கேள்வி
ஏன் ஜெபிக்கவேண்டும்??
பதில்
ஒரு கிறிஸ்தவனுக்கு ஜெபம் என்பது சுவாசிக்கிற சுவாசத்தைப்போல இருக்கிறது, செய்வது எளிது செய்யாமல் நிறுத்துவது கடினம். பல்வேறு காரணங்களுக்காக ஜெபிக்கிறோம். ஒருநிலையில் ஜெபம் செய்வது நாம் தேவனுக்கு சேவை செய்வதாகும் (லூக்கா 2:36-38) மற்றும் அவருக்கு கீழ்படிகின்ற செயலாகும். நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறபடியால் நாம் ஜெபிக்கிறோம் (பிலிப்பியா் 4:6-7). இயேசுவின் ஜெபங்கள் மற்றும் ஆதித்திருசபையின் ஜெபங்கள் நமக்கு ஜெபத்தின் மாதிரியாக இருக்கின்றன (மாற்கு 1:35; அப்போஸ்தலர் 1:14; 2:42; 3:1; 4:23-31; 6:4; 13:1-3). ஜெபிப்பது அவசியம் என்று இயேசு நினைத்தாரானால், நாமும் அப்படியே எண்ணம் வேண்டும்.
ஜெபம் செய்வதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், ஜெபத்தின் மூலமாக அநேக சூழ்நிலைகளுக்கு அவரின் தீர்வுகளை நாம் காணவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். முக்கியமான தீர்மானங்களை எடுக்க ஆயத்தப்படவும் (லூக்கா 6:12-13); சத்துருவின் தடைகளை மேற்கொள்ளவும் (மத்தேயு 17:14-21); அறுவடைக்கு ஆட்களை சேர்ப்பதற்காகவும் (லூக்கா 10:2); சோதனையை மேற்கொள்ள பெலன் பெறுவதற்காகவும் (மத்தேயு 26:41); மற்றும் மற்றவர்களின் ஆவிக்குரிய வாழ்கையில் அவர்களை பெலப்படுத்துவதற்காகவும் (எபேசியர் 6:18-19) நாம் ஜெபிக்க வேண்டும்.
சில குறிப்பிட்ட அல்லது விசேஷித்த விண்ணப்பங்களை நாம் தேவனிடத்தில் ஏறெடுக்கும்போது நமது ஜெபங்கள் வீண் அல்ல என்கிற வாக்குத்தத்தமும் நமக்கு இருக்கிறது. ஒருவேளை நாம் கேட்ட அந்த குறிப்பிட்ட காரியத்தை பெறாமலும் போகலாம் (மத்தேயு 6:6; ரோமர் 8:26-27). அவர் சித்தத்தின்படி நாம் கேட்டால், அதை அவர் தருவேன் என்று நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார் (1 யோவான் 5:14-15). சில வேலைகளில் அவர் தமது ஞானத்தின்படியும் நமது நன்மைக்காகவும், நமது ஜெபத்திற்கான பதில்களை அளிப்பதில் தாமதிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நாம் விழிப்போடு சோர்ந்துபோகாமல் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (மத்தேயு 7:7; லூக்கா 18:1-8). ஜெபம் என்பது நமது விருப்பத்தை தேவன் பூமியில் நிறைவேற்றவேண்டும் என்பதற்கு அல்ல, மாறாக தேவ சித்தத்தை பூமியில் செயல்படுத்துவதற்கா. தேவ ஞானமானது நமது ஞானத்தை விட மிகவும் அப்பாற்பட்டது ஆகும்.
தேவ சித்தம் இன்னதென்று நாம் அறியாமல் இருக்கும் சூழ்நிலைகளில், ஜெபமானது அவர் சித்தத்தை நாம் பகுத்தறிய நமக்கு வழிவகுக்கிறது. சீரிய தேசத்தின் பெண், தனது மகளை பிசாசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜெபிக்காமல் இருந்திருந்தால், அவளுடைய மகளுக்கு விடுதலை கிடைத்திருக்காது (மாற்கு 7:26-30). எரிகோ நகரத்திற்கு புறம்பே இருந்த குருடன் கிறிஸ்துவை சத்தமிட்டு கூவி அழைக்காமல் இருந்திருந்தால், அவன் பார்வையடையாமல் குருடனாகவே இருந்திருப்பான் (லூக்கா 18:35-43). அநேக நேரங்களில், நாம் கேட்காததினால் தான் பெற்றுக்கொள்கிறதில்லை என்று தேவன் சொல்கிறார் (யாக்கோபு 4:2). ஒரு விதத்தில், ஜெபம் சுவிசேஷத்தை ஒருவரிடத்தில் சொல்வது போலாகும். நாம் சுவிசேஷம் சொன்னால் மட்டும்தான் சுவிசேஷத்திற்கு யாரெல்லாம் செவி சாய்ப்பார்கள் என்று அறிய முடியும். அதேப்போல, நாம் ஜெபிக்காத பட்சத்தில், பதில் கிடைத்த ஜெபத்தின் விளைவுகளை காண முடியாது.
ஜெபிக்காமல் இருப்பது தேவன் மேல் நமக்கு இருக்கு விசுவாச குறைவையும் தேவனுடைய வார்த்தையின்மேலுள்ள நம்பிக்கையற்ற நிலையையும் கண்பிக்கிறதாய் இருக்கிறது. நாம் ஜெபிக்கும்போது, தேவன் வேதத்தில் வாக்குபண்ணினவைகளை நிறைவேற்றுவார் என்றும் நாம் வேண்டுவதற்க்கும் நினைப்பதற்கும் அதிகமாய் ஆசீர்வதிப்பார் என்றும் விசுவாசிப்பதை வெளிப்படுத்துகிறோம் (எபேசியர் 3:20). நாம் ஜெபிக்கும் போது மற்றவர்கள் வாழ்க்கையில் தேவன் கிரியை செய்கிறார். ஜெபிப்பதின் மூலம் தேவ வல்லமையை பெறுகிறோம், அதினால் நாம் சாத்தானையும் அவன் சேனையையும் மேற்கொள்கிறோம், சொந்த பெலத்தினால் அவனை நாம் ஜெயிக்க முடியாது. ஆகையால், தேவன் நம்மை அடிக்கடி அவர் சிங்காசனத்திற்கு முன்பாக காண்பாராக! நாம் கடந்து போகும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்காக பரலோகத்தில் இருக்கிறார் (எபிரேயர் 4:15-16). நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்கிற வாக்குதத்தம் நமக்கு இருக்கிறது (யாக்கோபு 5:16-18). நாம் தேவனை விசுவாசித்து அவரிடத்திற்கு எப்பொழுதும் ஜெபிப்பதினால் நமது வாழ்வின் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.
English
ஏன் ஜெபிக்கவேண்டும்??