடங்களில் ஜெபிப்பதைக் காட்டும் மற்ற வேதவசனங்களுடன் ஒப்பிடும்போது, இது எப்போதும் தனியாக ஜெபிக்க வேண்டும் என்ற அறிவுரை அல்ல என்பதை நாம் அறிவோம். பாவத்தைத் தவிர்ப்பதே பிரச்சினை. நீதிமான்களாகக் காணப்பட வேண்டும் என்ற ஆவலுடன் போராடுபவர்களும், பொது ஜெபத்தின் போது சோதனைகள் ஊடுருவுவதைக் கவனிப்பவர்களும் இயேசுவின் பரிந்துரையைக் கவனத்தில் கொண்டு அந்தரங்கத்தில் சென்று, வெளியரங்கமாய் பலனளிக்கும் பிதாவிடம் ஜெபிப்பது நல்லது. பரிசேயர்களின் விருப்பம் மனிதர்களால் நீதிமான்களாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதுதான், உண்மையில் தேவனிடம் பேசுவது அல்ல என்பதை இயேசு அறிந்திருந்தார். ஜெபத்தைப் பற்றிய இந்த கூற்று, கண்டித்து உணர்த்துகிறது என்று கருதப்பட்டது மற்றும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அறிவுறுத்துகிறது, ஆனால் எல்லா ஜெபங்களும் அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
பொது ஜெபம் தேவனை கனப்படுத்தும், தன்னலமற்ற மற்றும் தேவனிடம் பேசுவதற்கான உண்மையான விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும், மனிதர்களிடம் அல்ல. இந்தக் கொள்கைகளை மீறாமல் நாம் பகிரங்கமாக ஜெபிக்க முடிந்தால், நாம் பகிரங்கமாக ஜெபிப்பது நல்லது. எவ்வாறாயினும், நம் மனசாட்சி அதைத் தடைசெய்தால், இரகசியமாக செய்யப்படும் ஜெபத்தில் ஜெபிக்கலாம், காரணம் அந்தரங்கத்தில் இரகசியமாய் ஜெபிக்கும் ஜெபத்திற்கு குறைவான பலன் என்று ஒன்றும் இல்லை.
English
பொது இடத்தில் ஜெபிக்கும் வெளியரங்கமான ஜெபம் வேதாகமத்தின்படியானதா? பொது இடத்தில் ஜெபம் செய்வது சரியா?