settings icon
share icon
கேள்வி

மெய்யான சுவிசேஷம் என்றால் என்ன?

பதில்


மெய்யான சுவிசேஷம் என்பது தேவன் பாவிகளை காப்பாற்றுகிறார் என்ற நற்செய்தியாகும். மனிதன் இயற்கையாகவே பாவமுள்ளவனாகவும் அந்த சூழ்நிலையை சரிசெய்யும் நம்பிக்கையில்லாமல் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான். ஆனால் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலில் தேவன் மனிதனின் மீட்புக்கான வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

"சுவிசேஷம்" என்ற வார்த்தையின் அர்த்தம் "நற்செய்தி". ஆனால் இந்த செய்தி எவ்வளவு நல்லது என்பதை உண்மையாக புரிந்து கொள்ள, நாம் முதலில் கெட்ட செய்தியை புரிந்து கொள்ள வேண்டும். ஏதேன் தோட்டத்தில் மனிதனின் வீழ்ச்சியின் விளைவாக (ஆதியாகமம் 3:6), மனிதனின் ஒவ்வொரு பகுதியும்—அவனது மனம், விருப்பம், உணர்ச்சிகள் மற்றும் மாம்சம்—பாவத்தால் சிதைந்துவிட்டது. மனிதனின் பாவ இயல்பு காரணமாக, அவன் தேவனைத் தேடவும் முடியாது. தேவனிடம் வர அவனுக்கு விருப்பமில்லை, உண்மையில், அவனது மனம் தேவனுக்கு விரோதமானது (ரோமர் 8:7). மனிதனின் பாவம் அவனை தேவனிடமிருந்து பிரித்து நரகத்தில் நித்தியமாக இருக்கும்படிச் செய்கிறது என்று தேவன் அறிவித்தார். நரகத்தில் தான் மனிதன் ஒரு பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள தேவனுக்கு எதிரான பாவத்தின் தண்டனையை செலுத்துகிறான். இதற்கு எந்த தீர்வும் இல்லை என்றால் மெய்யாகவே இது மோசமான செய்தி.

ஆனால் நற்செய்தியில், தேவன், அவருடைய இரக்கத்தால், அந்த பரிகாரத்தை வழங்கியுள்ளார், சிலுவையில் அவர் பலி செலுத்துவதன் மூலம் நம் பாவத்திற்கான தண்டனையை செலுத்த வந்து நமக்கு பதிலாக இயேசு கிறிஸ்து மரித்தார். இதுதான் கொரிந்தியர்களுக்கு பவுல் போதித்த நற்செய்தியின் சாரம். 1 கொரிந்தியர் 15:2-4 இல், அவர் நற்செய்தியின் மூன்று கூறுகளை விளக்குகிறார்—நம் சார்பாக கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல். நமது பழைய சுபாவம் கிறிஸ்துவுடன் சிலுவையில் மரித்து அவருடன் அடக்கம் பண்ணப்பட்டது. பின்னர் நாம் அவருடன் ஒரு புதிதான ஜீவனுக்காக உயிர்த்தெழுப்பப்பட்டோம் (ரோமர் 6:4-8). இந்த மெய்யான சுவிசேஷத்தை "உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று பவுல் சொல்கிறார், அது மட்டுமே இரட்சிக்கிறது. வேறு எந்த சுவிசேஷத்தையும் நம்புவது வீண் நம்பிக்கை. ரோமர் 1:16-17 இல், பவுல் மெய்யான சுவிசேஷத்தை "நம்புகிற அனைவருக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது" என்றும் அறிவிக்கிறார், இதன் மூலம் அவர் மனிதனின் முயற்சியால் இரட்சிப்பை அடைய முடியாது, ஆனால் தேவனின் கிருபையால் விசுவாசத்தின் ஈவாக இரட்சிப்பு உள்ளது என்கிறார் (எபேசியர் 2:8-9).

சுவிசேஷத்தின் காரணமாக, தேவனுடைய வல்லமையின் மூலம், கிறிஸ்துவை நம்புகிறவர்கள் (ரோமர் 10:9) நரகத்திலிருந்து இரட்சிக்கப்படுவது மட்டுமில்லை. உண்மையில், நமக்கு முற்றிலும் புதிய சுபாவம் (2 கொரிந்தியர் 5:17) மாற்றப்பட்ட இருதயத்துடனும், நற்கிரியைகளில் வெளிப்படும் ஒரு புதிய விருப்பம், சித்தம் மற்றும் அணுகுமுறையுடனும் கொடுக்கப்பட்டுள்ளது. இது பரிசுத்த ஆவியானவர் நம்மில் அவருடைய வல்லமையால் உற்பத்தி செய்யும் கனியாகும். கிரியைகள் ஒருபோதும் இரட்சிப்பின் வழிமுறைகள் அல்ல, ஆனால் அவை அதற்கு ஆதாரம் (எபேசியர் 2:10). கடவுளின் வல்லமையால் இரட்சிக்கப்பட்டவர்கள் எப்போதும் மாற்றப்பட்ட வாழ்க்கையால் இரட்சிப்பின் ஆதாரங்களைக் காண்பிப்பார்கள்.

English



முகப்பு பக்கம்

மெய்யான சுவிசேஷம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries