கேள்வி
மன்னிக்க முடியாத பாவம் என்றால் என்ன?
பதில்
மன்னிக்க முடியாத பாவம் அல்லது “பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம்” மாற்கு 3:22-30 மற்றும் மத்தேயு 12:22-32 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. “மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்” (மாற்கு 3:28) இயேசு சொன்னார், ஆனால் பின்னர் அவர் ஒரு விதிவிலக்கு அளிக்கிறார்: “ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்” (வசனம் 29).
இயேசுவின் கூற்றுப்படி, மன்னிக்க முடியாத அல்லது மன்னிக்க இயலாத பாவம் ஒரு தனித்துவமானது ஆகும். இது ஒருபோதும் மன்னிக்கப்படாத ஒரு அக்கிரமமாகும் (மத்தேயு 12:32-ல் உள்ள “இம்மையிலும் மறுமையிலும்” என்பதன் அர்த்தம் “ஒருபோதும்” என்பதாகும்). மன்னிக்க முடியாத பாவம், கிறிஸ்துவின் மூலமாக உலகில் பரிசுத்த ஆவியின் வேலையின் பின்னணியில் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் (“மீறுதல்”) ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்தேயு 12 மற்றும் மார்க் 3 இல் காணப்படும் குறிப்பிட்ட தேவதூஷணம் தனித்துவமானது ஆகும். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இயேசு அற்புதங்களைச் செய்கிறார் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்களை பரிசேயர்களின் ஒரு குழு கண்டது, ஆனால் அவர்கள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபுல் மூலம் அற்புதங்களை இயேசு செய்தார் என்று கூறினார்கள் (மத்தேயு 12:24; மாற்கு 3:30).
இயேசுவின் நாளின் யூதத் தலைவர்கள் இயேசு கிறிஸ்துவை (நேரில், இப்பூமியில்) பிசாசு பிடித்தவர் என்று குற்றம் சாட்டி மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்தனர். அத்தகைய நடவடிக்கைக்கு அவர்களுக்கு எந்தவிதமான சாக்குபோக்கும் இல்லை. அவர்கள் அறியாமை அல்லது தவறான புரிதலால் பேசவில்லை. இஸ்ரவேலைக் காப்பாற்ற தேவன் அனுப்பிய மேசியா இயேசு என்பதை பரிசேயர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்படுவதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் இயேசுவின் அற்புதமான செயல்களைக் கண்டார்கள், சத்தியத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அவர்கள் கேட்டார்கள். ஆயினும்கூட அவர்கள் வேண்டுமென்றே சத்தியத்தை மறுக்கவும் பரிசுத்த ஆவியானவரை அவதூறாக பேசி தேவதூஷணம் கூறவும் தேர்வு செய்தனர். உலகத்தின் ஒளியின் முன்பாக நின்று, அவருடைய மகிமையில் குளித்து ஜுவாலித்துக் கொண்டிருந்தவரை, அவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டு வேண்டுமென்றே குருடர்களாக மாறினர். இந்த பாவம் மன்னிக்க முடியாதது என்று இயேசு அறிவித்தார்.
பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவதூஷணம், பரிசேயர்களின் அந்த நாட்களின் நிலைமைக்கு குறிப்பிட்டது ஆகும், இன்று அதை நகல் எடுக்க முடியாது. காரணம் இன்று நம் மத்தியில் இயேசு கிறிஸ்து பூமியில் இல்லை, அப்படி இயேசு ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதை யாரும் தனிப்பட்ட முறையில் அப்படி பார்க்கவும் முடியாது, பின்னர் அந்த வல்லமையை ஆவியானவருக்குப் பதிலாக பிசாசிற்கு ஒப்பிட்டு கூறவும் இயலாது. இன்று மன்னிக்க முடியாத ஒரே பாவம் தொடர்ச்சியான அவநம்பிக்கையாகும் / அவிசுவாசமாகும். இன்று, கிறிஸ்துவை நிராகரித்ததில் இறக்கும் ஒருவருக்கு மன்னிப்பு இல்லை. இன்று, பரிசுத்த ஆவியானவர் உலகில் கிரியை செய்கிறார், பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறார் (யோவான் 16:8). ஒரு நபர் அந்த நம்பிக்கையை எதிர்த்து, மனந்திரும்பாமல் இருந்தால், அவர் பரலோகத்திற்கு போவதற்குப் பதிலாக நரகத்தையே தேர்ந்தெடுக்கிறார். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபிரெயர் 11:6), விசுவாசத்தின் பொருள் இயேசுவே ஆகும் (அப்போஸ்தலர் 16:31). கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இறக்கும் ஒருவருக்கு மன்னிப்பு இல்லை.
கடவுள் தம்முடைய குமாரனில் நம்முடைய இரட்சிப்புக்காக ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார் (யோவான் 3:16). மன்னிப்பு இயேசுவில் மட்டுமே காணப்படுகிறது (யோவான் 14:6). ஒரே இரட்சகரை நிராகரிப்பது இரட்சிப்பின் வழிஏ இல்லாமல் இருக்க வேண்டும்; இப்படி ஒரே மன்னிப்பை நிராகரிப்பது, மன்னிக்க முடியாதது.
தேவனால் மன்னிக்க முடியாத அல்லது மன்னிக்க கூடாத சில பாவங்களை அவர்கள் செய்ததாக பலர் அஞ்சுகிறார்கள், மேலும் அவர்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர்கள் உணர்கிறார்கள். அந்த தவறான எண்ணத்தின் கீழ் ஜனங்களை வைத்திருப்பதைத் தவிர வேறொன்றையும் சாத்தான் விரும்பவில்லை. பாவத்திற்கு தண்டனை பெற்ற பாவிக்கு தேவன் ஊக்கம் அளிக்கிறார்: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (யாக்கோபு 4:8). “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20). பவுலின் சாட்சியம் தேவன் தன்னிடம் வரும் எவரையும் விசுவாசத்தோடு காப்பாற்ற முடியும் என்பதற்கு சாதகமான சான்றாகும் (1 தீமோத்தேயு 1:12–17). இன்று நீங்கள் ஏராளமான குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், மன்னிக்க முடியாத பாவத்தை நீங்கள் செய்யவில்லை என்று உறுதி. தேவன் திறந்த கரங்களுடன் காத்திருக்கிறார். இயேசுவின் வாக்குறுதி என்னவென்றால், "அவர் மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபிரெயர் 7:25) என்பதாகும். நம்முடைய தேவன் ஒருபோதும் கைவிடார். “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்” (ஏசாயா 12:2).
English
மன்னிக்க முடியாத பாவம் என்றால் என்ன?