கேள்வி
திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவு பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவைக் குறிக்கிற எந்த ஒரு எபிரேய அல்லது கிரேக்கச் சொல் வேதாகமத்தில் இல்லை. விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் வேதாகமம் மறுக்கமுடியாத நிலையில் வெகுவாக கண்டிக்கிறது, ஆனால் திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளும் பாலுறவு வேசித்தனம் என்று எண்ணப்படுமா? 1 கொரிந்தியர் 7:2ன் படி “ஆம்” என்பதுதான் தெளிவான பதில்: “ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.” இங்கே இந்த வசனத்தில், வேசித்தனத்தை “குணமாக்கும் மருந்தாக” திருமணத்தைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 7:2 இங்கு குறிப்பாக வலியுறுத்துவது என்னவென்றால், பலருக்கும் இச்சையடக்கம் இல்லாதபடியினால் திருமணத்திற்கு வெளியேயுள்ள வேசித்தன பாலுறவில் நாட்டம்கொள்கிறார்கள் என்பதால் மக்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதனால் தங்கள் வேட்கைகளை நன்முறை வழிகளிலேயே தீர்த்துக் கொள்ள முடியும்.
திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவை வேசித்தனம் என்ற வரையறைக்குள் 1 கொரிந்தியர் 7:2 திட்டவட்டமாகக் கொண்டுவந்து விடுவதனால் வேசித்தனத்தைப் பாவம் என்று கண்டிக்கிற வேத வசனங்கள் அனைத்துமே திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவையும் பாவம் என்றே கண்டிக்கின்றன. திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவை பாவம் என்று அறிவிக்கிற அநேக வேதவசனங்கள் உண்டு (அப்போஸ்தலர் 15:20; 1 கொரிந்தியர் 5:1; 6:13,18; 10:8; 2 கொரிந்தியர் 12:21; கலாத்தியர் 5:19; எபேசியர் 5:3; கொலோசேயர் 3:5; 1 தெசலோனேக்கியர் 4:3; யூதா 7). திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவை விட்டு முற்றிலும் விலகியிருக்க வேண்டும் என்பதையே வேதாகமம் மிகத்தெளிவாக அறிவுறுத்துகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான பாலுறவு மட்டுமே கர்த்தர் அனுமதிக்கும் பாலுறவு முறையாகும் (எபிரேயர் 13:4).
பாலுறவை பற்றி நாம் சிந்திக்கும்போது பலவேளைகளில் அது அளிக்கும் பொழுதுபோக்குச் சிற்றின்பம் பண்பில்தான் கவனம் செலுத்துகிறோமேயன்றி குழந்தை பெறும் அதன் மற்றொரு பண்பை நாம் கண்டுகொள்வதே கிடையாது. திருமணத்திற்குள் நடக்கும் பாலுறவு இன்பமானது, மேலும் தேவன் அதை அப்படித்தான் வடிவமைத்தார். தேவன் விரும்புவது என்னவெனில், திருமண உறவுக்குள் ஆண்களும் பெண்களும் பாலுறவு நடவடிக்கையில் ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கவேண்டும் என்பதாகும். சாலோமோனின் உன்னதப்பாட்டு மற்றும் வேறு பல வேதாகமப் பகுதிகள் (நீதிமொழிகள் 5:19 போன்றவை) பாலுறவு இன்பத்தைப் பற்றித் தெளிவாக விவரிக்கின்றன. ஆனாலும், பாலுறவில் தேவனுடைய நோக்கத்தில் குழந்தை பெறுவதும் அடங்கும் என்பதை தம்பதியினர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, திருமணத்திற்கு முன் இருவர் பாலுறவில் ஈடுபடுவது இரு மடங்குத் தவறாகும் – அவர்களுக்கென்று வைக்கப்படாத இன்பத்தை அவர்கள் அனுபவிப்பது, மேலும் ஒரு குழந்தைக்கு தேவன் விரும்புகிற குடும்பச் சூழலைக் கொடுக்காமல் அதற்கு வெளியே அவர்களை உருவாக்க முயற்சிப்பதும் தவறாகும்.
நடைமுறைக்கு ஏற்றது என்பதை மட்டும் வைத்துகொண்டு எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிக்காமல், திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவு என்பதைப் பற்றி வேதாகமத்தின் அறிவுரைக்கு கீழ்படிந்து அதை பின்பற்றினாலே, பால்வினை நோய்கள் வெகுவாகக் குறைந்துவிடும்; கருக்கலைப்புகள் குறையும்; திருமணமாகமல் தாயாகிவிடுவது மற்றும் விருப்பமில்லாமல் கர்ப்பமுறுவது ஆகியவை எண்ணிக்கையில் வெகுவாக குறைந்து இறங்கிவிடும்; மேலும் தங்கள் வாழ்க்கையில் பெற்றோரின்றி வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையும். திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவைப் பொறுத்தமட்டில் அதிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கவேண்டும் என்பதே கர்த்தருடைய ஒரே கொள்கையாகும். விலகியிருத்தல் உயிர்களைக் காக்கும், குழந்தைகளைப் பாதுகாக்கும், பாலியல்சார் உறவுகளுக்கு தகுந்த மதிப்பை அளிக்கும், மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனை கனப்படுத்தும்.
English
திருமணத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளும் பாலுறவு பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?