கேள்வி
வேதாகமத்தைப் புரிந்துகொள்ளுதல் ஏன் முக்கியமானது?
பதில்
வேதாகமத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம், ஏனென்றால் வேதாகமம் தேவனுடைய வார்த்தை. நாம் வேதாகமத்தைத் திறக்கும்போது, நமக்குள்ள தேவனுடைய செய்தியை நாம் வாசிக்கிறோம். பிரபஞ்சத்தை உருவாக்கியவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதை விட முக்கியமானது எது?
ஒரு மனிதன் தனது காதலியின் காதல் கடிதத்தைப் புரிந்துகொள்ள முயல்கின்ற அதே காரணத்திற்காகவே நாமும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். தேவன் நம்மை நேசிக்கிறார் மற்றும் அவருடனான நமது உறவை மீட்டெடுக்க விரும்புகிறார் (மத்தேயு 23:37). தேவன் தமது அன்பை வேதாகமத்தில் நமக்குத் தெரிவிக்கிறார் (யோவான் 3:16; 1 யோவான் 3:1; 4:10).
ஒரு சிப்பாய் தனது தளபதியிடமிருந்து அனுப்பப்பட்ட செய்தியை புரிந்து கொள்ள துடிக்கும் அதே காரணத்திற்காக நாமும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அவருக்கு கனத்தை அளிக்கிறது மற்றும் ஜீவனின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது (சங்கீதம் 119). அந்த கட்டளைகள் வேதாகமத்தில் காணப்படுகின்றன (யோவான் 14:15).
ஒரு மெக்கானிக் பழுதுபார்க்கும் கையேட்டைப் புரிந்துகொள்ள முற்படும் அதே காரணத்திற்காக நாமும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். இந்த உலகில் காரியங்கள் தவறாக நடக்கின்றன, மேலும் வேதாகமம் பிரச்சனையை (பாவம்) கண்டறிவது மட்டுமல்லாமல் தீர்வையும் (கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கை) சுட்டிக்காட்டுகிறது. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23).
ஒரு ஓட்டுநர் டிராஃபிக் சிக்னல்களைப் புரிந்துகொள்ளும் அதே காரணத்திற்காக நாமும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். வேதாகமம் நமக்கு வாழ்க்கையின் வழிகாட்டுதலை வழங்குகிறது, பாதுகாப்பு மற்றும் ஞானத்தின் பாதையைக் காட்டுகிறது (சங்கீதம் 119:11, 105).
புயலின் பாதையில் இருக்கும் ஒருவர் வானிலை அறிக்கையைப் புரிந்துகொள்ள முயல்கின்ற அதே காரணத்திற்காகவே நாமும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். கடைசிக் காலம் எப்படி இருக்கும் என்பதை வேதாகமம் முன்னறிவிக்கிறது, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் தெளிவான எச்சரிக்கையை ஒலிக்கிறது (மத்தேயு 24-25 அதிகாரங்கள்) மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது (ரோமர் 8:1) என்பதைக் கூறகிறது.
ஆர்வமுள்ள வாசகர் தனக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகங்களைப் புரிந்துகொள்ள முற்படும் அதே காரணத்திற்காகவே நாமும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டபடி தேவனுடைய ஆளுமை மற்றும் மகிமையை வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது (யோவான் 1:1-18). நாம் எவ்வளவு அதிகமாக வேதாகமத்தைப் படித்து புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு நெருக்கமாக நாம் அதன் ஆசிரியரையும் அறிவோம்.
பிலிப்பு காசாவுக்குப் பயணம் செய்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவரை ஏசாயாவின் ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் அழைத்துச் சென்றார். பிலிப்பு அந்த மனிதனை அணுகி, அவர் என்ன படிக்கிறார் என்று பார்த்து, இந்த முக்கியமான கேள்வியைக் கேட்டார்: "நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?" (அப். 8:30). புரிதல்தான் விசுவாசத்தின் தொடக்கப்புள்ளி என்பதை பிலிப்பு அறிந்திருந்தார். வேதாகமத்தைப் புரிந்துகொள்ளாமல், நாம் அதைப் பயன்படுத்தவோ, அதற்குக் கீழ்ப்படியவோ, நம்பவோ முடியாது.
English
வேதாகமத்தைப் புரிந்துகொள்ளுதல் ஏன் முக்கியமானது?