கேள்வி
‘இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று' இயேசு சொன்னபோது என்ன அர்த்தம் கொண்டார்?
பதில்
கடைசிக்காலத்தைப் பற்றிய இயேசுவின் இந்த மேற்கோள் மத்தேயு 24:34; மார்க் 13:30; மற்றும் லூக்கா 21:32 இல் காணப்படுகிறது. இயேசு கூறினார், "இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." இயேசு பேசிக்கொண்டிருந்த காரியங்கள்—அந்திக்கிறிஸ்துவின் எழுச்சி, பரிசுத்த ஸ்தலத்தில் பாழாக்கும் அருவருப்பை ஏற்படுத்துதல் மற்றும் சூரியன் இருண்டுபோதல்—இயேசுவின் காலத்தில் உயிருடன் இருந்த மக்களின் வாழ்நாளில் இவை நடக்கவில்லை. வெளிப்படையாக, இயேசு "இந்தச் சந்ததியைப்" பற்றி பேசியபோது வேறு ஒன்றை அர்த்தப்படுத்தினார்.
"இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று" இயேசு சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் அதன் பின்னணி சூழல்; அதாவது, மத்தேயு 24:34 சுற்றியுள்ள வசனங்களை, குறிப்பாக அதற்கு முந்தைய வசனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மத்தேயு 24:4-31 இல், இயேசு தெளிவாக ஒரு தீர்க்கதரிசனத்தை உரைக்கிறார்; அவர் இனி சம்பவிக்கப் போகிற எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறார். இயேசு தமது பூமிக்குரிய ஊழியத்தின்போது வாழ்ந்தவர்களிடம் ராஜ்யம் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டது என்று ஏற்கனவே கூறியிருந்தார் (மத்தேயு 21:43). எனவே, மத்தேயு 24-25 இல் கூறப்பட்டுள்ள எதிர்கால சம்பவங்களை கையாள்வது அவசியம். இயேசு திரும்பி வரும் வரை "இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று" கூறுகிற சந்ததி எதிர்கால சந்ததி, அதாவது, முன்னறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் நிகழும்போது வாழும் மக்கள். மத்தேயு 24-25 இல் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடக்கும்போது எதிர்காலத்தில் உயிரோடிருக்கும் மக்களை இந்த வார்த்தை குறிக்கிறது.
"இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று" இயேசு கூறிய அறிக்கையில், கடைசிக்கால நிகழ்வுகள் விரைவாக நடக்கவிருக்கும் காரியங்களாகும். உலகத்தின் முடிவின் அடையாளங்கள் கவனிக்கப்பட ஆரம்பித்தவுடன், முடிவு நன்றாக அதன் பாதையில் செல்லும்—இரண்டாவது வருகை மற்றும் நியாயத்தீர்ப்பு அந்த கடைசி சந்ததிக்குள் நிகழும். இயேசு இந்த அர்த்தத்தை மத்தேயு 24:32-33 இல் ஒரு உவமையால் கூறி வலியுறுத்துகிறார்: “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.” கோடைக்காலத்தின் உறுதியான அறிகுறி அத்தி மரத்தின் இலைகளாகும்; உலகின் முடிவுக்கான ஒரு உறுதியான அறிகுறி "இவை அனைத்தும்" (மத்தேயு 24) நடைபெறுகிறது. பூமியில் இருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் மட்டுமே உள்ளது.
மற்றொரு விளக்கம் என்னவென்றால், மத்தேயு 24 இல் இயேசு உரைத்த தீர்க்கதரிசனம் "இரட்டை நிறைவேறுதல்" கொண்டது. இந்த பார்வையில், "இந்த சந்ததி" அந்த காலத்தில் இயேசு பேசும் வாழ்ந்த மக்களாகும்—அவர் முன்னறிவித்ததில் சில அவர்களின் வாழ்நாளில் நடக்கும். கி.பி. 70 இல் ரோமர்கள் எருசலேமை அழித்தபோது, இயேசுவின் தீர்க்கதரிசனம் ஓரளவு நிறைவேறியது; எருசலேமின் வீழ்ச்சி வரவிருக்கும் மோசமான காரியங்களின் முன்னறிவிப்பை வழங்கியது. இருப்பினும், இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் பல அம்சங்கள் கி.பி. 70 இல் நிகழவில்லை; உதாரணமாக, மத்தேயு 24:29-31 இல் வாசிக்கிற வானத்தின் அடையாளங்கள் நிறைவேறவில்லை. "இரட்டை-நிறைவேறுதல்" விளக்கத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், "இந்த சந்ததியில்" "இவை அனைத்தும்" நடக்கும் என்ற இயேசுவின் கூற்றுடன் ஒத்துப்போகவில்லை. ஆகையால், "இந்த சந்ததி" என்பது கடைசிக்கால நிகழ்வுகள் உண்மையில் நிகழும் போது உயிரோடுள்ள தலைமுறையைக் குறிப்பிடுவதைப் புரிந்துகொள்வது நலமாயிருக்கும்.
அடிப்படையில், கடைசிக்கால நிகழ்வுகள் சம்பவிக்கத் தொடங்கியவுடன், அவை விரைவாக நடக்கும் என்று இயேசு கூறுகிறார். கிருபையின் காலம் மிக நீண்ட காலமாக தொடர்கிறது. ஆனால் நியாயத்தீர்ப்புக்கான நேரம் இறுதியாக வரும்போது, காரியங்கள் அதிவேகமாக முடிக்கப்படும். தேவனுடைய காரியங்களை விரைவாக முடிப்பதற்கான இந்த கருத்து வேதத்தின் பல பகுதிகளில் எதிரொலிக்கிறது (மத்தேயு 24:22; மாற்கு 13:20; வெளிப்படுத்துதல் 3:11; 22:7, 12, 20).
English
‘இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று' இயேசு சொன்னபோது என்ன அர்த்தம் கொண்டார்?