settings icon
share icon
கேள்வி

ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் என்ன?

பதில்


ஆவிக்குரிய வளர்ச்சி என்பது நாம் அதிகமதிகமாய் இயேசு கிறிஸ்துவைப் போல மாறுவதாகும். நாம் இயேசுவின் மேல் நமது விசுவாசத்தை வைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவைப் போல நம்மை மாற்றுவதற்கு, அதாவது அவருடைய சாயலுக்கு ஒத்த சாயலை நாம் அடைவதற்கு நம்மில் செயலாற்றுகிறார். 2 பேதுரு 1:3-8-ல் ஆவிக்குரிய வளர்ச்சியை பற்றி நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேவபக்தியோடே இருப்பதற்கு தேவனுடைய திவ்விய வல்லமை நமக்குப் போதுமானதாக இருக்கிறது. அதுதான் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியின் இலட்சியமாக இருக்கிறது. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வளரவேண்டும். இந்த வளர்ச்சிதான் நம்மை எல்லா விதங்களிலும் முர்திர்ச்சி அடைய வழி வகுக்கிறது. அவரைக்குறித்த அறிவு நமக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறதாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை நாம் ஆவிக்குரிய வாழ்வில் கட்டப்படவும் அதில் வளர்ச்சியடையவும் செய்கிறது.

கலாத்தியர் 5:19-23 வரையிலுள்ள வசனங்களில் இரண்டு பட்டியல்கள் இருக்கிறது. 19-21 வரையுள்ள வசனங்களில் “மாம்சத்தின் கிரியைகள்” குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, இந்த காரியங்கள் தான் நமது வாழ்க்கையில் இருந்தன. இந்த மாம்சத்தின் கிரியைகளை தேவனிடம் அறிக்கை செய்து, அவற்றிலிருந்து மனந்திரும்பி, மற்றும் தேவனுடைய உதவியால் அவைகளை மேற்கொள்ளவேண்டும். நாம் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை சிறிது சிறிதாக அடையும்போது, மாம்சத்தின் கிரியைகள் நம் வாழ்கையில் தென்படாமல் குறைந்துபோய் விடும். இரண்டாவது பட்டியல், “ஆவியின் கனி” (கலாத்தியர் 5:22-23). இரட்சிக்கப்பட்ட நம் வாழ்கையில் நமது நற்பண்புகளை வெளிப்படுத்த தக்கதாக இவைகள் காணப்பட வேண்டும். ஒரு விசுவாசியின் வாழ்கையில் ஆவியின் கனி அதிகமதிகமாய் காணப்படுவதுதான் அவரது ஆவிக்குரிய வளர்ச்சியின் அடையாளமாகும்.

இரட்சிப்பின் மாற்றம் ஏற்படும்போது, ஆவிக்குரிய வளர்ச்சி ஆரம்பமாகின்றது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுகின்றார் (யோவான் 14:16-17). நாம் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கிறோம் (2 கொரிந்தியர் 5:17). நமது பழைய பாவ சுபாவம் நீங்கி, புதிய கிறிஸ்துவின் சுபாவத்தை பெற்றுக்கொள்ள வழிவிடுகிறது (ரோமர் 6-7). ஆவிக்குரிய வளர்ச்சி தேவனுடைய வார்த்தையை படித்து ஆராய்ந்து அவைகளை நமது வாழ்வில் அப்பியாசப்படுத்துகிற வகையில் நமது வாழ்நாள் முழுவதும் இருக்கிற ஒன்றாகும் (2 தீமோத்தேயு 3:16-17), மற்றும் ஆவியின்படி நாம் நடக்கிற காரியத்தையும் (கலாத்தியர் 5:16-26) சார்ந்ததாகும். நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார், மற்றும் இந்த அனுபவத்தை பெறுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் நமக்கு தந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் உதவியால், நாம் பாவத்தை மேற்கொண்டு நமது இரட்சகர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல அவருக்கொப்பாக மாறவும் முடியும்.

English



முகப்பு பக்கம்

ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries