settings icon
share icon
கேள்வி

பதிலீடு பரிகாரம் என்றால் என்ன?

பதில்


பதிலீடு பரிகாரம் என்றால் இயேசு பாவிகளுக்குப் பதிலாக அவர்கள் ஸ்தானத்தில் மரித்ததாகும். வேதவாக்கியங்கள் எல்லா மனிதரும் பாவிகள் என்று கூறுகின்றது (ரோமர் 3:9-18, 23). நம்முடைய பாவத்திற்கு தண்டனை மரணம். “பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்’’ என்று ரோமர் 6:25 கூறுகின்றது.

இந்த வசனம் அநேக காரியங்களை நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. கிறிஸ்து இல்லாமல் நாம் மரித்து பாவத்திற்கு தண்டனையாக நித்தியத்தை நரகத்தில்தான் கழிப்போம். மரணம் என்பதை வேதவாக்கியங்களில் ‘பிரிவு’ என்று கூறுகின்றது. எல்லாரும் மரிப்பார்கள் ஆனால் சிலர் பரலோகத்தில் தேவனோடு நித்தியத்திலிருப்பார்கள், மற்றவர்களோ நரகத்தில் நித்தியத்தைக் கழிப்பார்கள். இங்கு மரணம் என்று சொல்லப்படுவது நரகத்திலுள்ள வாழ்க்கையைக் குறிக்கின்றது. இந்த வசனத்தில் இரண்டாவதாக ஒரு காரியத்தைக் நாம் அறிந்துகொள்கிறோம், அதாவது இயேசுகிறிஸ்து மூலமாக நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்பதே. இதுவே அவருடைய பதிலீடு பரிகாரம்.

இயேசு கிறிஸ்து நம்முடைய ஸ்தானத்தில்/இடத்தில் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். நாம் யாவரும் பாவமுள்ள வாழ்க்கை வாழ்ந்தோம், நாமே சிலுவையில் அறையப்பட்டு மரித்திருக்கவேண்டும். ஆனால் கிறிஸ்து அந்த தண்டனையை அவர் தம்மேல் நமக்காக ஏற்றுக் கொண்டார். அவர் பதிலீடாக நமக்கு கிடைக்க வேண்டியவைக்குத் தம்மைத் தாமே பதிலாகச் கொடுத்தார். “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21).

“நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார், அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1பேதுரு 2:24). இதில் மறுபடியும் கிறிஸ்து நம்முடைய பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு விலைக்கிரயம் செலுத்தினார் என காண்கிறோம். சில வசனங்கள் கழித்து “ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதி உள்ளவர்களுக்கு பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களின் நிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (1 பேதுரு 3:18) என்று எழுதியிருக்கிறது. இந்த வசனங்கள் கிறிஸ்து நமக்கு பதிலாக மரித்தார் என்பதுமட்டுமல்ல பரிகாரமாகவும் அதாவது மனிதனின் பாவத்திற்கு உண்டான விலைகிரயத்தை முழுவதும் செலுத்தி தீர்த்தார்.

ஏசாயா 53:5 பலியீடு பரிகாரத்தைக் குறித்து பேசுகின்றது. இந்த வசனம் வரப்போகிறவராகிய கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பார் என்றும் கூறுகிறது. இந்த தீர்க்கதரிசனம் மிக விவரமாக உள்ளது. சிலுவையில் அறைதல் முன்னறிவித்தப்படியே நடந்தது. “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. இங்கு மறுபடியும் நமக்காக கிறிஸ்து செலுத்தின விலைக்கிரயத்தைக் குறித்து பார்க்கிறோம்.

நம்முடைய பாவத்திற்கு நாமே விலையை கொடுப்பதாயிருந்தால், அதற்கு நாம் தண்டனைக்குட்பட்டு நித்தியம் முழுவதும் நரகத்தில் இருக்க வேண்டியதாயிருந்திருக்கும். ஆனால் தேவனுடைய குமாரன் இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்து நம்முடைய பாவங்களுக்கான விலைகிரயத்தைச் செலுத்தினார். அவர் அதை செய்ததால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதோடல்லாமல் நாம் நமது நித்தியம் முழுவதையும் அவரோடு செலவிடும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறோம். இப்படி நாம் இருப்பதற்கு, நம்முடைய விசுவாசத்தை கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த காரியத்தில் வைக்கும் போது நாம் நித்தியத்தைப் பெறலாம். நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாது; நம்முடைய இடத்தில் வேறொரு பதிலாள் தேவையாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மரணம் பதிலீடு பரிகாரமாக இருக்கிறது.

English



முகப்பு பக்கம்

பதிலீடு பரிகாரம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries