கேள்வி
இச்சை என்றால் என்ன? இச்சையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
இச்சைக்கான அகராதி விளக்கம் "1) தீவிரமான அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசை, அல்லது 2) அதிக ஆசை அல்லது ஏக்கம். வேதாகமம் இச்சையைப் பற்றி பல வழிகளில் பேசுகிறது. யாத்திராகமம் 20:14, 17, "விபசாரம் செய்யாதிருப்பாயாக.. . .பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்" அல்லது மத்தேயு 5:28, "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மற்றும் யோபு 31:11-12: "அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே. அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்."
இச்சை தன்னை மகிழ்விக்கும் ஒரு மையமாக உள்ளது, மேலும் அது விளைவுகளைப் பொருட்படுத்தாமல் ஒருவரின் ஆசைகளை நிறைவேற்ற ஆரோக்கியமற்ற செயல்களுக்கு வழிவகுக்கிறது. இச்சை என்பது உடைமை மற்றும் பேராசை பற்றியது. கிறிஸ்தவ நம்பிக்கை தன்னலமற்றது மற்றும் பரிசுத்த வாழ்வால் குறிக்கப்படுகிறது (ரோமர் 6:19, 12:1-2; 1 கொரிந்தியர் 1:2, 30, 6:19-20; எபேசியர் 1:4, 4:24; கொலோசெயர் 3: 12; 1 தெசலோனிக்கேயர் 4:3-8,5:23; 2 தீமோத்தேயு 1:9; எபிரேயர் 12:14; 1 பேதுரு 1:15-16). இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு நபரின் குறிக்கோள், ஒவ்வொரு நாளும் அவரைப் போலவே அதிகமதிகமாக மாற வேண்டும். இதன் பொருள் பாவம் கட்டுப்பாட்டில் இருந்த பழைய வாழ்க்கை முறையைத் தள்ளிவைத்து, ஒருவருடைய எண்ணங்களையும் செயல்களையும் வேதத்தில் கூறப்பட்டுள்ள தரத்திற்கு ஏற்ப மாற்றுவது. இச்சை இந்த இலட்சியத்திற்கு எதிரானது.
இந்த பூமியில் இருக்கும் போது யாரும் பரிபூரணமாகவோ அல்லது பாவமற்றவர்களாகவோ இருக்க மாட்டார்கள், ஆனால் அது இன்னும் நாம் பாடுபடும் இலக்காகவே உள்ளது. வேதாகமம் இதைப் பற்றி 1 தெசலோனிக்கேயர் 4:7-8 இல் வலுவான அறிக்கையை அளிக்கிறது, "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்." இச்சை இன்னும் உங்கள் இருதயத்தையும் மனதையும் பிடிக்கவில்லை என்றால், இச்சையின் சோதனைகளை எதிர்த்துப் போராடுவதற்கு நிந்தனைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையின் மூலம் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது இச்சையுடன் போராடினால், உங்கள் பாவத்தை தேவனிடம் ஒப்புக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் அவரது தலையீட்டைக் கேட்க வேண்டிய நேரம் இது, அதனால் பரிசுத்தம் உங்கள் வாழ்க்கையின் அடையாளமாக இருக்கும்.
English
இச்சை என்றால் என்ன? இச்சையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?