settings icon
share icon
கேள்வி

தற்கொலையைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? தற்கொலையைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்


தற்கொலை செய்துகொண்ட ஆறுபேரைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுகிறது. அபிமெலெக்கு (நியாதிபதிகள் 9:54), சவுல் (1 சாமுவேல் 31:4), சவுலின் ஆயுததாரி (1 சாமுவேல் 31:4-6), அகிதோப்பேல் (2 சாமுவேல் 17:23), சிம்ரி (I ராஜாக்கள் 16:18) மற்றும் யூதாஸ் (மத்தேயு 27:5). இதில் சவுலின் ஆயுததாரி தவர்த்து மற்ற ஐந்துபேர்களும் அக்கிரமக்காரரும் பாவிகளுமான மனிதர்கள் ஆகும். சவுலின் ஆயுததாரி எப்படிப்பட்டவன் என்று கணிப்பதற்கு போதுமான தகவல் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை. சிலர் சிம்சோனின் சாவும் தற்கொலையே (நியாதிபதிகள் 16:23-31) என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிம்சோனின் நோக்கம் தன்னைத்தான் கொல்வது அல்ல, பெலிஸ்தரை கொன்று வீழ்த்துவதுதான். வேதாகமக் கண்ணோட்டத்தில் தற்கொலை கொலைக்குச் சமம் ஆகும். தன்னைத்தான் கொல்வது என்பதைத் தவிர அது வேறொன்றுமில்லை. ஒரு மனிதன் எப்போது, எப்படி மரிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது தேவன் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

வேதாகமத்தின்படி, ஒரு மனிதன் பரலோகத்திற்கு செல்வது என்பதைத் தீர்மானிப்பது தற்கொலை அல்ல. இரட்சிக்கப்படாத மனிதர் தற்கொலை செய்துகொண்டால் அவர் நரகத்திற்கு செல்வதைத் “துரிதமாக்கிக்கொண்டார்” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனாலும் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டதற்காக அல்ல, கிறிஸ்துவின் மூலமாய் வரும் இரட்சிப்பை நிராகரித்தார் என்பதற்காகவே நரகத்திலிருப்பார். தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவரைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? நாம் உண்மையாகவே கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளும் நிமிடத்திலிருந்தே நமக்கு நித்திய ஜீவனின் நிச்சயம் கிடைக்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது (யோவான் 3:16). வேதாகமத்தின்படி, நித்திய ஜீவன் நமக்கு உண்டு என்பதை எந்த சந்தேகமுமின்றி கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளலாம் (1 யோவான் 5:13). தேவனுடைய அன்பைவிட்டு ஒரு கிறிஸ்தவனை எதுவும் பிரிக்க இயலாது (ரோமர் 8:38-39). “உண்டாக்கப்பட்ட எதுவும்” தேவனுடைய அன்பைவிட்டு ஒரு கிறிஸ்தவரைப் பிரிக்க முடியாது என்றால், தற்கொலை கூட ஒரு கிறிஸ்தவரைத் தேவனுடைய அன்பைவிட்டு பிரிக்க இயலாது. இயேசு நம்முடைய எல்லோருடைய பாவங்களுக்காகவும் மரித்தார். ஆகவே ஆன்மீகத் தாக்குதலும் பலவீனமும் நிகழும் ஒரு நேரத்தில் ஒரு கிறிஸ்தவர் தற்கொலை செய்துகொண்டாலும் அது இன்னமும் கிறிஸ்துவின் இரத்தால் மறைக்கப்பட்ட பாவமாகவே அது இருக்கிறது.

தற்கொலை இன்னமும் தேவனுக்கெதிரான ஒரு கடுமையான பாவமாக இருக்கிறது. வேதாகமத்தின்படி, தற்கொலை என்பது கொலையே, அது எப்போதுமே தவறானதாகவே இருக்கிறது. கிறிஸ்தவர் என்று கூறிக்கொண்ட ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது அவரது விசுவாசம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்தான கடுமையான சந்தேகங்களை எழுப்பத்தான் வேண்டும். தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் ஒருவரை (ஆணோ/பெண்ணோ), குறிப்பாக ஒரு கிறிஸ்தவரை, எந்தச் சூழ்நிலையும் நியாயப்படுத்த முடியாது. தேவனுக்காக தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்காகத்தான் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, எப்பொழுது மரிக்க வேண்டும் என்ற தீர்மானம் தேவனுடையது, அது தேவனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். தற்கொலையைப் பற்றி விவரிக்கவில்லையெனினும், தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவருக்கு நடப்பது என்ன என்பதைப் பற்றி 1 கொரிந்தியர் 3:15 நன்றாகவே விவரிக்கிறது: “அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.”

English



முகப்பு பக்கம்

தற்கொலையைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? தற்கொலையைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries