settings icon
share icon
கேள்வி

உங்கள் சொந்த உயிரைக் காப்பாற்றுவதற்காக இரகசியமான ஒரு கிறிஸ்தவனாக இருப்பது தவறா?

பதில்


பழிவாங்கப்படுதலுக்கு அல்லது மரணத்திற்கு பயந்து இரகசிய கிறிஸ்தவர்களாக வாழ்வது தவறா? இயேசுவின் நாமத்தை ஒப்புக்கொண்டதற்காக கிறிஸ்தவர்கள் மரிக்கத் தயாராக இருக்க வேண்டுமா? நம் உயிரைக் காத்துக்கொள்ள நம் விசுவாசத்தை இரகசியமாக வைத்திருக்க வேண்டுமா? இது உலகின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அனுமானமாக மட்டுமே இருக்கும் ஒரு கேள்வி, அவர்கள் ஏளனம் மற்றும்/அல்லது அவமதிப்புகளைப் பெறக்கூடிய மோசமான துன்புறுத்தல்களுடன். இருப்பினும், உலகின் சில பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கேள்வி மிகவும் உண்மையானது மற்றும் நடைமுறையானது—அவர்களின் வாழ்க்கை உண்மையில் ஆபத்தில் உள்ளது. உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும்/அல்லது உங்கள் குடும்பத்தின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக நீங்கள் விரும்பும் அளவுக்கு தைரியமாக இருக்கக்கூடாது என்பது ஒரு விஷயம். கிறிஸ்துவுக்கு சேவை செய்தல், மதிப்பளித்தல், ஆராதித்தல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றை விட உங்கள் சொந்த வாழ்க்கையை உயர்ந்த முன்னுரிமையாக மாற்றுவது முற்றிலும் மற்றொரு விஷயம். அப்படியென்றால், கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை இரகசியமாக வைத்திருப்பது தவறா?

இயேசுவே நமக்குப் பதிலைத் தருகிறார்: "மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்" (மத்தேயு 10:32-34) "உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவான் 15:18-19) என்று கிறிஸ்து மேலும் அதைத் தெளிவுபடுத்துகிறார். எனவே, ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை இரகசியமாக வைத்திருப்பது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும், ஒரு கிறிஸ்தவருக்கு, ஒரு இரகசிய விசுவாசம் வெறுமனே ஒரு தேர்வல்ல.

மேலே உள்ள பத்தியில், "உலகம்" என்ற வார்த்தை கிரேக்க மொழியின் காஸ்மோஸ் என்பதிலிருந்து வருகிறது. இது தேவனற்ற, ஒழுக்கக்கேடான ஜனங்களின் இருதயங்களையும் மனங்களையும் சாத்தானால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தீய, வீழ்ச்சியடைந்த உலக அமைப்பைக் குறிக்கிறது (யோவான் 14:30; 1 யோவான் 5:19; எபேசியர் 2:1-3). சாத்தான் தேவனை வெறுக்கிறான். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களையும் அவன் வெறுக்கிறான். கிறிஸ்தவர்கள் சாத்தானுடைய கோபத்தின் மையப்புள்ளியாக இருக்கிறார்கள். அவர்களை "விழுங்குவது" தான் அவனுடைய நோக்கம் (1 பேதுரு 5:8; எபேசியர் 6:11). நாம் “உலகத்திற்குரியவர்கள் அல்ல” என்பதற்காகவே உலக ஆட்சியாளர்கள் விசுவாசிகளை வெறுக்கிறார்கள் என்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கிறிஸ்துவின் மேல் அளிக்கும் அறிக்கையே கிறிஸ்தவர்கள் தினமும் துன்புறுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் காரணம், நமது பக்தியுள்ள வாழ்க்கை இந்த உலகத்தின் பொல்லாத செயல்களை கண்டிக்க உதவுகிறது (நீதிமொழிகள் 29:27). காயீன் ஆபேலைக் கொன்றபோது (ஆதியாகமம் 4:1-8) பதிவுசெய்யப்பட்ட முதல் கொலையுடன் இது ஆரம்பத்திலிருந்தே உள்ளது. காயீன் ஏன் இதைச் செய்தான்? "ஏனென்றால் அவனுடைய கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாய் இருந்ததினிமித்தம்" (1 யோவான் 3:12). அதற்கேற்ப, இன்று உலகம் தீமை செய்பவர்களை உற்சாகப்படுத்துகிறது (ரோமர் 1:32) மற்றும் நேர்மையாக வாழ விரும்புபவர்களை கண்டனம் செய்கிறது.

இயேசு உலகுக்குக் கொண்டுவந்த மற்றொரு செய்தி: “அப்பொழுது, அவர்கள் [உலகம்] உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” (மத்தேயு 24:9). இயேசு இதை நமக்கு உறுதியளித்துள்ளார்: கடைசிக் காலங்களில் கிறிஸ்தவர்கள் இந்த தேவபக்தியற்ற பொல்லாங்கான உலகத்தால் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள். நாம் அவமதிக்கப்படுவோம், துஷ்பிரயோகம் செய்யப்படுவோம், சபிக்கப்படுவோம். "ஒப்புக்கொடுக்கப்படுதல்” என்ற சொல் கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது, அதாவது "ஒப்புகொடுத்தல்" என்று பொருள்படும், காவல்துறை அல்லது இராணுவத்தால் கைது செய்யப்படுதல் (மத்தேயு 4:12). பலர் கொல்லப்படுவார்கள். அவருடைய நாமத்தினிமித்தம் நாம் “எல்லா தேசங்களாலும் வெறுக்கப்படுவோம்”. மாற்குவின் இணையான வேதப்பகுதியில், இயேசு அறிவிக்கிறார், “நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்” (மாற்கு 13:9). இன்று உலகம் முழுவதும் நாம் சாட்சியாக இருக்கையில், கிறிஸ்துவின் நாமத்தால் அடையாளப்படுத்தப்படுவது நமது சுதந்திரம், நமது உரிமைகள், நமது மரியாதை மற்றும் சில சமயங்களில் நம் உயிரையும் இழக்க நேரிடும்.

" ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்" (மத்தேயு 28:19) என்று கிறிஸ்துவினால் நாம் கட்டளைப் பெற்றிருக்கிறோம். பவுல் கிறிஸ்துவின் கட்டளையை இந்தக் கேள்வியுடன் எதிரொலிக்கிறார்: “அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே!’ (ரோமர் 10:14-15). சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமானால், பூமியின் இருண்ட மூலைகளிலும், யாரேனும் ஒருவர் பிரகடனம் செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்துவின் உயிர்காக்கும் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லி, உலகத்தின் ஒளியாகவும், பூமியின் உப்பாகவும் இருப்பதே பூமியில் நமது நோக்கம். ஆம், சில சமயங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும், மேலும் சில சமயங்களில் நம் உயிரையும் பணயம் வைக்கிறோம். ஆனால் நாம் அவருடைய சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தேவனுடைய சித்தம் என்பதை நாம் அறிவோம், மேலும் பூமியில் நமது ஊழியம் முடியும் வரை அவர் நம்மைப் பாதுகாக்கும் அளவுக்கு வல்லமையுள்ளவர் என்பதையும் நாம் அறிவோம்.

இவ்வுலகில் கிறிஸ்துவுக்காக வாழ்வது கடினமாகவும், மிருகத்தனமாகவும் இருக்கலாம். இந்த உலகம் நம் வீடு அல்ல. உலகம் ஒரு போர்க்களம். வாழ்க்கையின் சோதனைகள் நம்மைக் கட்டியெழுப்புவதற்கும், இயேசுவைப் போல நம்மை உருவாக்குவதற்கும் கடவுள் பயன்படுத்தும் கருவிகள். அந்த இருண்ட காலங்களில்தான் நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கிறோம், அவருடைய வல்லமை நமக்குள் வேலை செய்யட்டும். இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு சற்று முன்பு, நற்செய்தியை உலகுக்குப் பரப்புவதற்கான இறுதிக் கட்டளையை நமக்குக் கொடுத்தார். அதனுடன் அவர் தனது இறுதி வாக்குறுதியையும் நமக்கு அளித்தார். "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்" (மத்தேயு 28:20). எல்லாம் அவ்வளவுதான்.

English



முகப்பு பக்கம்

உங்கள் சொந்த உயிரைக் காப்பாற்றுவதற்காக இரகசியமான ஒரு கிறிஸ்தவனாக இருப்பது தவறா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries