settings icon
share icon
கேள்வி

வேதத்தின் நிறைவுத்தன்மை உபதேசம் என்றால் என்ன? வேதாகமம் போதுமானது என்றால் என்ன அர்த்தம்?

பதில்


வேதம் போதுமானது என்ற கோட்பாடு கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கையாகும். வேதம் போதுமானது என்று சொன்னால், விசுவாசம் மற்றும் ஊழியத்தின் வாழ்க்கைக்கு வேதாகமம் நமக்குத் தேவையானது எல்லாமுமாக இருக்கிறது என்பதாகும். இது அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கும் மனிதகுலத்துக்கும் இடையேயான பிளவுபட்ட உறவை மீட்டெடுப்பதற்கான தேவனுடைய நோக்கத்தின் தெளிவான விளக்கத்தை வழங்குகிறது. சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலில் இயேசுவின் மரணம் மூலம் விசுவாசம், தெரிந்தெடுத்தல் மற்றும் இரட்சிப்பு பற்றி வேதாகமம் நமக்கு போதிக்கிறது. இந்த நற்செய்தியைப் புரிந்துகொள்ள வேறு எந்த எழுத்துக்களும் தேவையில்லை, அல்லது விசுவாசமுள்ள வாழ்க்கைக்கு நம்மைத் தயார்படுத்த வேறு எந்த எழுத்துகளும் தேவையில்லை.

"வேதம்" என்பதன் மூலம், கிறிஸ்தவர்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை அர்த்தப்படுத்துகின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல், "கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றார் (2 தீமோத்தேயு 3:15-17). வேதம் "தேவனால் சுவாசிக்கப்பட்டது" என்றால், அது மனிதனால் சுவாசிக்கப்படவில்லை என்று விளங்குகிறது. இது மனிதர்களால் எழுதப்பட்டிருந்தாலும், அந்த மனிதர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு நடத்திச் செல்லப்பட்டதால் தேவனிடமிருந்து பேசினார்கள் (2 பேதுரு 1:21). ஒவ்வொரு நல்ல வேலைக்கும் நம்மைத் தயார்படுத்த மனிதனால் எழுதப்பட்ட எந்த ஒரு எழுத்தும் போதாது; தேவனுடைய வார்த்தை மட்டுமே அதைச் செய்ய முடியும். மேலும், நம்மை முழுமையாக பக்திவிருத்தி அடைவதற்கு வேதம் போதுமானதாக இருந்தால், அதற்கு மேல் எதுவும் தேவையில்லை.

வேதாகமத்தின் நிறைவுத்தன்மை சவால் செய்யப்படும்போது அல்லது வேதாகமம் அல்லாத எழுத்துக்களுடன் வேதம் இணைக்கப்படும்போது ஒரு சபை எதிர்கொள்ளும் ஆபத்துக்களை கொலோசெயர் 2 ஆம் அதிகாரம் விவாதிக்கிறது. கொலோசேயில் உள்ள சபையை பவுல் எச்சரித்தார், "லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல" (கொலோசெயர் 2:8). இதிலே யூதா இன்னும் நேரடியாக கூறுகிறார்: "பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது" (யூதா 1:3). "ஒருவிசை மற்றும் அனைவருக்கும்" என்ற சொற்றொடரை கவனியுங்கள். போதகர், இறையியலாளர் அல்லது எந்த மதப்பிரிவு சபையிலிருந்து அவர்கள் வந்தாலும் என உட்படுத்தி, வேறு எந்த எழுத்துக்களும் தேவனுடைய வார்த்தைக்கு சமமானதாகவோ அல்லது முழுமையாக்கப்படுவதாகவோ பார்க்க முடியாது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. தேவனுடைய தன்மை, மனிதனின் சுபாவம் மற்றும் பாவம், பரலோகம், நரகம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் கோட்பாடுகளை விசுவாசி புரிந்துகொள்ள தேவையான அனைத்தையும் வேதாகமம் கொண்டுள்ளது.

வேதாகமம் போதுமானது என்கிற பிரச்சினையில் வலுவான வசனங்கள் சங்கீத புத்தகத்திலிருந்து வந்திருக்கலாம். சங்கீதம் 19:7-14 இல், தாவீது தேவனுடைய வார்த்தையில் மகிழ்ச்சியடைகிறார், அது பரிபூரணமானது, நம்பகமானது, சரியானது, பிரகாசமானது, ஞானமுள்ளது, உறுதியானது மற்றும் முற்றிலும் நீதியுள்ளது என்று அறிவித்தார். வேதாகமம் "பரிபூரணமானது" என்பதால், வேறு எந்த எழுத்துகளும் தேவையில்லை.

வேதத்தின் போதுமான தன்மை இன்று தாக்குதலுக்கு உள்ளாகிறது, துரதிர்ஷ்டவசமாக, அந்த தாக்குதல் நம்முடைய சபைகளில் அடிக்கடி வருகிறது. உலக மேலாண்மை நுட்பங்கள், கூட்டங்களில் ஆட்களை ஈர்க்கும் முறைகள், பொழுதுபோக்கு, கூடுதல் வேதாகம வெளிப்பாடுகள், மாயவாதம் மற்றும் உளவியல் ஆலோசனை ஆகியவை கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வேதாகமமும் அதன் கட்டளைகளும் போதுமானவை அல்ல என்று அறிவிக்கின்றன. ஆனால் இயேசு கூறினார், "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27). அவருடைய சத்தத்தைத் தான் நாம் கேட்க வேண்டும், மற்றும் வேதம் அவருடைய சத்தமாக இருக்கிறது, முற்றிலும் மற்றும் பரிபூரணமாகப் போதுமானது.

English



முகப்பு பக்கம்

வேதத்தின் நிறைவுத்தன்மை உபதேசம் என்றால் என்ன? வேதாகமம் போதுமானது என்றால் என்ன அர்த்தம்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries