கேள்வி
மரணத்திற்கேதுவான பாவம் என்றால் என்ன?
பதில்
1 யோவான் 5:16 புதிய ஏற்பாட்டில் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான வசனங்களில் ஒன்றாகும். “மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.” அனைத்து விளக்கங்களிலும், இந்த வசனம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் யாரும் பதிலளித்ததாக தெரியவில்லை.
அப்போஸ்தலர் 5:1-10-ல் அனனியாவுக்கும் சப்பீராளுக்கும் நடந்ததை இந்த வசனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் சிறந்த விளக்கத்தைக் காணலாம் (1 கொரிந்தியர் 11:30 ஐயும் காண்க). "மரணத்திற்கு ஏதுவான பாவம்" என்பது வேண்டுமென்றே, தொடர்ச்சியான, மனந்திரும்பாத பாவமாகும். தேவன் தம் பிள்ளைகளை பரிசுத்தத்திற்கு அழைத்திருக்கிறார் (1 பேதுரு 1:16), அவர்கள் பாவம் செய்யும்போது தேவன் அவர்களைத் திருத்துகிறார். இரட்சிப்பை இழப்பது அல்லது நித்தியமாக தேவனிடமிருந்து பிரிக்கப்படுவது என்ற பொருளில் நாம் நமது பாவத்திற்காக "தண்டிக்கப்படுவதில்லை", ஆனாலும் நாம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு கடந்து செல்லுகிறவர்களாக இருக்கிறோம். “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (எபிரெயர் 12:6).
1 யோவான் 5:16 கூறுகிறது என்னவென்றால், ஒரு விசுவாசி மனந்திரும்பாத பாவத்தில் தொடர்ந்திருக்க ஒருபோதும் தேவன் இனி அனுமதிக்க மாட்டார் என்பதாகும். அந்த நிலையை எட்டும்போது, பிடிவாதமாக பாவமுள்ள விசுவாசியின் உயிரை எடுக்க தேவன் முடிவு செய்யலாம். "மரணம்" என்பது சரீர மரணம். தேவன் சில சமயங்களில் வேண்டுமென்றே அவருக்குக் கீழ்ப்படியாதவர்களை அகற்றுவதன் மூலம் தனது திருச்சபையை பரிசுத்தப்படுத்துகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் "மரணத்திற்கு ஏதுவான பாவம்" மற்றும் "மரணத்திற்கு ஏதுவல்லாத பாவம்" ஆகியவற்றுக்கு இடையில் வேறுபாட்டைக் காட்டுகிறார். திருச்சபையிலுள்ள எல்லா பாவங்களும் ஒரே மாதிரியாகக் கருதப்படுவதில்லை, ஏனென்றால் எல்லா பாவங்களும் "மரணத்திற்கு ஏதுவான பாவம்" அல்ல.
அப்போஸ்தலர் 5: 1-10 மற்றும் 1 கொரிந்தியர் 11:28-32 ஆகிய வேதபாகங்களில், பாவியின் சரீர வாழ்க்கையை எடுத்துக்கொள்வதன் மூலம் திருச்சபையில் வேண்டுமென்றே செய்யப்பட, மற்றும் கணக்கிடப்பட்ட பாவத்தை தேவன் கையாளுகிறார். 1 கொரிந்தியர் 5:5-ல் உள்ள “மாம்சத்தின் அழிவு” என்பதன் மூலம் பவுல் இதை அர்த்தப்படுத்தி இருக்கலாம்.
பாவம் செய்யும் கிறிஸ்தவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்றும், நம்முடைய ஜெபங்களை தேவன் கேட்பார் என்றும் யோவான் கூறுகிறார். இருப்பினும், மனந்திரும்பாத பாவத்தின் காரணமாக ஒரு விசுவாசியின் இவ்வுலக வாழ்க்கையை குறைக்க தேவன் முடிவு செய்யும் ஒரு காலம் வரக்கூடும். அத்தகைய செவிசாய்க்காத நபருக்கான ஜெபங்கள் பலனளிக்காது.
தேவன் நல்லவர், நீதியுள்ளவர், இறுதியில் அவர் நம்மை “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்துவார்” (எபேசியர் 5:27). மேலும், அந்த முடிவுக்கு தேவன் தம் பிள்ளைகளை சிட்சிக்கிறார். "மரணத்திற்கு ஏதுவான பாவத்தை" செய்யக் காரணமாக இருக்கிற கடின மனப்பான்மையிலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவாராக.
English
மரணத்திற்கேதுவான பாவம் என்றால் என்ன?