settings icon
share icon
கேள்வி

இருதயம் என்றால் என்ன?

பதில்


முதலில், நாம் தெளிவானதைக் கூறுவோம்: இந்த கட்டுரையானது இருதயம் ஒரு முக்கியமான உடல் உறுப்பு என்பதைப் பற்றி அல்ல, அதாவது உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்யும் இரத்த தசைநார்களைக் கொண்டதை அல்ல. மேலும் இந்தக் கட்டுரையானது காதல், தத்துவம் அல்லது இலக்கிய வரையறைகளைப் பற்றியதும் அல்ல.

மாறாக, இருதயத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதில் கவனம் செலுத்துவோம். வேதாகமம் இருதயத்தைப் பற்றி கிட்டத்தட்ட 1,000 முறை குறிப்பிடுகிறது. சாராம்சத்தில், இது கூறுகிறது: இருதயம் என்பது நம் உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் வசிக்கும் ஆவிக்குரிய பகுதியாகும்.

மனித இருதயத்தைப் பார்ப்பதற்கு முன், தேவனுக்கு உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் இருப்பதால், அவருக்கும் ஒரு "இருதயம்" இருப்பதாகக் கூறலாம். தேவனுக்கு இருதயம் இருப்பதால் நமக்கும் இருதயம் இருக்கிறது. தாவீது "தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன்" (அப்போஸ்தலர் 13:22). தேவன் தம்முடைய இருதயத்தை அறிந்து பின்பற்றும் தலைவர்களைக் கொண்டு தம் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார் (1 சாமுவேல் 2:35; எரேமியா 3:15).

மனித இருதயம், அதன் இயற்கையான நிலையில், தீயது, துரோகம் மற்றும் வஞ்சகமானது. எரேமியா 17:9 கூறுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவத்தின் வீழ்ச்சி நம்மை ஆழமான மட்டத்தில் பாதித்துள்ளது; நம் மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் பாவத்தால் கறைபட்டுள்ளன—மேலும் பிரச்சனை எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை நாம் கண்மூடித்தனமாக பார்க்கிறோம்.

நம் சொந்த இதயங்களை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் தேவன் புரிந்துகொள்கிறார். அவர் "இருதயத்தின் இரகசியங்களை அறிவார்" (சங்கீதம் 44:21; 1 கொரிந்தியர் 14:25 ஐயும் பார்க்கவும்). இயேசு "இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை" (யோவான் 2:24-25). இருதயத்தைப் பற்றிய அவருடைய அறிவின் அடிப்படையில், தேவன் நீதியுடன் நியாயந்தீர்க்க முடியும்: "கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்" (எரேமியா 17:10)

மாற்கு 7:21-23 ல் உள்ள நம் இருதயங்களின் பாவ வீழ்ச்சி நிலையை இயேசு சுட்டிக் காட்டினார்: “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.” நமது பெரிய பிரச்சனை வெளியில் அல்ல, அகத்தினில்; நம் அனைவருக்கும் இருதய பிரச்சனை உள்ளது.

ஒரு நபர் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், இருதயம் மாற்றப்பட வேண்டும். இது விசுவாசத்திற்கு பதிலளிக்கும் விதமாக தேவனுடைய வல்லமையால் மட்டுமே நிகழ்கிறது. "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்" (ரோமர் 10:10). அவருடைய கிருபையில், தேவன் நமக்குள் ஒரு புதிய இருதயத்தை உருவாக்க முடியும் (சங்கீதம் 51:10; எசேக்கியேல் 36:26). "நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிப்பேன்" (ஏசாயா 57:15).

நமக்குள் ஒரு புதிய இருதயத்தை உருவாக்கும் தேவனுடைய வேலை நம் இருதயங்களைச் சோதிப்பதை உள்ளடக்கியது (சங்கீதம் 17:3; உபாகமம் 8:2) மற்றும் புதிய யோசனைகள், புதிய ஞானம் மற்றும் புதிய ஆசைகளால் நம் இருதயங்களை நிரப்புகிறது (நெகேமியா 7:5; 1 இராஜாக்கள் 10:24; 2 கொரிந்தியர் 8:16).

இருதயம் நம் இருப்பின் மையமாகும், மேலும் வேதாகமம் நம் இருதயங்களை பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்" (நீதிமொழிகள் 4:23).

English



முகப்பு பக்கம்

இருதயம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries