கேள்வி
சோதனைகள் மற்றும் உபத்திரவங்களை கடந்து செல்லும்படியாக தேவன் ஏன் அனுமதிக்கிறார்?
பதில்
கிறிஸ்துவின் சீஷராக மாறுதல், வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் உபத்திரவங்களிலிருந்து நம்மை விடுவிப்பதில்லை என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் மிகவும் கடினமான பகுதிகளில் ஒன்றாகும். ஒரு குழந்தையின் மரணம், நமக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் நோய் மற்றும் காயம், பொருளாதாரக் கஷ்டங்கள், கவலை மற்றும் பயம் போன்ற விஷயங்களை கடந்துச் செல்ல ஒரு நல்ல மற்றும் அன்பான தேவன் ஏன் அனுமதிக்கிறார்? நிச்சயமாக, அவர் நம்மை நேசித்திருந்தால், அவர் இவற்றையெல்லாம் நம்மிடமிருந்து எடுத்துவிடுவார். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நேசிப்பது என்பது நம் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அர்த்தமல்லவா? அப்படி இல்லை, அது இல்லை. தேவன் தம்முடைய பிள்ளைகளாக இருப்பவர்களை நேசிக்கிறார் என்று வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது, மேலும் அவர் நமக்காக "எல்லாவற்றையும் நன்மையாக முடியப்பண்ணுகிறார்" (ரோமர் 8:28). அதனால் அவர் நம் வாழ்வில் அனுமதிக்கும் சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் அனைத்தும் நன்மைக்காக ஒன்றாக கிரியைச் செய்கிறது ஒரு பகுதியாகும். எனவே, விசுவாசியைப் பொறுத்தவரை, எல்லா சோதனைகளும் உபத்திரவங்களும் தெய்வீக நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் போலவே, நமக்கான தேவனுடைய முடிவான நோக்கம், அவருடைய குமாரனின் சாயலாக ஒப்பாக மேலும் மேலும் நாம் வளர வேண்டும் என்பதே (ரோமர் 8:29). இதுவே கிறிஸ்தவனின் குறிக்கோள், சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் உட்பட வாழ்க்கையில் உள்ள அனைத்தும், அந்த இலக்கை அடைய நமக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பரிசுத்தமாக்குதல் செயல்முறையின் ஒரு பகுதியாகும், இது தேவனுடைய நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டு, அவருடைய மகிமைக்காக வாழ்வதற்கு ஏற்றது. சோதனைகள் இதை நிறைவேற்றும் விதம் 1 பேதுரு 1:6-7 இல் விளக்கப்பட்டுள்ளது: "இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்." உண்மையான விசுவாசியின் விசுவாசம் நாம் அனுபவிக்கும் சோதனைகளால் உறுதிப்படுத்தப்படும், அது உண்மையானது மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற அறிவில் நாம் இளைப்பாற முடியும்.
சோதனைகள் தெய்வீக குணத்தை வளர்க்கின்றன, மேலும் அது "அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:3-5). இயேசு கிறிஸ்து பரிபூரணமான முன்மாதிரியை வைத்தார். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் மற்றும் நம்முடையது ஆகிய இரண்டிற்கும் அவருடைய தெய்வீக நோக்கத்தின் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. விடாமுயற்சி நமது விசுவாசத்தை நிரூபிக்கிறது. "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13).
எவ்வாறாயினும், நம்முடைய "சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள்" நம்முடைய சொந்த தவறுகளின் விளைவாக இருந்தால், அதற்கு சாக்குப்போக்குகளை ஒருபோதும் கூறாமல் கவனமாக இருக்க வேண்டும். "ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது" (1 பேதுரு 4:15). தேவன் நம் பாவங்களை மன்னிப்பார், ஏனென்றால் அவர்களுக்கான நித்திய தண்டனை சிலுவையில் கிறிஸ்துவின் பலியால் செலுத்தப்பட்டது. இருப்பினும், நம் பாவங்கள் மற்றும் மோசமான தேர்வுகளுக்காக இந்த வாழ்க்கையில் இயற்கையான விளைவுகளை நாம் இன்னும் அனுபவிக்க வேண்டும். ஆனால் தேவன் அந்த துன்பங்களைக் கூட தனது நோக்கங்களுக்காகவும் நமது முடிவான நன்மைக்காகவும் நம்மை வடிவமைக்கவும் உருவாக்கவும் பயன்படுத்துகிறார்.
சோதனைகள் மற்றும் இன்னல்கள் ஒரு நோக்கம் மற்றும் வெகுமதி ஆகிய இரண்டையும் கொண்டு வருகின்றன. "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது...சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்" (யாக்கோபு 1:2-4,12).
வாழ்க்கையின் அனைத்து சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் மூலம், நமக்கு வெற்றி உள்ளது. "ஆனால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு ஜெயங்கொடுக்கிறத் தேவனுக்கு நன்றி." நாம் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் இருந்தாலும், கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் மீது சாத்தானுக்கு அதிகாரம் இல்லை. தேவன் நம்மை வழிநடத்த தம்முடைய வார்த்தையையும், அவருடைய பரிசுத்த ஆவியானவர் நம்மைச் செயல்படுத்துவதையும், எங்கும், எந்த நேரத்திலும், எதையும் பற்றி ஜெபிக்கும் பாக்கியத்தையும் கொடுத்திருக்கிறார். எந்தச் சோதனையும் அதைத் தாங்கும் திறனுக்கு அப்பாற்பட்டு நம்மைச் சோதிக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார், மேலும் "சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரிந்தியர் 10:13).
English
சோதனைகள் மற்றும் உபத்திரவங்களை கடந்து செல்லும்படியாக தேவன் ஏன் அனுமதிக்கிறார்?