கேள்வி
இயேசு இரவிலே திருடன் வருகிற விதமாய் திரும்புவார் என்றால் என்ன அர்த்தம்?
பதில்
இயேசு கிறிஸ்துவின் வருகை இரவிலே ஒரு திருடன் வருகிற விதத்திற்கு ஒப்பிடப்படுகிறது. இரண்டு பத்திகள் "இரவிலே திருடன் வருகிற விதமாய்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன: மத்தேயு 24:43, "திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்” மற்றும் 1 தெசலோனிக்கேயர் 5:2, “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.”
மத்தேயு 24 இல், இயேசு உபத்திரவத்தின் முடிவில் தனது இரண்டாவது வருகையைப் பற்றி பேசுகிறார். பவுல் 1 தெசலோனிக்கேயரில் "கர்த்தருடைய நாள்" என்று அழைக்கிறார். இது வானியல் எழுச்சியையும், வானத்தில் காணக்கூடிய "மனுஷகுமாரனின் அடையாளத்தையும்" உள்ளடக்கிய தெய்வீக பதில் செய்யும் நாளாகும் (மத்தேயு 24:29-30). இது "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே" (வசனம் 29, ESV) நடக்கும் என்று இயேசு கூறுகிறார், இது உபத்திரவத்திற்கு முன்பு நடக்கும் நிகழ்வை சபை எடுத்துகொள்ளப்படுவதிலிருந்து வேறுபடுத்துகிறது.
இரண்டாவது வருகை இரவிலே திருடன் வருகிற விதமாய் எப்படி இருக்கும்? இயேசுவின் ஒப்பீட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால், அவர் எப்போது திரும்ப வருவார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு திருடன் ஒரு வீட்டைத் திருட யாருக்கும் தெரியாமல் வருவது போல, இயேசுவும் நியாயத்தீர்ப்பைக் கொடுப்பதற்கு திரும்ப வரும்போது அவிசுவாச உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். உலகில் எல்லா காலத்திலும் இருப்பதைப் போல, “ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்" இருப்பார்கள் (வசனம் 38). ஆனால், அவர்கள் அறிவதற்கு முன், நியாயத்தீர்ப்பின் நாள் அவர்கள் மீது வரும் (வசனங்கள் 40-41). பவுல் இதை இவ்வாறு கூறுகிறார்: "சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை" (1 தெசலோனிக்கேயர் 5:3).
விசுவாசி இந்த விரைவான மற்றும் திடீர் நியாயத்தீர்ப்புக்கு பயப்படுவதில்லை; "இரவில் திருடன்" வரும் வருகை நம்மை ஆச்சரியப்படுத்தாது. கிறிஸ்தவர்கள் ஒரு தனி பிரிவில் உள்ளனர்: "சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே" (1 தெசலோனிக்கேயர் 5:4). இருளில் இருப்பவர்கள் மட்டுமே தெரியாமல் அழைத்துச் செல்லப்படுவார்கள், மேலும் நாம் அனைவரும் “வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறோம்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே" (வசனம் 5). கர்த்தருக்கு ஸ்தோத்திரம், "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்" (வசனம் 9).
இரட்சிக்கப்படாதவர்கள் இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்: "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்" (மத்தேயு 24:44). நீங்கள் எப்படி ஆயத்தமாக இருக்க முடியும்? நீங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியை வழங்கியுள்ளார். அந்த வழி இயேசு கிறிஸ்து (யோவான் 14:6). இயேசுவை உங்கள் கார்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதன் மூலம், நித்திய ஜீவனின் வாக்குத்தத்தத்துடன் பாவமன்னிப்பு, இரக்கம் மற்றும் இரட்சிப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது (யோவான் 3:16; எபேசியர் 2:8-9). "திருடன்" வருகிறார், ஆனால் நீங்கள் அந்த நாளின் பிள்ளையாக இருக்கலாம். அதை தள்ளி வைக்காதே; இதுவே "கர்த்தருடைய அநுக்கிரக வருஷம்" (லூக்கா 4:19).
English
இயேசு இரவிலே திருடன் வருகிற விதமாய் திரும்புவார் என்றால் என்ன அர்த்தம்?