கேள்வி
தேவனைக் கேள்வி கேட்பது தவறா?
பதில்
நாம் தேவனைக் கேள்வி கேட்கலாமா, இல்லையா என்பதில் அல்ல மாறாக எந்த விதத்தில், எந்த காரணத்திற்காக நாம் அவரைக் கேள்வி கேட்கிறோம் என்பதுதான் விஷயமாக இருக்கிறது. தேவனைக் கேள்வி கேட்பது என்பது தவறு அல்ல. கர்த்தருடைய திட்டத்தின் நேரம் மற்றும் அமைப்பு பற்றிய விஷயத்தில் தீர்க்கதரிசியான ஆபகூக் தேவனிடம் கேள்விகளைக் கேட்டார். ஆபகூக் கேட்டக் கேள்விகளுக்கு தேவன் கடிந்துகொள்ளாமல் அவருடைய கேள்விகளுக்குக் பொறுமையாக பதில் அளிக்கிறார், மற்றும் தீர்க்கதரிசி தன்னுடைய புத்தகத்தின் இறுதியில் தேவனைப் புகழ்ந்து பாடுகிறார். சங்கீத புத்தகத்தில் பல கேள்விகள் தேவனுக்கு முன்பாக வைக்கப்படுகின்றன (சங்கீதம் 10, 44, 74, 77). இவைகள், தேவனுடைய தலையீட்டிற்கும் இரட்சிப்புக்குமாயுள்ள துன்புறுத்துதலின் கூக்குரல்கள் ஆகும். நாம் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் தேவன் நாம் விரும்புகிற விதத்தில் பதிலளிப்பதில்லை என்றாலும், ஆழ்ந்த இதயத்திலிருந்து கேட்கப்படுகிற ஒரு நேர்மையான கேள்வியானது தேவனால் வரவேற்பைப் பெறுகிறது என்று நாம் முடிவுக்கு வரலாம்.
நேர்மையற்ற கேள்விகள், அல்லது ஒரு மாய்மாலமுள்ள இதயத்திலிருந்து வரும் கேள்விகள் என்பது வேறு விஷயம். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபிரெயர் 11:6). சவுல் ராஜா தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன பிறகு, அவருடைய கேள்விகள் யாவும் பதிலளிக்கப்படாதவைகளாக போயின (1 சாமுவேல் 28:6). தேவனுடைய நற்குணத்தை நேரடியாகக் கேள்வி கேட்பதைவிட தேவன் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை ஏன் அனுமதித்திருக்கிறார் என்பது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. சந்தேகங்களைக் கொண்டிருப்பது என்பது தேவனுடைய இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தி அவருடைய பண்புகளை சந்தேகிப்பது என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். சுருக்கமாக, ஒரு நேர்மையான கேள்வி பாவம் அல்ல, ஆனால் ஒரு கசப்பான, நம்பத்தகாத, அல்லது கலகத்தனமான இதயம் பாவமாக இருக்கிறது. கேள்விகளால் தேவன் பயமுறுத்தப்படவில்லை. அவருடன் நெருங்கிய ஐக்கியத்தை அனுபவிக்க தேவன் நம்மை அழைக்கிறார். நாம் “தேவனைக் கேள்விக்கேட்கும்போது” அது மனத்தாழ்மையுள்ள மனநிலையிலிருந்தும் வெளிப்படையான மனநிலையிலிருந்தும் வரவேண்டும். நாம் தேவனைக் கேள்வி கேட்கலாம், ஆனால் அவருடைய பதிலில் நாம் உண்மையிலேயே அக்கறை காட்டாவிட்டால், நாம் ஒரு பதிலையும் எதிர்பார்க்கக்கூடாது. தேவன் நம் இதயங்களை அறிந்திருக்கிறார், நமக்கு உண்மையிலேயே அவரைத்தேடி நமக்கு வெளிச்சம் அளிக்கும்படி கேட்கிறோமா என்பதை அவர் அறிந்திருக்கிறார். நம்முடைய இதய மனப்பான்மை தான் நாம் தேவனைக் கேள்வி கேட்பது சரியானதா அல்லது தவறா என்பதை தீர்மானிக்கிறது.
English
தேவனைக் கேள்வி கேட்பது தவறா?