settings icon
share icon
கேள்வி

மன்னிப்பு கிடைத்ததா? தேவனிடமிருந்து நான் எவ்வாறு மன்னிப்பைப் பெறுவது?

பதில்


“ஆதலால் சகோதரரே, இயேசுவின் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது” என்று அப்போஸ்தலர் 13:38 எடுத்துரைக்கிறது.

மன்னிப்பு என்றால் என்ன? ஏன் எனக்கு மன்னிப்பு தேவையாயிருக்கிறது?

"மன்னிப்பு" என்னும் சொல்லின் அர்த்தம் கற்பலகையை சுத்தமாக துடைத்தல், மன்னிப்பு, மற்றும் கடனை ரத்து செய்தல் என வருகிறது. நாம் யாருக்கு விரோதமாகவாவது தவறு செய்துவிட்டால், நமக்கு அவரோடு இருக்கிற உறவில் விரிசல் ஏற்பட்டு அதை நாம் இழந்துவிடாதபடிக்கு அல்லது இழந்த உறவை திரும்ப மீட்டு உறவை மேலும் வலுப்படுத்த அவரிடத்தில் மன்னிப்பு கோருகிறோம். அந்த உறவு மீட்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மன்னிப்பை நாடுகிறோம். மன்னிப்பு வழங்கப்படுவது அதை பெறுகிற மனிதன் தகுதியானவராக இருக்கிறார் என்பதற்காக அல்ல. மன்னிப்பை பெறுவதற்கு ஒருவருவருக்கும் தகுதியில்லை. மன்னிப்பு என்பது ஒரு அன்பின் செயல், இரக்கம் மற்றும் கிருபையாகும். மன்னிப்பு என்பது தனக்கு விரோதமாக எந்த காரியம் செய்யப்பட்டு இருந்தாலும் அதை கணக்கில் கொள்ளாமல் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் ஆகும்.

நம் எல்லோருக்கும் தேவனிடத்திலிருந்து மன்னிப்பு தேவையாய் இருக்கிறது என்று வேதாகம் கூறுகிறது. நாம் எல்லாரும் பாவம் செய்திருக்கிறோம். “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” என்று பிரசங்கி 7:20 கூறுகிறது. “நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது” என்று 1 யோவான் 1:8 கூறுகிறது. எல்லா பாவமும் முதன்மையான நிலையில் தேவனுக்கு விரோதமான செயலாகும் (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனுடைய மன்னிப்ப்பு மாபெரும் அவசியமாயிற்று. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால், நாம் நமது நித்தியம் முழுவதும் இந்த பாவங்களின் விளைவுகளை அனுபவிக்கிரவர்களாக இருப்போம் (மத்தேயு 25:46, யோவான் 3: 36) .

மன்னிப்பு - நான் எப்படிப் பெற்றுக்கொள்வது?

அதிர்ஷ்டவசமாக, தேவன் அன்பானவர், இரக்கமுள்ளவர் மற்றும் மன்னிப்பதற்கு அதீத விருப்பமுள்ளவருமாக இருக்கிறார்! “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” 2 பேதுரு 3:9 நமக்கு சொல்லுகிறது. தேவன் நம்மை மன்னிக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார். எனவே நம் மன்னிப்பிற்கான வழியை அவரே ஏற்படுத்தி இருக்கிறார்.

பாவத்திற்குரிய நியாயமான தண்டனை என்றால் அது மரணம் மட்டும்தான். ரோமர் 6:23-ன் முதல் பகுதி "பாவத்தின் சம்பளம் மரணம்" என அறிவிக்கிறது. நம்முடைய பாவங்கள் நிமித்தமாக நாம் சம்பாதித்த சம்பாத்தியம் தான் “நித்திய மரணம்”. தேவன் தமது பரிபூரண திட்டத்தின் பிரகாரம் மனிதனானார் – அவரே இயேசு கிறிஸ்து (யோவான் 1:1, 14). நாம் அடைய இருந்த பாவத்தின் தண்டனையாகிய மரணத்தை இயேசு தம்மேல் எடுத்துக்கொண்டு சிலுவையில் மரித்தார்! “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” என 2 கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது. நாம் அடைய இருந்த பாவத்தின் தண்டனையை இயேசு தாம் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார். தேவன் என்கிற நிலையில் அவரது மரணம் உலகத்திலுள்ள சகல மனுஷருடைய பாவமும் மன்னிக்கப்பட ஏதுவாயிற்று. “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்” என்று 1 யோவான் 2:2 எடுத்துரைக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பாவத்தின் மேலும் மரணத்தின் மேலும் தனக்குண்டாயிருந்த வெற்றியை பறைசாற்றுகிறார் (1 கொரிந்தியர் 15:1-28). தேவனுக்கே துதி உண்டாகட்டும்! இயேசு கிறிஸ்துவினுடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, ரோமர் 6: 23-ன் இரண்டாவது பாதி உண்மையாகியிருக்கிறது, “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."

உங்களுக்கு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? நீங்கள் விட்டு வெளியே வர இயலாத நிலையில் உங்கள் குற்ற உணர்ச்சி உங்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறதா? இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களானால், உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” என்று எபேசியர் 1:7 கூறுகிறது.

நமது பாவக்கடனை எல்லாம் இயேசு நமக்காக கொடுத்து தீர்த்துவிட்டார், ஆகவே நாம் மன்னிக்கப்படுவோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவனிடம் இயேசுவின் மூலமாக உங்களை மன்னிகும்படி கேளுங்கள், இயேசு உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் மரித்தார் என விசுவாசியுங்கள். இந்த அற்புதமான செய்தியை யோவான் 3:16-17 தன்னகத்தே கொண்டுள்ளது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.”

மன்னிப்பு - அது மெய்யாகவே எளிமையானதா?

ஆமாம் அது அவ்வளவு எளிதானது! நீங்கள் உங்கள் கடின உழைப்பின் நிமித்தமாக தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. உங்கள் மன்னிப்புக்குரிய விலைக்கிரயத்தை உங்களால் தேவனிடத்தில் செலுத்த முடியாது. விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நீங்கள் அதை பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு தேவன் அளிக்கும் பாவமன்னிப்பை பெற விரும்பினால், இந்த ஜெபத்தை ஏறெடுங்கள். நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை. கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களுக்கு உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பை கொடுக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற மனிப்பிற்கு நன்றி செலுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். உம்முடைய அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

மன்னிப்பு கிடைத்ததா? தேவனிடமிருந்து நான் எவ்வாறு மன்னிப்பைப் பெறுவது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries