settings icon
share icon
கேள்வி

பெண் சபை மேய்ப்பர்கள் / பிரசங்கியார்கள்? ஊழியத்தில் உள்ள பெண்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


பெண்கள் மேய்ப்பர்களாகவும் பிரசங்கிகளாகவும் பணியாற்றுவதைப் பற்றியதான கேள்வியைவிட பெரிய சர்ச்சை இன்றைய நாட்களிலே சபையிலே வேறொன்றுமில்லை என்று கூட சொல்லலாம். இதன் விளைவாக, ஆண்களா பெண்களா என்கிற விவாதமாக இதைப் பார்க்கமலிருப்பது மிகவும் முக்கியம். பெண்கள் மேய்ப்பர்களாக பணியாற்றக் கூடாது, வேதாகமம்கூட பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கிறது என்று நம்புகிற பெண்களும் உண்டு, பெண்கள் மேய்ப்பர்களாக பணியாற்றலாம், பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று நம்புகிற ஆண்களும் உண்டு. இது ஆணாதிக்கமோ வேற்றுமை பாராட்டுதலோ குறித்த பிரச்சினை அல்ல. இது வேதாகம விளக்கம் அல்லது புரிந்துகொள்ளுதலைப் பற்றியது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

“ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்” (1 தீமோ. 2:11-12) என்று வேதாகமம் எடுத்துரைக்கிறதில் இருந்து கர்த்தர் சபையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு காரியங்களை அல்லது பொறுப்புக்களை நியமித்து இருக்கிறார் அல்லது வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. இது மனிதகுலம் உண்டாக்கப்பட்டதின் மற்றும் பாவம் உலகில் தோன்றிய விதத்தின் விளைவு (1 தீமோ. 2:13-14). கர்த்தரே, பெண்கள் போதிக்கும் மற்றும் ஆண்களின் மீது ஆவிக்குரிய அதிகாரம் செலுத்தும் பொறுப்புகளில் பணியாற்றுவதை அல்லது இருப்பதை, அப்போஸ்தலன் பவுலின் வழியாக, கட்டுப்படுத்துகிறார். இது பெண்கள் சபையிலே மேய்ப்பர்களாக பணியாற்றுவதை விலக்குகிறது. மேய்ப்பர்கள் என்பது ஆண்களுக்குப் பிரசங்கிப்பதையும், போதிப்பதையும், ஆண்கள்மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதையும் உள்ளடக்கும்.

பெண்கள் போதக ஊழியத்தில் ஈடுபடுவதைக் குறித்தான இந்தக் கண்ணோட்டத்திற்க்கு பல ஆட்சேபனைகள் கூறப்படுகின்றன. ஒரு பொதுவான ஆட்சேபனை என்னவென்றால் முதாலாம் நூற்றாண்டிலே பெண்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்தார்கள், ஆகையால் பவுல் அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார் என்பதாகும். ஆனாலும் 1 தீமோத்தேயு 2:13-14 -ல் படிப்பறிவைக் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. படிப்பறிவு ஊழியத்திற்கு ஒரு தகுதியாய் இருக்குமேயானால், இயேசுவின் சீடர்களில் பெரும்பாலோனோர் தகுதி பெற்றிருக்க முடியாது. பொதுவாக சொல்லப்படும் இரண்டாவது ஆட்சேபனை என்னவென்றால், பவுல் எபேசுவிலுள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாட்டை விதிக்கிறார் என்பதாகும் (1 தீமோத்தேயு எபேசுவிலிருந்த சபைக்கு மேய்ப்பராயிருந்த தீமோத்தேயுவிற்கு எழுதப்பட்டதாகும்). எபேசு பட்டணம் ஆர்த்திமிஸ் என்ற தேவதையின் கோயிலுக்குப் பேர்பெற்றதாகும். ஆர்த்திமிஸ்ஸின் வழிபாட்டிலே பெண்களே பொறுப்பும் அதிகாரமும் பெற்றிருந்தனர். ஆனாலும் 1 தீமோத்தேயுக்கான நிருபம் ஆர்த்திமிஸ்ஸைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதில்லை. பவுலும் ஆர்த்திமிஸ் தேவதையினுடைய வழிபாட்டை கட்டுப்பாடுகளுக்கான காரணமாக 1 தீமோத்தேயு2:11-12 –ல் குறிப்பிடுவதில்லை

பொதுவாகக் கூறப்படும் மூன்றாவது ஆட்சேபனை என்னவெனில், பவுல் புருஷர்களையும் (கணவர்களையும்) மனைவியரையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறாரே தவிர, பொதுவாக ஆண்களையும் பெண்களையும் சேர்த்து குறிப்பிடவில்லை என்பதாகும். இப்பகுதியில் உள்ள கிரேக்கச் சொற்கள் கணவர்களையும் மனைவியரையும் குறிப்பிடலாம் என்கிறபோதிலும், இவ்வார்த்தைகளின் முதன்மைப் பொருள் ஆண்களையும் பெண்களையுமே குறிக்கிறது. மேலும் இதே சொற்கள் 8 முதல்10 வரை உள்ள வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8ஆவது வசனத்தில் சொல்லப்பட்டபடி கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டியது கணவர்கள் (புருஷர்கள்) மட்டும்தானா? தகுதியான வஸ்திரத்தினாலும், நற்கிரியைகளினாலும் தேவனை ஆராதிக்க வேண்டியது பெண்கள் (ஸ்திரீகள்) மட்டும்தானா? அப்படி இல்லை. 8 முதல் 10 வரை உள்ள வசனங்கள் கணவரையும் மனைவியரையும் மட்டுமல்ல அனைத்து ஆண்களையும் பெண்களையும் குறிக்கிறது. 11 முதல் 14 வரையுள்ள வசனங்களில் கணவரையும் மனைவியரையும் மட்டும் குறிக்கிறது என்று சொல்வதற்கான சூழ்நிலைக்காரணங்கள் ஒன்றுமில்லை.

போதக ஊழியத்தில் பெண்கள் ஈடுபடுவதை பற்றிய இந்த கருத்துக்கு மற்றொரு ஆட்சேபனை என்னவெனில், வேதாகமத்தில் தலைமை பதவி பெற்றிருந்த பெண்கள், குறிப்பாக பழைய ஏற்பாட்டின் மிரியாம், தெபொராள், ஹுல்தாள் போன்றவர்களின் எடுத்துக்காட்டாகும். இந்த மறுப்பு சில முக்கியமான காரணங்களை கவனத்தில் கொள்வதில்லை. முதலாவதாக, இருந்த 13 நியாயாதிபதிகளில் தெபொராள் மாத்திரமே பெண் நியாயாதிபதி. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல டஜன் தீர்க்கதரிசிகளில் ஹுல்தாள் ஒருத்தி மாத்திரமே ஒரே பெண் தீர்க்கதரிசி. மிரியாமுக்கும் தலைமைப் பதவிக்கும் உள்ள ஒரே சம்பந்தம் அவள் மோசே ஆரோன் என்பவர்களின் சகோதரி எனப்படுவதே. அத்தாலியா, யெசெபெல் என்று ராஜாக்களின் காலத்தில் இருந்த இரண்டு முக்கியமான பெண்களை தேவனுக்கேற்ற பெண் தலைவர்கள் என்று சற்றேனும் கருதமுடியாது. இன்னும் சொல்லப்போனால், பழைய ஏற்பாட்டில் பெண்களின் அதிகாரம் என்பது ஒரு தேவையில்லாத கருத்து. கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபைக்கு 1 தீமோத்தேயு மற்றும் இதர சபை கண்காணிப்பு பற்றிய நிருபங்கள் ஒரு புதிய கோட்பாட்டுக் கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன. அது இஸ்ரவேல் ராஜ்ஜியத்திற்கோ, பழைய ஏற்பாட்டு அமைப்புக்கோ அல்லாமல் சபைக்கு அதிகார கட்டமைப்பை பற்றியது.

புதிய ஏற்பாட்டில் பிரிஸ்கில்லாள் மற்றும் பெபேயாள் போன்றவர்களை வைத்தும் இது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிர்ஸ்கில்லாளும் ஆக்கில்லாளும் கிறிஸ்துவுக்காக உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருந்தார்கள் என அப்போஸ்தலர் நடபடிகள் 18 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பிரிஸ்கில்லாளின் பெயர் அவள் கணவரின் பெயருக்கு முன்னரே வருவது அவளது முக்கியத்துவத்தைக் குறிப்பதற்காக இருக்கலாம். ஆனாலும் 1 தீமோத்தேயு 2:11-14ல் கூறப்படுவதற்கு முரண்பாடான ஊழிய காரியத்தில் பிரிஸ்கில்லாள் ஈடுபட்டதாக எங்கும் விவரிக்கப்படவில்லை. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாளும் அப்பொல்லோவை தங்கள் வீட்டினுள் சேர்த்து கர்த்தருடைய வார்த்தையை போதித்து அவனை சீஷத்துவத்துக்குள் நடத்தினார்கள் (அப்போஸ்தலர் 18:26).

ரோமர் 16:1 –ல் பெபேயாள் உதவிக்காரர் என்று கருதப்படும் பொழுதுகூட அது சபையிலே பெபேயாள் ஒரு போதகர் என்று குறிப்பதாயில்லை. “போதக சமர்த்தன்” என்பது மூப்பர்களுக்காக கொடுக்கப்பட்ட தகுதியேயன்றி உதவிக்காரருக்குக் கொடுக்கப்பட்டதல்ல (1 தீமோத்தேயு 3:1-13; தீத்து 1:6-9). மூப்பர்கள்/கண்காணிப்பாளர்கள்/உதவிக்காரர் இவர்களைப் பற்றி “ஒரே மனைவியுடைய புருஷனும்”, “பிள்ளைகள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் கீழ்ப்படியப்பண்ணுகிறவர்களும்”, “மதிக்கப்படத்தக்கவர்களாயும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா தகுதிகளுமே தெளிவாக ஆண்களையே குறிக்கிறது. இதோடு கூட மூப்பர்கள்/கண்காணிப்பாளர்கள்/உதவிக்காரர் பற்றிக் குறிப்பிட 1 தீமோத்தேயு 3:1-13-லும் தீத்து 1:6-9-லும் ஆண்பால் துணைப்பெயர்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன.

1 தீமோத்தேயு 2:11-14வின் கட்டமைப்பு ஏன் பெண்கள் மேய்ப்பர்களாக இருக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகிறது. 13ஆம் வசனம் “என்னத்திலானெனில்” என்று ஆரம்பித்து 11-12ஆம் வசனங்களில் பவுலின் கூற்றுக்கான காரணங்களைக் குறிப்பிடுகிறது. எதனால் பெண்கள் போதிக்கவோ, ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது? ஏனென்றால் “முதலில் ஆதாம் படைக்கப்பட்டான், பின்பு ஏவாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள்.” தேவன் ஆதாமை முதலாவதாக படைத்தபின்பு ஏவாளை ஆதாமுக்குத் “துணையாகப்” படைத்தார். படைப்பின் இந்த வரிசையமைப்பு குடும்பங்களுக்கும் (எபேசியர் 5:22-23) சபைக்கும் பொதுவாகப் பொருந்தும்.

1 தீமோ. 2:14ல் ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் என்பது பெண்கள் சபைமேய்ப்பர்களாக பொறுப்பேற்கவோ ஆண்களின் மீது அதிகாரம் செலுத்தவோ கூடாது என்பதற்கும் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் விரைவில் வஞ்சிக்கப்படுபவர்கள் ஆகவே அவர்கள் போதிக்கக்கூடாது என்று சிலரை நம்பவைக்கிறது. இது விவாதத்திற்குரிய கருத்து. பெண்கள் விரைவில் வஞ்சிக்கப்படுபவர்கள் என்றால் குழந்தைகளுக்கும் (விரைவில் வஞ்சிக்கப்படக்கூடியவர்கள்) பெண்களுக்கும் (மிக விரைவில் வஞ்சிக்கப்படக்கூடியவர்கள்) அவர்களை ஏன் போதிக்க அனுமதிக்க வேண்டும். எழுதப்பட்டது இப்படிக் கூறவில்லை. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் என்பதால் பெண்கள் ஆண்களுக்குப் போதிக்கவோ ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது. இதன் காரணமாக, சபையிலே போதிப்பதற்கான முதன்மையிடத்தை கர்த்தர் ஆண்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார்.

பல பெண்கள் விருந்தோம்பல், இரக்கம், போதனை, பணிவிடை ஆகிய வரங்களில் சிறந்து விளங்குகின்றனர். உள்ளூர் சபையின் பெரும்பாலான ஊழியம் பெண்களைச் சார்ந்துள்ளது. சபையிலே ஆண்களின் மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே பெண்கள் தடைசெய்யப்படுகின்றனர், பொது இடத்தில் ஜெபிப்பதற்கோ, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கோ அல்ல (1 கொரிந்தியர் 11:5). பரிசுத்த ஆவியின் வரங்களை உபயோகிப்பதற்கு வேதாகமம் எங்கும் தடைசெய்வதில்லை (1 கொரிந்தியர் 12). மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கும், ஆவியின் கனியை நிரூபித்துக் காண்பிப்பதற்கும் (கலாத்தியர் 5:22-23), இழந்துபோனவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும் (மத்தேயு28:18-20; அப்போஸ்தலர் நடபடிகள்1:8-1; 1 பேதுரு3:15) ஆண்களைப் போலவே பெண்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சபையிலே ஆவிக்குரிய போதிக்கும் அதிகாரத்தை கர்த்தர் ஆண்களை மட்டுமே வழங்கி அந்த பதவிகளில் சேவைசெய்ய பிரதிஷ்டை செய்துள்ளார். இது ஆண்கள் போதிப்பதில் சிறந்தவர்கள் அல்லது பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்லது அறிவில் குறைந்தவர்கள் (இது உண்மையல்ல) என்பதால் அல்ல. சபை அந்த கட்டமைப்போடு செயல்பட வேண்டும் என்று கர்த்தர் வடிவமைத்த ஒரு வழிதான் இது. தங்களுடைய வாழ்க்கையின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் ஆண்களே ஆவிக்குரிய தலைமைக்கு ஒரு மாதிரி அமைக்க வேண்டும். சற்றே குறைவான அதிகாரமுள்ள பாத்திரங்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மற்ற பெண்களுக்கு போதிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள் (தீத்து 2:3-5). பெண்கள் குழந்தைகளுக்குப் போதிப்பதையும் வேதாகமம் தடைசெய்வதில்லை. ஆண்களுக்குப் போதிப்பதற்கும் அவர்கள் மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதற்கும் மட்டுமே பெண்கள் தடைசெய்யப்பட்டுள்ளார்கள். இது தர்க்கரீதியாக மேய்ப்பர்களாகவும் பிரசங்கிகளாகவும் பணியாற்றுவதிலிதிலிருந்து பெண்களை விலக்கிவைக்கிறது. இது பெண்களை எவ்விதத்திலும் மதிப்பில் குறைந்தவர்களாக்கவில்லை, மாறாக் இது அவர்களுக்கு தேவனுடைய ஊழியத்தின் பங்கில் அவருடைய திட்டத்திற்கும் அவர் அவர்களுக்கு அருளும் வரங்களுக்கும் ஏற்ற நோக்கத்தைக் கொடுக்கிறது.

English



முகப்பு பக்கம்

பெண் சபை மேய்ப்பர்கள் / பிரசங்கியார்கள்? ஊழியத்தில் உள்ள பெண்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries