கேள்வி
ஆவிக்குரிய ரீதியில் மரித்தல் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்
ஆவிக்குரிய ரீதியில் மரித்தவராக இருப்பது என்பது தேவனிடமிருந்து பிரிந்து இருப்பது ஆகும். ஆதியாகமம் 3:6 இல் ஆதாம் பாவம் செய்தபோது, எல்லா மனித இனத்திற்கும் மரணத்தை கொண்டுவந்தார். ஆதாம் மற்றும் ஏவாளுக்கு தேவன் கொடுத்த கட்டளை என்னவென்றால், அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாது என்பதாகும். கீழ்ப்படியாமை மரணத்திற்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையுடன் அது வந்தது: "தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” "நீங்கள் நிச்சயமாக சாகவே சாவீர்கள்" என்ற சொற்றொடரை "மரிப்பதால் நீங்கள் மரிக்க வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம். இது ஆவிக்குரிய மரணத்துடன் தொடங்கிய ஒரு தொடர்ச்சியான மரணத்தின் நிலையைக் குறிக்கிறது, சரீரம் படிப்படியாக சரீரத்தின் சீரழிவாகத் தொடர்கிறது மற்றும் சரீர மரணத்தில் முடிவடைகிறது. உடனடி ஆவிக்குரிய மரணம் ஆதாம் தேவனை விட்டு பிரிந்தது ஆகும். தேவனிடமிருந்து மறைத்துக் கொள்ளும் அவனது செயல் (ஆதியாகமம் 3:8) இந்தப் பிரிவினையை நிரூபிக்கிறது, அதே போல் பாவத்திற்கான குற்றத்தை ஸ்திரீயின் பேரில் போடுவதற்கு அவரது முயற்சியும் (ஆதியாகமம் 3:12) இதைத் தெளிவுபடுத்துகிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆவிக்குரிய—மற்றும் இறுதியில் சரீர—மரணம் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு மட்டும் அல்ல. மனித இனத்தின் பிரதிநிதியாக, ஆதாம் மனிதகுலம் அனைத்தையும் தனது பாவத்தினால் மரணத்தைக் கொண்டுவந்தான். ரோமர் 5:12ல் பவுல் இதைத் தெளிவுபடுத்துகிறார், ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று என்று கூறுகிறார். கூடுதலாக, ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறது; பாவிகளாகிய நாம் மரிக்க வேண்டும், ஏனென்றால் பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. ஜீவனின் மூலத்திலிருந்து எந்தப் பிரிவினையும், இயற்கையாகவே, நமக்கு மரணம் தான்.
ஆனால் பரம்பரை பாவம் மட்டும் ஆவிக்குரிய மரணத்தை ஏற்படுத்துவதில்லை; நமது சொந்த பாவமும் அவற்றிற்கு பங்களிக்கிறது. எபேசியர் 2, இரட்சிப்புக்கு முன், நாம் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் "மரித்தவர்கள்" என்று போதிக்கிறது (வசனம் 1). இது ஆவிக்குரிய மரணத்தைப் பற்றி பேச வேண்டும், ஏனென்றால் இரட்சிப்புக்கு முன் நாம் இன்னும் சரீரத்தில் மரிக்காமல் “உயிருடன்” தான் இருந்தோம். நாம் அந்த ஆவிக்குரிய "மரித்த" நிலையில் இருந்தபோது, தேவன் நம்மை இரட்சித்தார் (வசனம் 5; ரோமர் 5:8 ஐயும் பார்க்கவும்). கொலோசெயர் 2:13 இந்த சத்தியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது: “உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்தார்.
நாம் பாவத்தில் மரித்துவிட்டதால், தேவனையோ அவருடைய வார்த்தையையோ முழுமையாக நம்ப முடியாது. அவர் இல்லாமல் நாம் சக்தியற்றவர்கள் என்று இயேசு திரும்பத் திரும்பக் கூறுகிறார் (யோவான் 15:5) மற்றும் தேவன் இல்லாமல் நாம் அவரிடம் வரவும் முடியாது (யோவான் 6:44). ரோமர் 8-ல் பவுல் போதிக்கிறார், நமது இயற்கையான மனம் கொண்டு தேவனுக்கு அடிபணியவோ, அவரைப் பிரியப்படுத்தவோ முடியாது (வசனங்கள் 7-8). நம்முடைய பாவத்தில் விழுந்துபோன நிலையில், நாம் தேவனுடைய காரியங்களைப் புரிந்துகொள்ளக்கூட இயலாதவர்களாக இருக்கிறோம் (1 கொரிந்தியர் 2:14).
ஆவிக்குரிய மரணத்திலிருந்து நம்மை உயிர்ப்பிக்கும் தேவனுடைய செயல் மறுபிறப்பு என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே மறுபிறப்பு நிறைவேற்றப்படுகிறது. நாம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படும்போது, நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து உயிர்ப்பிக்கப்படுகிறோம் (எபேசியர் 2:5) மற்றும் பரிசுத்த ஆவியால் புதுப்பிக்கப்படுகிறோம் (தீத்து 3:5). யோவான் 3:3, 7-ல் இயேசு நிக்கோதேமுவுக்குக் கற்பித்தபடி, இரண்டாவது முறையாக மறுபடியும் பிறப்பது போன்றது. தேவனால் உயிர்ப்பிக்கப்பட்டதால், நாம் உண்மையில் மரிக்க மாட்டோம்—நமக்கு நித்திய ஜீவன் இருக்கிறது. இயேசு தம்மை விசுவாசித்து நம்புபவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அடிக்கடி கூறினார் (யோவான் 3:16, 36; 17:3).
பாவம் மரணத்திற்கு வழிவகுக்கிறது. அந்த மரணத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி, பரிசுத்த ஆவியால் ஈர்க்கப்பட்ட விசுவாசத்தின் மூலம் இயேசுவிடம் வருவதேயாகும். கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், இறுதியில் நித்திய ஜீவனுக்கும் வழிவகுக்கிறது.
English
ஆவிக்குரிய ரீதியில் மரித்தல் என்பதன் அர்த்தம் என்ன?