settings icon
share icon
கேள்வி

நான் எப்படி ஒரு கள்ளப்போதகரை / கள்ளத்தீக்கத்தரிசியை அடையாளம் கண்டு கொள்வது?

பதில்


“கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று இயேசு நம்மை எச்சரித்திருக்கிறார் (மத்தேயு 24:23-27; 2 பேதுரு 3:3; மற்றும் யூதா 17-18). பொய்யானவைகள் மற்றும் கள்ளப்போதகர்களுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்வதற்கு சிறந்த வழி நாம் சத்தியத்தை அறிந்து கொள்வதேயாகும். ஒரு போலியைக் கண்டுபிடிக்க சரியானது எது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விசுவாசி சரியாக சத்திய வசனத்தைக் கையாளுகிறானோ (2தீமத்தேயு 2:15) மற்றும் வேதாகமத்தைக் கருத்தாக தியானிக்கிறானோ அவனால் மட்டுமே தவறான உபதேசத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். உதாரணம் மத்தேயு 3:16-17 வரையிலுள்ள வசனங்களில் சொல்லப்பட்ட பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டை வாசித்திருக்கும் ஒரு விசுவாசி திரித்துவத்தை மறுதலிக்கும் எந்த போதகத்தையும் உடனடியாக கேள்வி கேட்பான். எனவே முதலாவது நாம் வேதத்தை தியானிக்க வேண்டும் மற்றும் வேதாகமத்தின்படி எல்லா போதனைகளையும் நிதானிக்க வேண்டும்.

“மரமானது அதன் கனியினால் அறியப்படும்” என்று இயேசு சொன்னார் (மத்தேயு 12:33). கனியை பார்க்கிறபோது அவன் அல்லது அவளுடைய போதனை துல்லியமானதா என்பதை கண்டறிய இங்கு மூன்று குறிப்பிட்ட சோதனைகள் இருக்கிறது:

1) இந்த போதகர் இயேசுவைப் பற்றி என்ன சொல்லுகிறார்? மத்தேயு 16:15-16ல் இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்”. இந்த பதிலுக்காக பேதுரு “பாக்கியவான்” என்று அழைக்கப்பட்டான். 2 யோவான் 9-ல், “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்” என்று வாசிக்கிறோம். மேலும் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய மீட்பின் ஊழியம் இந்த இரண்டும் எல்லாவற்றைப் பார்க்கிலும் மிக முக்கியமானது, கிறிஸ்து தேவனுக்கு சமமானவர் என்பதை மறுதலிக்கிறவர்கள், அவருடைய சிலுவையின் தியாகமரணத்தை குறைத்து மதிப்பிடுபவர்கள், அல்லது கிறிஸ்துவினுடைய மனித தன்மையை மறுதலிப்பவர்களுக்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். 1 யோவான் 2:22 சொல்லுகிறது, “இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.”

2) இந்த போதகர் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறாரா? சுவிசேஷம் என்பது இயேசுவின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவைகள் வேதவாக்கியங்களின்படியே நடந்தேறியது என வரையறுக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 15:1-4). “தேவன் உன்னை நேசிக்கிறார்,” “பசியாக இருப்பவர்களுக்கு நாம் உணவளிக்க தேவன் விரும்புகிறார்,” மற்றும் “தேவன் நீ செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்” போன்ற வாக்கியங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இது முழுமையான சுவிசேஷ செய்தி அல்ல. பவுல் கலாத்தியர் 1:7ல் எச்சரிப்பது போல “சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்கள்.” தேவன் நமக்கு கொடுத்த செய்தியை மாற்ற பெரிய போதகர் உட்பட ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது. “நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” (கலாத்தியர் 1:9).

3) இந்த போதகரிடத்திலிருந்து வெளிப்படும் குணாதிசயங்களின் தன்மைகள் தேவனை மகிமைப்படுத்துகிறதா? கள்ளப்போதகர்களைக் குறித்து யூதா 11ல் இப்படியாக சொல்லுகிறார், “இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.” இந்த வசனத்தின்படி கள்ளப்போதகர்கள் அவர்களுடைய பெருமையினால் (காயினை தேவன் புறக்கணிப்பதற்கான காரணம்), பேராசையினால் (பிலேயாம் காசுக்காக தீர்க்கதரிசனம் சொன்னான்) மற்றும் கலகத்தினால் (கோரா தன்னை மோசேக்கு மேலாக உயர்த்தினான்) அறியப்படுவார்கள். இயேசு இப்படிப்பட்டவர்களுக்கு கவனமாக இருக்கும்படி சொன்னார் மற்றும் இவர்களுடைய கனியின்படி இவர்களை நாம் அறியலாம் (மத்தேயு 7:20).

இதைக்குறித்து மேலும் அறிய சபைகளில் காணப்பட்ட தவறான உபதேசத்தை குறிப்பாக எதிர்த்து நிற்ப்பதற்காக எழுதப்பட்ட வேதாகமப் புத்தகங்களை ஆய்வு செய்யலாம். குறிப்பாக கலாத்தியர், 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான் மற்றும் யூதா போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யலாம். கள்ள போதகர்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை இனங்கண்டு கொள்வது அநேக நேரங்களில் கடினமான காரியமாயிருக்கிறது. சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான் (2கொரிந்தியர் 11:14), மற்றும் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வார்கள் (2கொரிந்தியர் 11:15). உண்மையை சரியாக அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே நாம் போலி எதுவென்று சரியாக இனங்கண்டு கொள்ள முடியும்.

English



முகப்பு பக்கம்

நான் எப்படி ஒரு கள்ளப்போதகரை / கள்ளத்தீக்கத்தரிசியை அடையாளம் கண்டு கொள்வது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries